கம்பன் அவன் காதலன்

Vinkmag ad

கம்பன் அவன் காதலன் 9-ஆம் பாகம்

by Abdul Qaiyum

இனிக்கும் இராஜநாயகம் – பாகம் 1

IMG_0015

தணியாத தமிழ்த்தாகம், தன்னிகரில்லா தாய்மொழி மோகம், தலையாய மொழிப்பற்று, தண்டமிழ் ஊற்று, தரமான பேச்சு, தன்னம்பிக்கையுணர்வு இவற்றின் ஒட்டு மொத்த உருவம்தான் தகைசால் பெரியார் நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்கள்.

தீந்தமிழ் இலக்கியத்திற்கு இத்திருமகனார் தீட்டிய நூல்கள் ஒன்றா, இரண்டா? அச்சேறாத எழுத்துக்கள் ஆயிரமுண்டு. நீதித்துறைக்கு தன் முழுமையான பணியையும் அர்ப்பணித்த ஒருவரால் எப்படி இலக்கியப்பணிக்கு இவ்வளவு நேரத்தை ஒதுக்க முடிந்தது என்பதை நினைத்தாலே வியப்பாக இருக்கிறது.

திருக்குறள் விளக்கத்திற்கு திருக்குறள் முனுசாமியைப்போல், சிலம்பதிகார விளக்கத்திற்கு சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யைப்போல், கம்ப ராமாயணம் என்றால் துரிதமாக எல்லோருடைய  நினைவிலும் உதிப்பது  நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களுடைய  பெயர்தான்.

இஸ்லாமிய இலக்கியத்திற்கு அவருடைய பங்களிப்பு எதுவுமே இல்லை என்ற ஒருசிலரது கூற்று சற்றும் பொருந்தாத வாதம் மட்டுமன்று; உண்மைக்கு மாறான கூற்றும் கூட. அவர் எந்த காலத்திலும் தன்னை ஓரு மார்க்க அறிஞராக வெளிக்காட்டிக் கொண்டதில்லை. கம்பனின் எழுத்தாற்றலில் அவர் தன்னைத்தானே இழந்ததென்னவோ உண்மை. அதற்காக அவர் இஸ்லாமியக் கோட்பாடுகளிலிருந்து விலகிப்போய் விட்டார் என்பது அர்த்தமல்ல.

அது இஸ்லாமிய இலக்கியமாக இருந்தாலும் சரி, இந்து சமய நெறியைச் சார்ந்ததாக இருந்தாலும் சரி – நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களுக்கு இலக்கியங்களில்  இருந்தது இணையிலா  ஈடுபாடே அன்றி மதபாகுபாடு கடுகளவும் இருந்தது கிடையாது. மத நல்லிணக்கத்திற்கு உதாரணம் காட்டவேண்டுமெனில் அது இவரைத்தான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

“சீறாப்புராணம்”, “யூசுப்-ஜுலைகா காவியம்”, “இராஜ நாயகம்” போன்ற இலக்கியச் சுவைமிக்க இஸ்லாமியப்  படைப்புகள் அத்தனையும் அவர் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்துள்ளார்.  அந்த அற்புதமான திறனாய்வுகளை கட்டுரைகள்,  நூல்கள்,  சொற்பொழிவு  வாயிலாக தமிழ்க்கூறும் நல்லுலகிற்கு தரமானதாய் வார்த்தும் இருக்கிறார்.

நீதிபதி அவர்களின் உறவுக்காரரான சிங்கையில் வசிக்கும் முகம்மது இஸ்மாயில் அவர்கள்  வாயிலாக “இனிக்கும் இராஜ நாயகம்” நூல் பற்றிய  பற்பல சுவையான விடயங்களை என்னால் திரட்ட முடிந்தது.  நீதிபதியின் அதே பெயரை இவருக்கும் வைத்தது சற்றும் வீண் போகவில்லை போலும். தமிழார்வம் வம்சாவழியாய் இவரது குருதியிலும் இயற்கையாகவே ஊறிப்போயிருந்தது. “கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்” என்பார்களே அது  முற்றிலும் மெய் என்பது வெள்ளிடைமலை.

