இரட்டை வேடம் வேண்டாம் !

Vinkmag ad

இரட்டை வேடம் வேண்டாம் !

n    அல்ஹாஜ் ஏ முஹம்மது இஸ்மாயீல் பாஜில் பாகவி –

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். ‘உலகில் இரட்டை முகம் உடையவராக எவர் இருக்கின்றாரோ, அவருக்கு கியாமத் நாளில் தீ நாக்கு காத்திருக்கிறது.’ – ஆதாரம்: தாரமீ.

நண்பர்களாக இருந்தாலும் சரி, பகைவர்களாக இருந்தாலும் சரி எவரின் மனதையும் புண்படுத்திவிடாதபடி நெளிவு சுளிவுடன் நடந்து கொள்வதற்கு நடைமுறையில் ‘பாலிஸி’ இங்கிதம் என்கிறார்கள்.

தம்மைப் பிடிக்காதவர் அல்லது தமக்குப் பிடிக்காதவர் மீது கடுஞ்சினம் காட்டி நடக்கும் சிடுமூஞ்சிகள், வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. ஒருவர் வாழும் பொழுதும், மறைந்த பின்னும், அவர் மீது அனைத்து சாராரும் அனுதாபம் கொண்டிருந்தார்கள் என்றால், அவர்தான் இடம், பொருள், ஏவலறிந்து இங்கிதம் புரிந்து நடந்தவராவார்.

ஆண்டாண்டு காலமாக அஞ்ஞானத்தின் உச்சத்தில் ஆர்ப்பரித்திருந்த அரபு மண்ணை, அருமைத் தூதர் முஹம்மது நபியவர்கள் தாம் காலெடுத்து வைத்த ஒரு சில ஆண்டுகளிலேயே கல்வி, கண்ணியம், கட்டுப்பாடு நிறைந்த புண்ணிய பூமியாக மாற்றிக் காட்டினார்கள் என்றால், அதன் காரணம் அந்நாட்டு குடிமக்கள் ஒவ்வொருவரின் மன ஓட்டத்தையும் அளந்தறிந்து, அவரவர் மன நிலைக்குத் தக்கவாறு உண்மையின் நிலையின் பக்கம் அழைத்துச் சென்றார்கள் என்பதாகத்தான் இருக்க முடியும்.

எம்பெருமானார் (ஸல்) அவர்கள், மக்களிடம் இவ்வாறெல்லாம் பண்புடனும், பாசத்துடனும் பழகிய காரணம் அம்மக்களிடம் குவிந்து கிடந்த செல்வத்துக்கு ஆசைப்பட்டோ அல்லது பதவி பவிசின் மீது கண்வைத்தோ அல்ல. மாறாக இஸ்லாமிய நண்பராக இருந்தால், அவரது இஸ்லாத்தை வளர்த்து பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், தீயவராக இருந்தால் அவரை எப்படியாயினும் கொள்ளை, சூது, காமம் போன்ற கொடிய நோய்களிலிருந்து காப்பாற்றி அன்பு, அறம், பாச – நேசம் சூழ்ந்த அறநெறிப் பாதையில் அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்பதற்காகவும் இப்படி நெளிவு – சுளிவுடன் நடந்தார்கள்.

எமனில் உள்ள நஜ்ரான் மாவட்டப் பகுதியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல) அவர்களை பேட்டி கண்டு, இஸ்லாமிய மதபோதனையை அறிந்து கொள்ளும் முகமாக கிருத்தவ பாதிரிகள் சிலர் நபி சமூகம் வந்திருந்தனர். பேட்டியினிடையே பாதிரிகள் அவர்களது மத ஆச்சாரப்படி இறைவனை வணங்கும் நேரம் வரவே தாம் தொழ வேண்டும் அதற்கு வசதி செய்து தர வேண்டும் என்று வேண்டுகிறார்கள்.

பெருமானார் (ஸல்) அவர்கள், உடனே தமது மஸ்ஜிதுன் நபவியில் ஒரு இடத்தைக் கொடுத்து அவர்களை அவர்களது முறைப்படி வணங்கியொழுக அனுமதிக்கின்றார்கள். இச்சம்பவம் நமக்கு எதை உணர்த்துகிறது…?

