செட்டிநாட்டுப் பாடல்

Vinkmag ad
திருணம் ஆகி புகுந்தவீட்டிற்கு செல்லவிருக்கும் மகளுக்கு தாய் சொல்லும் புத்திமதி இது. ( இது அந்தக்காலச் செட்டிநாட்டுப் பாடல்)…

கன்னியர் மெச்சும் கருத்துள்ள நாயகியாம்
கண்ணணொத்த உருவினனைக் கல்யாணம் தான்முடித்துப்
பயணத்திற்(கு) ஆயத்தம் பண்ணுகிற போது நல்ல
கயல் விழியாள் மாதரசி காசினியில் தனைஈன்ற
மாதாவிடம் ஏகி வணக்கமுடனே தொழுது

‘”மேதினியில் என்னை விருப்பமுடன் பெற்றெடுத்த
தாயே’ நான் போய் வாரேன் தக்கமதி சொல்லிவிடு
ஆயி’ நான் போய் வாரேன் ஆசீர்வதித்(து) அனுப்பிவிடு”
என்றழகுப் பெண்மணியாள் இனிய கரத்தாலே
பொன்துலங்கும் மாதாவின் பொற்பாதம் தெண்டனிட்டாள்.

தெண்டனிட்ட கண்மணியைச்சேர மடியிருத்தி
வண்டார் குழலகி மாதாவும் ஈதுரைப்பாள்:-
“கண்மணியே போய்வா என் கைக்கிளியே போய்வா நீ
நன்மணியே உங்களுக்கு மெய்ப்பரனார் தஞ்சமுண்டு
போன இடத்தில் நீ புத்தியுடனே இருந்து
ஞானமுடன் வீட்டை நடத்துவாய் கண்மணியே”

தப்பிதம் நீ செய்தக்கால் தாரணியில் உள்ளவர் உன்
அப்பன் குணமென்பார் உன் ஐயாவை நிந்தை சொல்வார்
உன் மீது ஒரு குற்றம் உண்டானால் என் மகளே
என் மீது ஏத்தி இவள் தாயின் குணம் என்பார்கள்

பிள்ளை செய்த குற்றம் பெற்றோருக்கு நிந்தையம்மா
எள்ளவும் நிந்தை எங்களுக்(கு) உண்டாகாமல்
ஊரார்க்கும் நாட்டார்க்கும் உற்ற முறையார்க்கும்
யாரார்க்கும் நல்ல பிள்ளையாய் நடக்க வேண்டுமம்மா

வீட்டுப்பொருள் எதையும் வீணில் அழிக்காதே
கேட்டவர்க்கு எல்லாமே கேட்டபடி ஈயாதே
பாடுபாட்டு உண்ணாத பலசோம்பல், பிச்சையென்றால்
ஓடி வருவார்கள் ஒண்டொடியே ஈயாதே

கூனர் குருடர் குறையுள்ள பேர்கள் தமை
ஈனமுள்ளார்கள் என்று இகழ்ந்து நீ தள்ளாதே
நாளை நாம் எப்படியோ நல்லணங்கே! கண்ணிலொரு
ஏழையினைக்கண்டால் இரங்கி நீ பிச்சையிடு
பசித்தவர்க்(கு) அன்னமிடு பாவை இளம்குயிலே
வஸ்த்திரம் இல்லார்க்கு மனங்குளிரத் தானமிடு

வேலைக்காரனைக் கண்டால் வெஞ்சினமாய்ப் பேசாதே
சோலைக்கிளியே! அவர்முன் துர்நகையும் கொள்ளாதே
காரியப்புத்தியுடன் பலரும் மதிக்கநல்ல
காரியக்காரி என்று கண்மணியே நீ நடப்பாய்
வாசல்களும் திண்ணைகளும் மற்றும் முற்றம் வீதிகளும்
ஆசனமும் சுத்தமுற அனுதினமும் காப்பாற்று

பாத்திரங்கள் எல்லாமே பளிச்சிடவே தேன்மொழியே
நேத்திரங்கள் தோன்ற நித்தம் விளக்கி வைப்பாய்
கண்போலும் கண்ணுக்குள் கரிய விழி போலும்
பண்போலும் தேன்மொழியே உன் பர்த்தாவைக் காப்பாற்று
கணவருடன் எதிர்த்து கண்டபடி பேசாதே
மணவாளர்க்(கு) இவ்வுலகில் மன்னவரும் தான் நிகரோ?

மாலையிட்ட நற்கணவர் மனத்தில் ஒரு கோபம் வந்தால்
பாலை ஒத்த சந்திரமுகப் பாவையே நீ சகிப்பாய்
கல்யாணம் செய்த நல்ல கணவர் ஒரு சூரியரும்
நலமான பத்தினியாள் நங்கை ஒரு சந்திரரும்
மன்னவர் ஓர் அரசும் மனைவி ஒரு மந்திரியும்
என்னும்படி யோக்கியமாய் இசைந்து நட என் மகளே!

அன்புடைய நற்புருஷ ரானால் அவரே நல்
வன்பெரிய பொன் குவியும் மாளிகையும் ஆகாரோ?
பெண்ணே! குணமுடைய புருஷர் உண்டானால்
என்ன குறைவு வரும்! எடுத்த தெல்லாம் கை கூடும்

சற்குண நல் நாயகரைச் சார்ந்த பெண் பாக்கியத்தை
கற்கண்டே! யான் உரைக்க கரையுண்டோ? இப்புவியில்
நல்ல மாப்பிள்ளை கண்டால் நமது குல தெய்வம்
சொல்ல உன் பங்காச்சு! சுவாமியை நீ தோத்தரிப்பாய்

காலையிலும் மாலையிலும் கனமதிய வேளையிலும்
வாலைக்கிளியே நீ மாபரனைக் கைவணங்கு
எவரை மறந்தாலும் இரவு பகல் ஆதரிக்கும்
அவரை மறவாதே! அவரே உன் “தஞ்சம்” என்றாள்.

வாழ்த்தினாள் முத்தமிட்டாள் மார்போடு எடுத்தணைத்து
“தாழ்த்தினார்க்(கு) அன்பு செயும் தற்பரனார் காவல்” என்றாள்.

(முற்றும்)

(வேந்தன்பட்டி பழ.ந. நடராஜன் செட்டியார் அவர்களின் மனைவி வள்ளியம்மை ஆச்சி அவர்கள், இளம் வயதில் மனப்பாடம் செய்த பாடலை சொல்லக் கேட்டு எழுதியவர், அலவாக்கோட்டை சிட்டுக்கலாவதி சொக்கலிங்கம் அவர்கள்.)
(இது நகரத்தார் குரல் மாத இதழில் வெளிவந்துள்ளது..—with பழனியப்பன் சரவணன்.

News

Read Previous

அன்பு

Read Next

தாய்ப் பால் வாரம் ​

Leave a Reply

Your email address will not be published.