இப்றாஹிம் நபி மற்றும் இஸ்மாயில் நபி அவர்களின் வாழ்க்கையின் நிகழ்வுகள் சேகுனாப் புலவருக்கு ‘திரமணிமாலை’ என்னும் இலக்கியத்தைப்  படைக்க  காரணமாக இருந்தது.

அதேபோன்று சுலைமான் நபியின் வாழ்க்கை நிகழ்வுகள் வண்ணக் களஞ்சியப் புலவருக்கு ‘இராஜநாயகம்’ என்னும் இலக்கியக் காப்பியம் வடிக்க ஏதுவாயிற்று.

இனிக்கும் இராஜ நாயகம் New

‘இராஜநாயகம்’ என்ற நூலின் ஆய்வுக்கு ‘இனிக்கும் இராஜநாயகம்’ என்ற பெயர் அருமையான தேர்வு. எறும்பு ஓரிடத்தில் ஊறினால் அங்கு இனிக்கும் தின்பண்டம் ஏதாகிலும் இருக்குமென பொருள்.  இனிப்பென்றால் எறும்புக்கும் அப்படியொரு ஈர்ப்பு. ஆரம்ப பாடசாலையில் மனனம் செய்த அழ.வள்ளியப்பாவின் பாடல்தான் சட்டென்று என் நினைவுக்கு வந்தது.

“தேனிருக்கும் இடத்தினைத் தேடி மொய்க்கும் வண்டுபோல்

சீனியுள்ள இடத்தினைத் தேடி ஊரும் எறும்புபோல்”

என்ற வரிகள் பசுமரத்தாணியாய் நெஞ்சில் பதிந்திருந்தது. “இனிக்கும் இராஜநாயக”த்தில் காணப்படும் இலக்கியச் சுவையானது வாசகர்களின் எண்ணத்தை எறும்பாக நுகரச் செய்யும் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை.

எறும்புகளுக்கும் சுலைமான் நபிக்கும் உள்ள பொருத்தத்தை இணைத்து “இராஜநாயகம்” காப்பியத்தின் ஆய்வுக்கு “இனிக்கும் இராஜநாயகம்” என்று பெயர் சூட்டிய மேதாவித்தனத்தை என்னென்று புகழ்வது!  இக்காப்பியத்திற்கும் எறும்புகளுக்கும் உள்ள தொடர்பு என்னவென்பதை பின்னர் நாம் விரிவாக விவாதிப்போம்.

‘இராஜ நாயகமும் பிற படைப்புகளும்’ என்ற தலைப்பில், வண்ணக்களஞ்சியப் புலவரின் ஆக்கங்களை, திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர்,  தமிழ்மாமணி முனைவர் அர. அப்துல் ஜப்பார் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு முனைவர்  பட்டம் பெற்றவர் என்பது இக்காப்பியத்திற்கு கூடுதல் பெருமை சேர்க்கிறது. இவர் திருச்சி பாலக்கரையைச் சேர்ந்தவர். இவரது இந்த நூலாய்வுக்கு உந்துதலாகவும், முன்னோடியாகவும் திகழ்ந்தவர் நம் நீதிபதி அவர்களே என்பதை நாம் எழுத்தில் வடிக்கவும் வேண்டுமோ?

இஸ்லாமிய இலக்கிய வரலாற்றில் “இராஜநாயகம்” என்னும் காப்பியத்திற்கு தனியொரு இடம் உண்டு.  காரணம் இக்காப்பியத்தின் உட்பொருள் தமிழகத்துக்கு அப்பாலும் பரவலாக அறியப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட மூலக்கரு. பைபிளில் இடம் பெற்றுள்ள தாவீதையும், சாலோமனையும்  இவ்வரலாறு  சித்தரிக்கின்றது.