திருமறை வேதத்தையும், தமது நபித்துவத்தையும், நிலை நிறுத்த வந்த நபியவர்கள் மாற்று மதத்தாரை அவர்களது மதக் கொள்கைப்படி நடக்க, தமது பள்ளியில் ஒரு பகுதியையே ஒதுக்கித்தருகிறார்கள் என்றால் இது எவ்வளவு சிறப்பிற்குரிய பண்பாடு என்பதை யோசிக்க வேண்டும். மாற்றுமத நண்பர்களுடன் இங்கிதமாக நடந்து அவர்களது உள்ளத்தில் உயர்ந்து நின்ற அந்த பூமான் நபி வாழ்க்கை இன்று மதவெறி கொண்டு, மாற்று மத அப்பாவி மக்களின் இரத்தத்தைக் குடிக்க அலையும் காட்டேரிகளுக்கு சிறந்த பாடமாகும்.

அதே போல், ஒரு பிரச்சனையில் இக்கட்டான சூழ்நிலை நிலவிய போது அப்பிரச்சினையில் சம்பந்தப்பட்டுள்ள இரு அணியினரும் திருப்திப்படும் வகையில் அவர்களது உணர்வுகளைப் புரிந்து நடந்து கொண்டார்கள் நாயகம் (ஸல்) அவர்கள்.

போரில் கிடைக்கும் பொருட்களை புதிதாக இஸ்லாத்தில் சேர்ந்தோருக்கு சற்று அதிகமாகப் பிரித்துக்கொடுக்கும் பழக்கம் நபிகளாரிடம் இருந்தது. பெருமானாரின் இந்நடைமுறையில் ஒரு முறை சர்ச்சை உருவாகியது. புதிதாக இஸ்லாத்தைத் தழுவியோர் தமது உற்றார் சுற்றாரைத் துறந்து மனக்கவலையில் இருப்பர் என்பதால், அவர்களது உள்ளங்களை இஸ்லாமிய கொள்கைகளில் இறுக்கம் பெறச் செய்ய நபிகளார் கையாண்ட இந்த நடைமுறையை சரிவரப் புரிந்து கொள்ளாததால்தான் இச்சர்ச்சை.

முஸ்லிம்களுக்கும், ஹவாஜின் கூட்டத்தினருக்குமிடையில் நடந்த ஒரு தற்காப்புப் போரில், முஸ்லிம்கள் வெற்றி பெற்று அவர்களது கைக்கு ஏராளமான ஒட்டகைகளும் மற்ற சொத்துக்களும் வந்து சேர்ந்தன. நபிகளார் குறைஷிகளில் அப்பொழுது தான் இஸ்லாத்தில் வந்து இணைந்தவருக்கு ஏராளமான ஒட்டகைகளை அன்பளிப்புச் செய்தனர். யுத்தத்தில் கலந்து கொண்டு வெற்றி கிடைக்கக் காரணமாயிருந்த அன்சாரி தோழர்களில் சிலர் இச்செய்தியறிந்து வருத்தப்பட்டு ‘அல்லாஹ்தான் தனது ரசூலை மன்னிக்க வேண்டும் யார் யாருக்கோ கனீமத்தை அள்ளி வழங்கும் நபிகள் போர்க்களத்தில் எங்களது வாள்களில் வெற்றிக் கனி ஈட்டித் தந்த எங்களை வெறுமனே விட்டிருக்கின்றார்களே …’ என்று ஆதங்கப்பட்டார்கள்.

பெருமானாருக்கு இச்செய்தி எட்டியதும் அந்தக் குறிப்பிட்ட அன்சாரிகளை மட்டும் அழைத்து ஒரு கூடாரத்தில் ஒன்று கூட்டினார்கள். தாம் கேட்ட செய்தி உண்மை தானா? என்பதை முதலில் விசாரிக்கின்றார்கள்.

