அதிகரித்து வரும் பாலியல் வன்முறை – சிறப்பு பார்வை

Vinkmag ad
பாலியல் வன்முறை:
எது பாலியல் வன்முறை ? கட்டிய மனைவி ஆயினும் விருப்பமின்றி அப்பெண்ணை தனது இச்சைக்கு வற்புறுத்தி புணர்வது பாலியல் வன்முறை தான். வாழ்வின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் மனைவியுடனான வல்லுறவே பாலியல் வன்முறை எனும் பொழுது பிற பெண்களுக்கான நியதிகள் இன்னும் சற்று கடுமையாகத் தானே இருக்கும். ஆம். மனைவியைத் தவிர்த்து பிற பெண்களிடம், அது தான்  பெற்ற மகளே ஆயினும் குறிப்பிட்ட வயதுக்கு மேல், அவர்களின் அனுமதியின்றி (சில சமயம் அனுமதியுடனோ ) தொட்டு பேசுதலும் பாலியல் வன்முறையே.
உண்மையில் பாலியல் வன்முறை அதிகரித்து இருக்கிறதா: ஆம்/இல்லை.
என்ன! பதில் இரண்டில் ஒன்றாக இல்லாமல் குழப்பமானதாக இருக்கிறதா… மீண்டும் இந்த கேள்விக்கு கடைசியில் வருவோம்.
பாலியல் வன்முறை – வரலாறு
பாலியல் வன்முறை என்பது காலம் காலமாக பெண்கள் மீது நடத்தப்பட்டே வந்திருக்கிறது. தேவரடியாள், பொட்டு கட்டுதல் இவை எல்லாம் பாலியல் வன்முறையின் இன்னொரு வடிவமே. அதனால் பாலியல் வன்முறை ஏதோ நேற்று விதைத்து இன்று முளைத்ததாக கருத வேண்டாம்.
இருந்தாலும், சில பத்து ஆண்டுகளுக்கு முன்னால் அல்லது இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் பாலியல் வன்முறை இல்லை என வாதிடுகிறீர்களா… அன்றைய நாளில் குழந்தைத் திருமணம் என்னும் பெயரில் பாலியல் வன்முறை இருந்ததை மறுக்க முடியுமா. அன்றைய நாளில் ஆணின் சராசரி திருமண வயது பதினைந்து (இது செவி வழி செய்தி மட்டுமே… புள்ளி விவரம் கேட்க வேண்டாம்). இன்று குறைந்தது இருபத்தைந்து அதிகப்படியாக முப்பத்தைந்து ஏன் சிலர் நாற்பதிலும் செய்கிறார்கள்.
என்றால், திருமணம் கால தாமதமாக செய்வது தான் காரணமா என்றால் அதுவும் ஒரு காரணமாக கொள்ள தகுதியானது தான் என்பேன்.
மேலும், இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் பெண்கள் வெளியில் வருவதேன்பதோ, ஆடவருடன் பேசுவது என்பதோ, ஏன் கட்டிய கணவனிடம் எதிர்த்து பேசுவதேன்போ கூட அரிதிலும் அரிது தானே. அன்றைய பாலியல் வன்முறை என்பது உறவுகளுக்குள்ளாக நடந்திருக்கவும், குடும்ப கவுரவம் என்னும் பெயரில் மூடி மறைக்கப்பட்டிருக்கவும் வாய்ப்புகள் உண்டு.
பெண்கள் அதிகம் வெளியில் வராததால் பாலியல் வன்முறை அரிதிலும் அரிதாக அரங்கேறியிருக்கலாம். என்றால், பெண்களை இன்றும் வீட்டில் அடைத்து வைக்கச் சொல்வதாக புரிந்து கொள்ளல் வேண்டாம்.
இங்கு நம்மில் பலர், வாய்ப்பு கிடைக்காததால் உத்தமனாக இருப்பவர்களே அதிகம். வாய்ப்பு கிடைத்தும் உத்தமனாக இருக்கிறான் என்றால் அல்லது இருக்க வேண்டும் என்றால் அதற்கு முக்கிய காரணம் வளர்ப்பு.
தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அக்கா, தம்பி என்னும் உறவுகளுடன் வளர்ந்திருந்தால் இத்தகைய குரூர எண்ணம் அதிகம் வளர வாய்ப்புகள் இருந்திருக்காது.
இன்று பலரும் வளர்வது தனி சிறையில். இந்த சிறையை பொன்னால் ஆக்கப்பட்ட சிறையாகச் செய்வது தொலைகாட்சியின் பொழுது போக்கு அம்சங்களும், திரைப்படங்களும், இணையத்துடன் கூடிய கணினியும்.
இவற்றில் நன்மைகள் பல இருந்தாலும், தனிமை மற்றும் பதின்ம வயதில் எதிர்பாலின் மேல் ஏற்படும் ஈர்ப்பு என்று பலரையும் இழுப்பது பாலியல் ரீதியான காட்சிகள், கதைகள், காணொளிகள்.