யூதர்கள் மற்றும் கிறித்துவர்களது புனித நூலான விவிலியத்தில் (புனித வேதாகமம், பைபிள்) குறிப்பிடப்பட்டுள்ள ஏராளமான  பெயர்கள் திருக்குர்ஆனிலும் இடம் பெற்றுள்ளதை நாம் காண முடியும்.  பைபிளில் காணும் ‘தாவீது’ என்ற பெயர் தாவூது நபியென்றும், ‘சாலோமோன்’ என்ற பெயர் சுலைமான் நபியென்றும் திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பைபிளில் காணப்படும் எத்தனையோ குட்டிக்கதைகள் பொதுஜனங்களுக்கிடையே ஜனரஞ்சகக் கதைகளாக அறிமுகமாகி இளஞ்சிறார்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. எடுத்துக்காட்டாக “சாலமனும் ஷீபாவும்”, “தாவீதும் கோலியாத்தும்” போன்ற  கதைகள் ஆரம்பப்பள்ளி பாடபுத்தகங்களில் பெரும்பாலானோருக்கு நன்கு அறிமுகமானவையே.

திருமறையில் கூறப்படும் தாவூது நபி, சுலைமான் நபி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் காப்பியம்தான் வண்ணக் களஞ்சியப் புலவர் இயற்றிய “இராஜநாயகம்” என்ற காப்பியம்.

[இந்த வண்ணக்களஞ்சியப் புலவரின் நினைவாகத்தான், அதே பரம்பரையில் வந்ததாக பெருமைபட்டுக் கொள்ளும் கவிஞர் கலைமாமணி நாகூர் சலீம், ஆரம்பக் காலங்களில் தனக்கு “வண்ணதாசன்” என்ற புனைப்பெயர் சூட்டிக் கொண்டார் என்பதை அவரது பேட்டியொன்றில் படிக்க நேர்ந்தது]

நீதிபதி அவர்களின் “இனிக்கும் இராஜநாயகம்” ஆய்வுநூலைப் பற்றி அறிய முற்படுவதற்கு முன், மூலநூலாகிய “இராஜநாயகம்” எழுதிய வண்ணக்களஞ்சிய புலவரைப் பற்றி ஓரளவு அறிந்துக் கொள்வது அவசியம்.

18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வண்ணக்களஞ்சியப் புலவரின் இயற்பெயர் செய்யது ஹமீது இப்ராஹிம் என்பதாகும். வண்ணம் என்னூம் சந்தச் செய்யுள் பாடுவதில் வல்லவரான இவரை வண்ணக்களஞ்சியப் புலவர் என்ற பெயரைச்சூட்டி இவரைச் சிறப்பித்தனர். [‘சொல்லம்பு மகான்’ என்று போற்றப்படும் ஜவ்வாதுப் புலவரும் மற்றும் சேறை கவிராயரும் வண்ணக்கவிகள் பாடுவதில் வல்லவர்களாகத் திகழ்ந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது]. அறம்பாடி அற்புதங்கள் செய்த ஜவ்வாதுப் புலவரும் வண்ணக் களஞ்சியப் புலவரும் சமகாலத்தவராக விளங்கினார்கள் என்பது வரலாறு.

வண்ணக்களஞ்சியப் புலவர் மீசல் என்னும் ஊரில் பிறந்தார். அவர்  நாகூருக்கு அருகாமையில் உள்ள பொறையார் என்ற ஊரில் வாழ்ந்து வந்த பதாயி மரைக்காயர் என்ற செல்வந்தரின் மகளை மணமுடித்துக் கொண்ட இவர் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை நாகூரிலேயே கழித்தார்.  இவர் நாகூராராகவே அறியப்பட்டார். ‘புலவர் கோட்டை’ என்றழைக்கப்பட்ட நாகூரில் செயலாற்றிய புலவர்கள் சபை இவருக்கு “வண்ணக்களஞ்சியப் புலவர்” என்ற சிறப்பு பட்டத்தை அளித்து கெளரவித்தது.