அன்சாரிகளில் அறிவிலும், அனுபவத்திலும் நன்கு பழுத்த அறிஞர்கள், ‘உண்மை தான் நாயகமே ! எங்களில் இளைஞர்கள் தமது இளமைத் துடிப்பால் அவ்வாறெல்லாம் பேசி விட்டார்கள்…’ என்று உண்மையை மறைக்காமல் ஒத்துக் கொள்கிறார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். ‘நண்பர்களே ! – நம்மில் இஸ்லாத்தைத் தழுவியவருக்கு அவர்களது மனம் ஒரு நிலைப்படவே நான் அவர்களுக்கு கனீமத்தை வாரிக் கொடுத்தேன். அவர்கள் தமது இல்லங்களுக்கு இப்படிப்பட்ட செல்வங்களைத் தான் கொண்டு செல்கின்றார்கள். நீங்களோ, உங்களது இருப்பிடங்களுக்கு உங்களது உயிருக்குயிரான நபியையே கொண்டு செல்கின்றீர்களே… இது உங்களுக்குத் திருப்தியைத் தரவில்லையா…? என்று கேட்கிறார்கள். மனம் தெளிந்த நண்பர்கள், ‘ஆம், நாயகமே ! எங்களுக்கு எங்கள் நபிதான் முக்கியம் …’ என்று கூறி உண்மையை உவகையுடன் ஏற்கிறார்கள்.

பெருமானாரின் இந்த அணுகு முறை நடைமுறையில் கடைபிடிக்க வேண்டிய ஒன்று மனம் அலை பாய்ந்த வண்ணமிருக்கும் புது முஸ்லிம்களையும் திருப்திப்படுத்தி ஒரு சாராரை திருப்திப்படுத்த முனைந்து, மறுசாரார் வெறுப்புற்று விடாதவாறு அவர்களையும் நாசூக்காக அமைதிப்படுத்தி, மனித சமுதாயத்துக்கு மிகப் பெரும் வழிகாட்டியாகத் திகழ்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

ஹளரத் சஃது பின் முஆது (ரலி) அவர்கள் தீராப் பிரச்சனைகளையும், தீட்சண்யத்துடன் தீர்த்து வைத்திடும் சீரிய சிந்தனையாளர் அஹ்ஜாப் – போரில் காயம்பட்டிருந்த அவர், ஒரு கோவேறு கழுதையில் வந்து கொண்டிருக்கிறார். அவருடைய வருகையைக் கண்ட நாயகம் (ஸல்) அவர்கள், அன்சாரிகளை நோக்கி, ‘உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள் !’ எனப் பணிக்கிறார்கள். உடல் சோர்வுடன் திரும்பிய அந்நண்பருக்கு பெருமானாரின் இந்த உபசரிப்பு மிகவும் உற்சாகமாக அமைந்தது. தமக்குக் கூட தமது நண்பர்களுக்கு எழுந்து நிற்கப் பணிக்கின்றார்கள் என்றால், நம்மைச் சூழ உள்ளோரின் உணர்வுகளைப் புரிந்து மதித்து, எவரின் மனமும் சஞ்சலமடையாது நடந்து கொள்ள வேண்டுமென்பதைத்தான் பெருமானார் நமக்கு உணர்த்துகிறார்கள்.

அதே சமயம் எல்லா தரப்பினரிடத்திலும் நாசூக்காக நடக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் பிள்ளையைக் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவதையும் பெருமானார் கண்டித்திருக்கின்றார்கள். ‘கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை’ என்று பெயர் எடுத்துவிடும் வகையில் ஒருவரை முன்னால் வைத்துக் கொண்டு, சுய நலத்தினடிப்படையில் அவரை ஆகா !  ஓகோ ! என்று புகழ்ந்து தள்ளிவிட்டு அவரைப் போகவிட்டு விட்டு வசைமாரி பொழிவது கீழ்த்தரமான முறையாகும். அது இரட்டை வேடமாகும். இதைத்தான் அண்ணலாரின் அமுத மொழியும் சுட்டிக் காட்டுகிறது. இதை உணர்ந்து நாம் செயல்படுவோமாக !

 

நன்றி ; நர்கிஸ் – ஜுலை 2014

News

Read Previous

பாவம் பொடிபட மனிதம் புரிபடும்.. (கவிதை) வித்யாசாகர்!

Read Next

ஜகாத்

Leave a Reply

Your email address will not be published.