சில பத்து ஆண்டுகளுக்கு முன்னால் திரைப்படங்களின் முதலிரவுக் காட்சிகள் மனைவி கணவனுக்கு பால் சோம்பு கொடுப்பதோடு கதவடைப்பதாக காண்பிக்கப்பட்டது. இன்று ???? இது ஒரு உதாரணம்/காரணம் மட்டுமே. இதையே பாலியல் வன்முறைக்கு ஒட்டு மொத்த காரனமாக நான் சொல்லவும் இல்லை.
ஒரு தலைமுறைக்கு முன்னால், அதாவது பெண்கள் பள்ளி கல்லூரிகளுக்கு படிக்கவும், அலுவலகங்களில் வேலைக்குச் செல்லவும் ஆரம்பித்த கால காடங்களில் இருந்ததைக் காட்டிலும் இன்று பாலியல் வன்முறை அதிகரித்து விட்டதா என்றால், இதற்கும் பதில் ஆம்/ இல்லை என்பதே.
முதலில் பெண்கள் தங்களுக்கு நேரிடும் பாலியல் வன்முறையைச் சொன்னால் எங்கு தன்னை பள்ளி கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டில் அடைத்து வைத்து விடுவார்களோ, வேலைக்கு அனுப்பாமல் போய் விடுவார்களோ என்று பயந்தது பெரும்பான்மையான காரணம் என்றால், எங்கே இந்த அவலம் சமூகத்திற்குத் தெரிந்தால் தனது மகளுக்கு திருமணம் நடக்காமல் போய் விடுமோ என பயந்து மூடி மறைத்தது இன்னுமொரு காரணம். அதை விட தங்களது தொலைகாட்சி/பத்திரிகை விளம்பரங்களுக்காக/விற்பனைக்காக, தனது அரசியல் வியாபாரத்திற்காக பாலியல் வன்முறையை ஒரு பகடைக்காயாய் வைத்து பிழைக்கும் நிலைக்கு அன்றைய பத்திரிக்கை தர்மமோ, அரசியல் தர்மமோ தரம் தாழ்ந்து போய் விடவில்லை. ஆனால், இன்று…
ஆக, பாலியல் வன்முறை நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல. பிடுங்கி எறிவதற்கு. காலம் காலமாக வேரூன்றி இப்பொழுது ஆல விருட்சமாக பரந்து விரிந்துள்ளது.
என்றால், பாலியல் வன்முறையின் அளவு அதிகரித்துள்ளதா இல்லையா என்றால், பாலியல் வன்முறையின் விகிதாச்சாரம் அன்றிலிருந்து இன்று வரை ஒரே அளவு தான் மக்கள் தொகையின் விகிதாச்சாரத்தை ஒத்து என்பேன் நான்.
அன்றைய முப்பது கோடியில் மூவாயிரம் காமுகர்கள் எனில் இன்றையை நூற்றி இருபது கோடியில் பனிரெண்டாயிரம் காமுகர்கள்.
என்றால் தடுக்க என்ன தான் வழி:
பெண் குழந்தைகளுக்கு தங்கள் பெற்றோர்கள் மீது நம்பிக்கை வரும் வகையில் பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும்.
குழந்தைகளை அரவணைத்து வளர்க்கும் பாங்கை பெற்றோர்கள் தெரிந்து வைத்த்ருக்க வேண்டும். பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், வேலை முடித்து திரும்பியதும் எத்தனை அலுப்பு/கஷ்டம் இருந்தாலும் தனது குழந்தைகளுடன் அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை அளவளாவுவதை, அவர்கள் பள்ளியில் நடந்ததை கேட்பதை கடமையாகக் கொள்ளல் வேண்டும். பிள்ளைகளின் தேவைகளுக்கு பணம் மட்டும் கொடுப்பதல்ல வாழ்க்கை, பாசத்தைக் கொடுப்பதே உண்மையான வாழ்க்கை என்று உணர வேண்டும்.