அதுமட்டுமின்றி,  தஞ்சையை ஆண்ட அரசர், இவரது புலமையைப் போற்றி “சிங்கமுகப் பொற்சிவிகை” என்ற விருதை அளித்து இவருக்கு மேன்மை அளித்தார்.  தமிழ் மற்றும் வடமொழியைக் கற்றுத் தேர்ந்தவர் வண்ணக் களஞ்சியப் புலவர்.   இவர் மதுரையில் அமைந்த ஆதீன மடத்தின் தலைவரிடம் தமிழ், வடமொழி ஆகியவற்றைக் கற்றதாக  நாம் அறிய முடிகிறது.

புதுமையான பல வார்த்தைகளை தமிழ் மொழிக்கு பங்களிப்புச் செய்தவர் வண்ணக் களஞ்சியப் புலவர். கணவன் என்னும் சொல்லின் பெண்பாலாகக்  மனைவி என்ற சொல்லைத்தான் நாமெல்லோரும் பயன்படுத்துவோம், கணவனுக்கு பெண்பாலாக “கணவி” என்ற ஓர் அற்புதமான வார்த்தையை அறிமுகம் செய்தவர் இவர்.

நாமே இஸ்லாத்தை தமிழாக்கியவர்கள்

தமிழை இஸ்லாமாகியவர்கள்

மக்கா அரபிக்கு

மங்கைத் தமிழை

நிக்காஹ் முடித்தவர்கள்

சும்மா  முடிக்கவில்லை

ஈராயிரம் மஹராய்  ஈந்தே

மணமுடித்தோம்

என்று இஸ்லாமியப் புலவர்கள் தமிழ் மொழிக்களித்த பங்களிப்பினை மார்தட்டி முழங்குகிறார் கவிக்கோ அப்துல் ரகுமானவர்கள்.  மேலும் அவர் கூறுவதைக் கேளுங்கள்.

நாமோ

பாவலர் உமரின்

பரம்பரையில் வந்தவர்கள்

சேகுனாப் புலவரின்

செல்லக் குழந்தைகள்

பீரப்பாவின் பேரப்பிள்ளைகள்

காசிம் புலவரின்

கால்வழித் தோன்றல்கள்

வண்ணக் களஞ்சிய

வாரிசானவர்

குலாம் காதிரின்

குலக் கொழுந்துகள்

செய்குத் தம்பியின்

சின்னத் தம்பிகள்

என்று தமிழ் வளர்த்த நம் பாரம்பரியத்தை பெருமைபட கூறுகின்றார்.

கிஸ்ஸா, முனாஜாத்து, நாமா, படைப்போர், மசாலா, மாலை, கண்ணி, திருமண வாழ்த்து, நொண்டி நாடகம் என பல்வேறு வடிவத்தை தமிழுக்கு வார்த்தவர்கள் நம் புலவர்கள்.

சிறந்த இலக்கியப் பயிற்சியும், சீரிய மார்க்கப்பற்றும்,  தேர்ந்த கல்வி ஞானமும், தெளிவான  கற்பனை வளமும் கொண்டிருந்தவர் வண்ணக் களஞ்சியப் புலவர். தன் அபாரப்புலமையை  “இராஜநாயகம்” நூலிலே உரிய இடங்களில் முறையே பயன்படுத்தியுள்ளதை நாம் படித்து இன்புற முடிகிறது.

