இது என்ன மாதம் … என்று கேட்டால் ..!

Vinkmag ad

 

( நர்கிஸ் அண்ணா ஷேக் அப்துல்லா )

 

அருமை தங்கை அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

‘உன்னை ஒன்று கேட்பேன் சரியா! இது என்ன மாதம்?’

‘என்னன்னா! இது தெரியாதா? பிப்ரவரி, சரியா!’ என்பாய். நான் கேட்டது ஆங்கில மாதத்தையோ, தமிழ் மாதத்தின் பெயரையோ அல்ல. நமக்கென இஸ்லாம் வகுத்து வைத்துள்ள மாதத்தின் பெயரை கேட்டேன்.

‘ம்.. அதுவா மெளலூது பிறை – ஸபர் கழிவு, பத்து நோன்பு அம்மா பிறை – புது ரஜ் பழைய ரஜ் – மதார்ஷா பிறை, முஹையதீன் ஆண்டவர் பிறை – காதர் அவுலியா பிறை, ம் ..அப்புறம்…

‘ஸ்டாப்..ஸ்டாப்.. மாவட்டத்திற்கு பெயரிட்டதுபோல், நீ நம் மாதங்களுக்கும் ஒவ்வொரு காரணப்பெயர் கூட்டி விடுவாய் போலுள்ளதே ! இப்படித்தான் பல இடங்களிலும், பல்வேறு வகையான பெயர்கள் சொல்லப்பட்டு வருகிறது.

தங்கையே ! ஆங்கிலத்திலும், தமிழிலும் மாதங்களுக்குப் பெயர் வகுத்துள்ளது போன்று, இஸ்லாத்திலும் மாதங்களுக்கு அழகிய பெயரிடப்பட்டுள்ளன. அதை விட்டுவிட்டு நமது இஷ்டத்திற்கு ஒவ்வொரு மாதத்தையும் அழைக்கிறோம். காரணம், அதைப்பற்றி விளங்கிக் கொள்வதில்லை. ஏதேனும் திருமணம் இருந்தால் மட்டுமே நமது மாதத்தின் பெயர் – பிறை தேடி அலைகிறோம். எதற்கும் தொழப் போகும்போது பேஷ் இமாமிடம் மாதம் பிறை கேட்டு எழுதி வா என கேட்டு அறிய முடிகிறது. தமது ஆண்டு – மாதம் பிறை இதனை நினைவுப்படுத்தச் செய்வதே இது போன்ற நிகழ்வுகளால் மட்டுமே.

அழைப்பிதழில் ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்’ என்பதை பார்த்துப் போடு. இதில் கவனம் வேண்டும். இதை சரியாகப் போட்டால் ‘இறைவனின் அருள் உங்கள் மீது உண்டாவதாக’ என பொருள்படும். இஸ்லாத்தின் அழகிய முகமன் ஆகும். இதனைக் கூட சரியாக சொல்ல முடிவதில்லை. ஸலாம் சொல்லக் கூட தயங்குகிறோம். இறைவனால் நமக்குத் தரப்பட்ட இந்த இனிய சொல்லைக் கூறும் பொழுதே பகைமை மறந்து, நெஞ்சமெல்லாம் நேசம் நிறைந்துவிடும். ஸலாம் சொல்லி, முஸாபாஹா செய்தால் கைகள் பிரியும் முன்பாகவே, பாவங்கள் நீங்கிவிடும். ஸலாத்தினைப் பரப்புங்கள் என்பது நபி (ஸல்) அவர்களது அருள் மொழியன்றோ !

முந்தி ஸலாம் சொல்பவர்களுக்கு அதிக நன்மை என்பதை பெரியோர்கள் மூலமாக உணர்ந்திருப்பாய். சரி இனி நான் நம்ம விஷயத்திற்கு வருகிறேன். ஆங்கில ஆண்டின் மாதங்கள் பலமுறை மாற்றப்பட்டு அதன் பின்னர் ஜனவரியிலிருந்து துவங்கப்பட்டுள்ளது. தமிழ் மாதங்கள் ஆண்டின் ஆரம்பமாக சித்திரை இருந்தது. பின்னர் தை ஆனது. அதன் பின்னர் மீண்டும் சித்திரை ஆகியுள்ளது. ஆட்சி மாற்றத்திற்கேற்ப மாதங்களின் துவக்கமும் மாறும். என்றும் மாறாமல் இருக்கும் இஸ்லாமிய மாதங்களின் பெயரினை அதன் அர்த்தங்களுடன் தருகிறேன்.

1. முஹர்ரம் – விலக்கப்பட்ட காலம் (ஹராமை விட்டு)

2. ஸபர்  – இலையுதிர் காலம்

3. ரபிஉல் அவ்வல் – புது வசந்தம். நபி (ஸல்) அவர்களின் உதயமே  புது வசந்தம்தான்.

4. ரபிஉல் ஆஹிர் – வசந்தத்தின் இறுதிகாலம்

5. ஜமாதுல் அவ்வல் – பனி உறையும் காலம்

6. ஜமாதுல் ஆஹிர்  – பனி உறையும் இறுதி காலம்

7. ரஜப் – மரியாதைக்குரிய காலம்

8. ஷாஃபான் – பங்கிடுதல்

9. ரமலான் – (தீமைகளை) சுட்டெரித்தல்

10. ஷவ்வால்  – சிதறிவிடுதல் (பொருள் தேடுவதற்காக)

11. துல்கஃதா   – யுத்தம் எதுவும் செய்யாமல் அமைதியாக இருப்பது

12. துல்ஹஜ்  – வருட முடிவும் ஹஜ்ஜும் இம்மாதத்தில் வருவதால் துல்ஹஜ் என்று பெயர் வழங்கப்பட்டது.

சரி தானே ! மாதங்களின் பெயரினை உன் குழந்தைகளுக்கும் கற்றுதா அப்பொழுது தான் இது என்ன மாதம் என்று கேட்டால் டக்கென்று பதில் வரும்.

நன்றி :

நர்கிஸ்

ஏப்ரல் 2014

 

News

Read Previous

தமிழக அரசின் புதிய தமிழ் எழுத்துருக்கள் (Unicode Tamil fonts)

Read Next

மதுரையில் முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் கிளை ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு

Leave a Reply

Your email address will not be published.