பெண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள், குட் டச், பேட் டச் என்பதைப் பற்றிய விவரங்களை சொல்லித் தருதல் அவசியம். இயல்பாகவே பெண்களுக்கு இந்த எச்சரிக்கை உணர்வு அதிகம். ஒருவன் பார்வையால் மேய்ந்தாலே கண்டு கொள்ளும் இயல்பை உடையவர்கள் பெண்கள். ஒருவன் தன்னைத் தொடும் பொழுது எத்தகைய எண்ணத்துடன் தொடுகிறான் என்பதை எளிதில் அவர்களால் உணர முடியும். தவறான எண்ணத்துடன் தொடுவது யாராக இருந்தாலும், அது உடன் படிக்கும் ஆண்மகனிலிருந்து, நாளை மரிக்கப் போகும் கிழவன் வரை யாராக இருந்தாலும் அவர்களை கண்டிப்பதுடன் பெற்றோரிடமும் இது பற்றி பேசுவது பெண் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும். பெற்றோர்களும், சொந்தகரார்கள் தானே விளையாட்டாக தொட்டிருப்பார்கள் என்று அசிரத்தையாக இல்லாமல் தனது மகளின் நலன் மீது கவனம் செலுத்துதலும், சொந்தங்களுக்கு பாந்தமாக எடுத்துரைப்பதும் அவசியம்.
குழந்தைகளுக்கு சுதந்திரம் தரும் அதே வேளையில் குழந்தைகள் எங்கு செல்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் கண்காணித்து அவர்களை சரியான பாதையில் இட்டு செல்வதும் பெற்றோர்கள் கடமை.
பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளை கற்று தருதலும் அவசியம்.
என்ன தான் தைரியசாலிகளாக பெண்கள் இருந்தாலும், இரவு நேரங்களில் தனிமையில் பயணம் தவிர்ப்பது நலம். நண்பர்களே ஆனாலும் நள்ளிரவிலும், தனிமையிலும் ஆண் நண்பர்களை சந்திப்பதையும் வெளியில் செல்வதையும் தவிர்க்கவும். பெண்கள் தங்கள் பெற்றோர்களுக்கு தாங்கள் இருக்கும் இடம், யாருடன் இருக்கிறார்கள் என்னும் தகவலைச் சொல்லுதல் நலம்.
பெண்கள் நள்ளிரவில் தனிமையில் ஆட்டோவில் பயணம் செய்தால் ஆட்டோகாரரிடம் போகும் இடம் சொல்லியதும், தனது வீட்டிற்கு அழைத்து தான் வரும் ஆட்டோ நம்பரைச் சத்தமாகச் சொல்லுதல் நலம். யாரும் அழைப்பை எடுக்கவில்லை என்றாலும், உங்களது மொபைல் ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்தாலுமே வெறுமே ஆயினும் இத்தகவலை ஆட்டோ காரர் காது படச் சொல்வது நலம்.
இவை எல்லாம் நாம் தற்காப்புக்காகச் செய்ய வேண்டியவை.
பாலியல் வன்முறை பற்றிய செய்திகளை தொலைகாட்சி மற்றும் பத்திரிகைகள் சமூக உணர்வுடன் பரப்புதல் நலம்.
அரசாங்கமும், அரசு இயந்திரங்களும் குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
பத்திரிகைகள், தொலைக்காட்சி சானல்கள் பாலியல் வன்முறைக்கான தண்டனையை அதிகம் பேசுவதின் மூலம் காமுகர்கள் மனதில் பயத்தை வரவழைக்க வேண்டும்.
இவற்றை எல்லாம் விட முக்கியமாக ஆண்களை, பெண்களை போகப் பொருளாக கருதாது பெண்களாக மதித்து நடக்க கற்றுக் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் ஆண் குழந்தைகளுக்கும் நல்ல பழக்க வழக்கங்களை கற்று தர வேண்டும். தனது மகன் என்ன செய்கிறான் என்று கண்காணித்து அவனை நல்ல வழியில் நடத்த வேண்டும்.
இவை எல்லாம் நடந்தால் பாலியல் வன்முறை நாளையே நின்று விடுமா என்றால், கண்டிப்பாக இல்லை என்று தான் சொல்வேன். பிறகு எதற்கு இத்தனை வழிமுறைகள் என்கிறீர்களா… இவற்றை கடைபிடித்தால் பாலியல் வன்முறைகள் படிப்படியாக குறையும் வாய்ப்புகள் அதிகம். அம்மட்டே.

prasathbr@gmail.com

 

“ஏய் ஒன் தங்கச்சிகளையும், நம்ம பொண்ணுங்களையும் ஜாக்கிரதையா இருக்கச் சொல்லுடீ.  இங்கெ பத்திரிகைலெ என்ன போட்டுருக்கான் பாரு.  அஞ்சு வயசு ஆறு வயசுப் பொண்ணுங்களெக் கூட உட்டு வைக்கறதில்லையாம் பாலியல் ப்லாத்காம் செய்யுறவங்க.”

(ப்டம் உபயம் இன்னம்பூரானின் மகள்)

— 

News

Read Previous

தீரன் சின்னமலை

Read Next

ஆகஸ்ட் 6, சென்னையில் ஹார்மனி இந்தியா கூட்ட அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published.