இந்நூல் 46 படலங்களையும், 2240 செய்யுட்களையும், கொண்டது. கவிச்சக்கரவர்த்தியின் காப்பியமான கம்ப ராமாயாணத்தைப் போன்று  இதில் காண்டப் பிரிவுகள் கிடையாது. ஆனாலும் காப்பிய இலக்கணங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை அம்சங்களும் பொருந்திய  முழுமை பெற்ற நூலிது. பொருளாலும்,  அமைப்பாலும் சிறந்து விளங்கும் அரும்பெருங்காப்பியம். அருந்தமிழ் ஆய்வாளர்களால் வானளாவ போற்றப்படும் வண்ணக் காவியம் இது.

இக்காப்பியத்திற்கு “இராஜ நாயகம்” என ஏன் பெயர் சூட்டப்பட்டது என்பதற்கு காரணம் உண்டு. “நாயகம்” என்றால் தலைவன் என்று பொருள்.  இராஜநாயகம்  என்றால் மன்னர்களுக்கெல்லாம் மன்னர் – மாமன்னர் என்று பொருள். அரசபெருமக்களுக்கெல்லாம் தலைவராகத் திகழ்ந்தவர் சுலைமான் நபி.  எனவேதான் பொருத்தமான  இப் பெயரை இக்காப்பியத்திற்கு புலவர் வழங்கியுள்ளார்.

கன்னித்தமிழில் “கம்ப ராமாயணம்”  படைத்த  கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஆகட்டும் அல்லது சிந்தை அள்ளும்  “சிலப்பதிகாரம்” தந்த இளங்கோ அடிகள்  ஆகட்டும் இவர்கள் அனைவரும் ஒரே ஒரு காப்பியம்தான் ஒண்டமிழுக்கு உவந்தளித்துள்ளார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட காப்பியங்களை இயற்றி தமிழுக்கு தன்னிகரில்லா மகுடம் சூட்டிய பெருமை மூன்று முஸ்லிம் புலவர்களைச் சாரும்.

ஷேகுனாப் புலவர் நான்கு காப்பியங்களும், மஹாவித்வான் வா.குலாம் காதிறு நாவலர் மூன்று காப்பியங்களும், வண்ணக்களஞ்சியப் புலவர் மூன்று காப்பியங்களும் தமிழுக்களித்து தமிழ்மொழிக்கும்,  இஸ்லாமியச் சமூகத்திற்கும் தன்னிகரில்லா பெருமை தேடித் தந்துள்ளனர்.

“இராஜநாயகம்”, “குத்புநாயகம்” மற்றும் “தீன்விளக்கம்” ஆகிய மூன்று காப்பியங்களை வண்ணக் களஞ்சியப் புலவர் மணித்தமிழுக்கு அளித்து மகத்தான தொண்டாற்றியிருக்கிறார்.

இவர்களில் மஹாவித்துவான் வா.குலாம் காதிறு நாவலர், வண்ணக் களஞ்சியப் புலவர் – இந்த இரண்டு புலவர்களுமே நாகூர் மண்ணுக்கு சொந்தக்காரர்கள் என்பது நாகூரில் பிறந்த ஒவ்வொருவரும் நெஞ்சை நிமிர்த்தி பெருமிதம் கொள்ள வேண்டிய விடயம்.  ’நாகூர்  இல்லாமல் இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாறு இல்லை’ எனக்கூறும் ஜே.எம்.சாலி அவர்களிள், கூற்று பொருள் பொதிந்தது. இவர் புகழ்பெற்ர எழுத்தாளர். 60-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாவல்களை தமிழுக்கு வழங்கிய பெருமைக்குரியவர்.

தமிழ்க்காப்பியங்களில் சமணர்களால் எழுதப்பட்ட காப்பியங்களே மிகுதி என்று டாக்டர் தா.வே.வீராசாமி என்னும் அறிஞர் குறிப்பிடுகிறார்.  ஆனால் இக்கூற்று உண்மைக்குப் புறம்பானதாகும். சமணர்கள் சீவகசிந்தாமணி, வளையாபதி, பெருங்கதை என்னும் மூன்று பெருங்காப்பியங்களையும், சூளாமணி,  நீலகேசி,  யசோதர காவியம், நாககுமார காவியம், உதயணகுமார காவியம் என்னும் ஐஞ்சிறு காப்பியங்களையும் மட்டுமே பாடியுள்ளனர்.  ஆக மொத்தம், அருந்தமிழுக்கு இவர்கள் அர்ப்பணித்தது வெறும் எட்டு காப்பியங்களே.

