தாய்ப் பால் வாரம் ​

Vinkmag ad

thaipalதாய்ப் பால் வாரம்

 

ஆகஸ்ட் 1 முதல் 7 வரை அகில உலக தாய்ப் பால் வாரம்.  இப்படி ஒரு வாரம் கொண்டாடப் படுவதின் நோக்கமே அறியாதவரும் தாய்ப் பாலின் மகத்துவத்தை அறிந்திடச் செய்வதே.

 

மனிதர்களோ, விலங்குகளோ தன் குழந்தைக்கெனெ தாயின் உடலில் சுரக்கின்றது பால்.

 

 

 

 

 

 

தாய்ப் பாலில் பச்சிளம் குழந்தை எளிதில் ஜீரணித்து திடகாத்திரமாக வளர்ந்திடத் தேவையான அளவில் கொழுப்புச் சத்து, புரதம், சர்க்கரை, சுண்ணாம்புச் சத்து மற்றும் சில ரசாயனப் பொருட்களும் உள்ளன.  அது மட்டுமா? இல்லை.  குழந்தையின் உடலிலே அதைத் தாக்கிடும் நோய்களுக்குத் தேவையான எதிர்ப்புச் சக்தியை வளர்த்திடுவதே தாய்ப் பால் தான்.  அதிலும் குழந்தை பிறந்த உடன் தாயின் மார்பகத்தில் தோன்றிடும் மஞ்சள் நிறப் பாலில் இந்த சக்தி மிகவும் அதிகமான அளவில் உள்ளதாம்.  அதனால் தான் மருத்துவ மனைகளில் குழந்தை பிறந்த உடன் தாய்க்கு அளிக்கப் படும் முதல் அறிவுரை குழந்தைக்குத் தாய்ப் பால் கொடுக்க வேண்டும் என்பது.

 

அதிக உஷ்ணம் இல்லை.  அதிகக் குளிர்ச்சி இல்லை.  குழந்தையின் உடல் உஷ்ணத்திலேயே குடித்திடப் பால் அதற்குத் தாய்ப் பால் வடிவினிலே.

 

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் இருந்து, இரண்டு ஆண்டு வரை தாய்ப் பால் கொடுப்பது நல்லது என்பது வல்லுனர்களின் கருத்து.

 

இன் நாட்களில் சில தாய்கள் குழந்தைக்குப் பால் கொடுத்தால் தங்கள் அழகு குறைந்து விடும் என்ற தவறான எண்ணத்தில் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப் பாலுக்கு பதிலாக புட்டிப் பாலை நாடுகின்றனர்.

இது மிகப் பெரிய தவறு.  இதனால் இரண்டு வித பாதிப்புகள் ஏற்படும்.

 

ஒன்று தாய்ப் பாலில் உள்ள குழந்தைக்கு உடலில் எதிர்ப்பு சக்தியினை வளர்த்திடும் ரசாயனங்கள் புட்டிப் பாலில் கிடையாது.

 

இரண்டு ப்ளாஸ்டிக்கினால் செய்யப் பட்டுள்ள பாட்டில்களில் “பிஸ்பினால் ஏ” என்ற ரசாயனப் பொருள் உள்ளது.  இந்த ரசாயனம் பாலுடன் கொஞ்சம் கொஞ்சமாகக் கலந்து குழந்தையின் உடலுக்குள் செல்கிறது.  அதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப் படுகிறதாம்.  மேலும் வயது வந்த பின் பிள்ளை பெற்றிடுவதற்கான விந்து / முட்டை உண்டாவதும் பாதிக்கப் படுகிறதாம்.  இதை நான் சொல்ல வில்லை.  விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

 

 

 

 

திருஞான சம்பந்தர் குழந்தையாய்த் தாய்ப் பாலுக்கு அழுதபோது அம்பிகையே வந்து பாலூட்டியதாக ஒரு தகவல் சொல்வதுண்டு.  அகிலத்தின் தாய் ஊட்டியது வெறும் பாலல்ல.  ஞானப் பால் அது.

 

இப்படித் தாய்ப் பாலுக்கு ஏங்கிடும் குழந்தைக்குத் தன் பால் ஊட்டிடும் தாய்கள் இன்றும் வாழ்கிறார் நம்மிடையே.  இதோ ராஜஸ்தான் மானிலத்தில் வசிக்கும் இந்த பிஷ்ணோயித் தாயைப் பாருங்கள்..தன் சேய்க்கும், தாயிழந்த மான் குட்டிக்கும் தாய்ப் பால் ஊட்டுவதை.

 

 

தாய்ப் பால் என்ற உடன் என் நினைவுக்கு வருபவை இரு சம்பவங்கள்.

 

ஒன்று 1966ல் பங்களூரில் நான் வேலை பார்த்து வந்த போது நடந்தது.  எனக்கு மூன்றாவது மகள் பிறந்திருந்தாள்.  குழந்தை பாலுக்கழுதது.  தாயிடமோ பால் இல்லை.  குழந்தை அழுவதன் காரணம் கேட்டாள் வீட்டு வேலை செய்து வந்த கெம்பி.

 

என் மனைவி காரணம் சொல்லிட, “நான் தருகிறேன் அம்மா பால்” என்று சொல்லி,த் தன் மேலாடை நகர்த்திக் கையினால் மார்பகத்தை அவள் அழுத்திட, சீறிப் பாய்ந்தது பால் எட்டடி தூரத்திற்கு .

 

மற்றொன்று ‘73ல் விஜயவாடாவில் பணி புரிந்த போது நடந்தது.  ஓங்கோலில் ஒரு அரசு அலுவலகத்தின் வாசலில் எனது காரில் அமர்ந்து அலுவலகம் திறப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தேன்.  காரின் முன்னே நடை பாதையில் ஒரு பிச்சைக்காரி.  அவளது கந்தலாடை அவள் உடலை மறைப்பதை விட அதிகமாகத் திறந்தே காட்டிக் கொண்டிருந்தது.  தெருவில் தவழ்ந்து கொண்டிருந்த அவள் குழந்தை அழுத படி அவளை நோக்கி வந்தது.  அது வரை காய்ந்திருந்த அவள் ரவிக்கை நனைய ஆரம்பித்து சில வினாடிகளிலேயே அவள் ரவிக்கையில் இருந்து பால் தரையில் சொட்ட ஆரம்பித்தது.

 

எண்ணினேன் இறைவனின் கருணையை.  நல்ல உணவுண்டு இருப்போருக்கு இல்லை தாயிடம் பால்.  அரை வயிறு சோறுண்ணும் கெம்பிக்கும், அந்த பிச்சைக்காரிக்கும் அளித்திருக்கிறாரே ஆண்டவன் குறைவின்றிக் குழந்தைக்காகத் தாய்ப் பாலினை என்று.

 

(படங்கள் 1,2,4 இணைய தளங்களில் இருந்து.  படம் 3 அன்பர் ஊமாநாத் செல்வன் என்ற விழியன் எடுத்தது,)

 

31-07-2014                                            நடராஜன் கல்பட்டு

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்…….http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு

 

 

எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

 

வேறொன் றறியேன் பராபரமே

News

Read Previous

செட்டிநாட்டுப் பாடல்

Read Next

இந்தியாவில் அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகள்

Leave a Reply

Your email address will not be published.