ஆனால் இஸ்லாமியப் புலவர்கள் எந்தமிழுக்கு இயற்றித் தந்ததோ இருபதுக்கும் மேற்பட்ட காப்பியங்கள் என்கிறார் “தமிழ் இலக்கிய வரலாற்றில் இஸ்லாமியர் காலம்” என்ற நூலைத் தந்த கலைமாமணி பேராசிரியர் காரை மு. சாயபு மரைக்காயர் அவர்கள் உமறுப்புலவரையடுத்து, சேகனாப் புலவர், வண்ணக்களஞ்சியப் புலவர், காசிம் புலவர், சர்க்கரைப் புலவர், சவ்வாது, பத்ருத்தீன் புலவர் என்று தமிழுக்கு தொண்டாற்றியவர்களை வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.

ஈழத்து தமிழறிஞர் காலநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள் இஸ்லாமிய இலக்கியம் பற்றிய ஆராய்ச்சியில் பின்வரும் கருத்துக்களை முன்வைக்கின்றார். “இஸ்லாமிய இலக்கியம் கலை, கலைக்காகவே என்ற குறுகிய வரம்பிற்குட்பட்ட இலக்கியமன்று. அது ஒரு மகத்தான இலட்சியத்தை வரித்துக்கொண்ட இலக்கியமாகும். அது ஓர் உன்னதமான நோக்கமும் உயர்ந்த குறிக்கோளும் உடையதாகும். இஸ்லாமிய இலக்கியம் வெறும் இலக்கிய ரசனையையும் கலையின்பத்தையும் நோக்கமாகக் கொண்டதன்று. அது ஓர் உயர்ந்த இலட்சியத்தை அடைவதற்கான துணைச்சாதனமாகும். இறை நம்பிக்கை, மறுமை நம்பிக்கை ஆகியவற்றை மனிதனின் உள்ளத்தில் தோற்றுவித்து உயர்ந்த உன்னதமான படைப்புக்களை அவனில் வளர்ப்பதே அதன் இலட்சியமாகும்”  என்று பகர்கிறார்.

“இந்திய மொழிகளிலேயே தமிழுக்கு மிக முக்கியமான சிறப்பம்சம் ஒன்று உண்டு. முழுமையான பெளத்த காவியமும் [மணிமேகலை], இஸ்லாமிய காவியமும் [சீறாப்புராணம்] உள்ள ஒரே மொழி தமிழ் தான்” என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

நானறிந்தவரையில் 1885-ஆம் ஆண்டில் இலங்கையின் மூத்த முஸ்லிம் அறிஞரான எம். சி. சித்தி லெவ்பை அவர்களின் கைவண்ணத்தில் மிளிர்ந்த ‘அசன்பேயுடை கதை’ என்னும் நாவல்தான் தமிழ்மொழியில் முதன்முதலாக பிறந்த நாவல். எகிப்து நாட்டின் அரச குமரன் அசன்பேயின் நிகழ்ச்சியின் ஊடாக இஸ்லாமிய கலாச்சாரத்தின் பெருமைகளையும், அவனது வீரதீர சாகசங்களையும் விவரிக்கும் சரித்திரம் இது.

இதில் வேடிக்கை என்னவென்றால் 1895-இல் வெளியிடப்பட்ட திருகோணமலை த. சரவணமுத்துப்பிள்ளை எழுதிய “மோகனாங்கி” தமிழ்மொழியின்  முதல் நாவல் என்று சிலரும், 1879-இல் வெளிவந்த மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் எழுதப்பட்ட “பிரதாப முதலியார் சரித்திரம்”தான் தமிழ்மொழியின் முதல்நாவல் என்று வேறு சில வரலாற்றாசிரியர்களும் எழுதி வருகின்றனர். ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்களை இஸ்லாமியத் தமிழறிஞர்கள் கடந்த 400 ஆண்டுகளில் படைத்துள்ளார்கள்.  16-ஆம் நூற்றாண்டிற்கும், 19-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தை “”இஸ்லாமியர் காலம்”  என்று குறிப்பிடத்தகும். முஸ்லிம்கள் தமிழ்த் தொண்டு புரிந்ததில் எவருக்கும் பின்னிட்டவர்கள் அல்லர் என்கிறார் பாலூர் கண்ணப்ப முதலியார். (தமிழ் நூல் வரலாறு, பக்கம் 385)

சைவமும், வைணவமும், சமணமும், பெளத்தமும், கிறித்தவமும் போன்றே இஸ்லாமும் இன்பத் தமிழுக்கு மெருகூட்டி வளப்படுத்தி உள்ளது.

நாகூர் என்றாலே ஆன்மீக சுற்றுலாதளம் என்ற வகையில்தான் பரவலாக எல்லோராலும் அறியப்படுகிறது. அது இயல், இசை. நாடகம் என மூன்று தமிழுக்கும் பிறப்பிடமாகத் திகழ்ந்த முத்தமிழ்ச் சுரங்கம் என அறிந்து வைத்திருப்பவர்கள் மிகமிகக் குறைவு. நாகூர் மண் ஆன்மீகத்தை மட்டும் போற்றி வளர்க்கவில்லை, அருந்தமிழையும் அதே சமயம் அலைகடலுக்கப்பால் அளப்பரிய வாணிபத்தையும் ஒருசேர வளர்த்தது என்பது வரலாறு புகட்டும்  பாடம். சொந்தமாக கப்பல் வைத்து திரைகடலோடி திரவியம் தேடிய பெரும் வணிகர்கள் வாழ்ந்த பிரதேசம் இது. இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் இம்மூன்றையும் போற்றி வளர்த்த ஊர் இது.

மேலும், பத்திரிக்கைத் தொழிலுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த ஊர் நாகூர். மலாயா நாட்டின் பினாங்கு நகரில் 1888 -இல் வெளிவரத் தொடங்கிய தமிழ் இதழான “‘வித்தியா விசாரிணி” என்ற அங்கு சில காரணங்களால் தடைபட்டபோது அது பின்னர் நாகூரிலிருந்து வெளிவந்தது. அதன் ஆசிரியர் வேரு யாருமல்ல. ‘நான்காம் தமிழ்ச் சங்க நக்கீரர்’ எனச் சிறப்பிக்கப்பட்ட நாகூர் குலாம் காதிறு நாவலர் அவர்களே.  தமிழின் முதல் பெண் நாவலாசிரியை நாகூரைச் சேர்ந்த சித்தி ஜுனைதா பேகம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

“இராஜநாயகம்” காப்பியத்திற்கும் “இனிக்கும் இராஜநாயகம்” ஆய்வு நூலுக்கும் முக்கிய தொடர்பு ஒன்று உண்டு

சுருங்கச் சொன்னால்,  நாகூரில் வாழ்ந்த ஒரு இலக்கியச்சிற்பியின் நூலுக்கு (இராஜநாயகம்), நாகூரில் பிறந்த ஒரு இலக்கிய நேசரின் அர்ப்பணிப்புதான் “இனிக்கும் இராஜநாயகம்” என்ற இந்த ஆய்வு நூல்.

நீதிபதி மு.மு.இஸ்மாயில் அவர்களின் இந்நூலைப் பற்றிய கூடுதல் விவரங்களை நம் அடுத்த பதிவில் விலாவாரியாக அலசுவோம்.

 

IMG_0016நீதிபதி இஸ்மாயீல் அவர்கள் அயல்நாடு சுற்றுப்பிரயாணத்தின்போது

 

[இப்புகைப்படத்தில் இடமிருந்து இரண்டாவதாக நிற்பவர் கவிஞர் இ.எம்.அலி மரைக்காயர்.  1923-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி பிறந்தவர். தந்தையார் பெயர் யூசுப் கனி. தாயார் பெயர் ஆயிஷா நாச்சியார். இவரது குடும்பம் மிகப்பெரிய இலக்கிய பாரம்பரியத்தைக்  கொண்டது.  

‘தேவார மஞ்சரி’, ‘கீர்த்தன மஞ்சரி’ ‘புகழ்ப்பா மஞ்சரி’ மற்றும் ‘லால்கெளஹர்’ எனும் நாடகம் ஆகியவற்றை எழுதிய பெரும்புலவர் முகம்மது நெயினார் மரைக்காயர் இவரது பாட்டனார். சிறந்த இசைஞானம் கொண்டவர். பெரும்புலவரின் படைப்புகள் தமிழக அரசால் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.  ‘லால் கெளஹர் நாடகம் நாகூர் மற்றும் சுற்று வட்டார பிரதேசங்களில் மேடை நாடகமாக அரங்கேற்றப்பட்டு மக்களின் பேராதரவையும், ஏகோபித்த பாராட்டுதலையும் பெற்றது.  நாடக நூலினை காரைக்கால் முகம்மது சமதானி அச்சகத்தில் முதற்முதலாக பதிப்பித்தவர் நாகூர் வா.குலாம் காதிறு நாவலர் அவர்கள். இரண்டாம் பதிப்பு 1901-ஆம் ஆண்டு இட்டா பார்த்தசாரதி அச்சகத்திலும், மூன்றாம் பதிப்பு 1990-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கீழக்கரையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டிலும் வெளியிடப்பட்டது.

கவிஞர் இ.எம்.அலியின் முப்பாட்டனார் முத்தமிழ் வித்தகர் நெ.மாதறு சாகிப் அவர்கள்.

இவரது குடும்பத்தில் அனைத்து சகோதரர்களும் தமிழார்வலர்கள். தமிழ் மொழியில் அபார ஆற்றல் படைத்தவர்கள். இவரது மற்றொரு சகோதரர் சிங்கையில் புகழ்பெற்று விளங்கிய கவிஞர் இ.எம்.நெயினார் மரைக்காயர் அவர்கள். கவிஞர் இ.எம்.நெயினார் அவர்கள் 1000-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாமின் ‘ரூபய்யாத்’  கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

இ.எம்.அலி அவர்கள் ஐநூறுக்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பாடல்கள் எழுதியுள்ளார். இசைமுரசு நாகூர் இ.எ,ஹனீபா அவர்கள் பாடிய “வானம் இருண்டு கிடந்தது”, “இன்னும் என்ன செய்யப் போறீங்க” (1940) போன்ற பாடல்கள் இவர் எழுதியதே.]

கம்பன் அவன் காதலன் – 8-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 6-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 5-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 4-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 3-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 2-ஆம் பாகம்

கம்பன் அவன் காதலன் – 1-ஆம் பாகம்

எழுதிய நூல்கள்

வாழ்க்கைக் குறிப்பு

பிறர் பார்வையில்

ஜெயமோகன் பார்வையில் 

தந்தை பெரியாரைப் பற்றி

கவிஞர் வாலியின் பார்வையில்

இராம வீரப்பன் பார்வையில்

டாக்டர் சுதா சேஷய்யன் பார்வையில்

ப.சிதம்பரம் பார்வையில்

News

Read Previous

தண்ணீர் இணைப்பு பெற முடியாமல் தவிக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி

Read Next

காகிதம் காப்போம்!

Leave a Reply

Your email address will not be published.