புரட்சிக்கவிஞரின் தமிழியக்கம் – வெற்றிவேலன்

Vinkmag ad

bharathidasan06

தமிழ் மகனே,

திரைகடல் ஓடித் திரவியம் காண இருண்ட கண்டம் இலங்கை, பர்மர சென்றாய்; உழைத்தாய்; கல்லை உடைத்தாய்; பிற நாட்டின் முன்னேற்றம் கருதி மாட்டினும் இழிவாய் முனைந்து உழைத்தாய்! ஈட்டியதென்ன? இழி சொல் பகைமை காட்டி நின்றனர், உன் உழைப்பால் உயர்ந்தோர்! அயர்வைக் கருதாது வியர்வை சிந்தி உயர்வைக் கருதி உழைத்தாய் பிறருக்கு! உன்றன் நேர்மையை உணர்ந்த மற்றோர் குன்றா உழைப்பை உறிஞ்சி உயர்ந்தனர்; சாற்றைப் பிழிந்து சக்கை எறிவது உலகின் இயற்கை; பாலைக் கறந்து, பின் பசுவைக் கொல்லும் கயமை ஒப்ப முரடர் உன்னை விரட்டி அடித்தனர்; உழைத்ததன் பயனை நுகர வாய்ப்பற்றாய்! குன்றா உழைப்பினை; குண்டடிபட்டாய்! இனவெறி மொழிவெறி இவற்றால் செத்தாய்! பரக்க வேண்டிய தாய்நாடு உன்னைப் புறக்கணித்தது! விரட்டப்பட்டோடி வந்தாய்! வரவேற்கவில்லை, உன் தாய்த்திரு நாடு! நற்றமிழ் இனமே, நசிந்திடுகின்றாய்! ‘‘தமிழ்ச் சாதி தரணி மீது ராது பொய்த்தழி வெய்தலோ முடிபு’’ எனக் குமுறி நின்றார் கவிஞர் பாரதியார்!

‘பாமரராய் விலங்குகளாய், இகழ்ச்சி சொலப்பான்மை கெட்டு, நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்வீர்! விழித்தெழுவீர்! செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி நீங்கள் சிற்றடிமைப் படலாமோ? பொங்கி எழுங்கள்! புவியில் நம் இனத்தை மங்காப் புகழுடன் இலங்கிடச் செய்வீர்’’.

என இடித்து உரை கூறிய இன் தமிழ்க் கவியின் சொல்லைக் கேட்டீரல்லீர்!

“வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! வெங்குருதிதனிற் கமழ்ந்து வீரஞ் செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்!’’ என முழங்கி நின்றார்! திங்களொடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த நாம் ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்று முழங்கினார், பழம்பெருமை வீழ்ந்தொழிந்த கிரேக்கத்தைக் கிளர்ந்தெழுப்பிய கவி பைரன் போல! (Byron-The Isles of Greece)

‘தமிழியக்கம்’ கண்ட அவர் தகைமை பெரிது!

“இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்

என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்-

தன்பங்கள் நீங்கும், சுகம் வரும் நெஞ்சினில்

தூய்மை உண்டாகிடும். வீரம் வரும்.’’

என்று அந்தப் புத்துணர்வாளர் புகன்ற மொழி கேளாயோ? பாழ்பட்டு நின்ற இந்தப் பாரததேசந் தன்னை வாழ்விக்கப் பாடினார் பாரதி! அவரது தலைமாணவர் பாரதிதாசனாரும் பாரத நாட்டில் தமிழரின் தாழ்வைப் போக்குதலை நாட்டத்திற் கொண்டு, ‘‘பூட்டிய இருப்புக் கூண்டின் கதவு திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியே வா!’’ என உரிமை பெற்ற பாரதநாட்டில் அருமைத் தமிழனுக்கு ஆணையிட்டார். கேட்டார்ப் பிணிக்குந்தகைய வாய்க் கூறினார்;

‘‘வாழியநீ தமிழ்த்தாய்க்கு

வரும் பெருமை உன் பெருமை

வயிற்றுக் கூற்றக்

கூழின்றி வாடுகின்றார்;

எழுந்திரு நீ இளந்தமிழா,

குறை தவிர்க்க

ஆழிநிகர் படைசேர்ப்பாய்

பொருள் சேர்ப்பாய்! இன்பத்தை

ஆக்குவிப்பாய்!

ஊழியஞ் செய் தமிழுக்குத்

துறைதோறும் துறைதோறும்

உணர்ச்சிகொண்டே’’.

என உரைத்து நின்றார். காண்பதென்னை? உணர்ச்சியில்லை தமிழரிடை! ஆயிரம் ஆயிரம் சின்னச் சாமிகள் தீயிடைக் குளிப்பினும் திருந்துவீரல்லீர்! பேயினும் கொடியதாய்ப் பணத்தாசை ஒன்றே கொண்டீர்! வயிறே பெரிதென வளர்த்து நிற்கிறீர்! வண்டமிழ் வளர்க்கும் வகையறியீர்! மெய்யுணர்வில்லையே! தமிழுக்குப் பகைவர் எவர் எனத் தேர்ந்திடும் வகையறியீர்! அரசியலையும் மொழியையும் குழப்பிக் குழப்பி அரசியல்துறை எது மொழித்துறை எது எனத் தேர்ந்திடும் அறிவிலீர்!

கப்பற்படை கொண்டு கடாரம் வென்றோர் பர்மாவிலிருந்து திக்கற்றவர்களாகப் பாரதம் புகுதற்குக் கப்பல் வசதி கேட்டார் மத்திய அரசினரிடம்! கிடைக்கப் பெற்றிலர்! ஒரு மொழி வைத்து உலகாண்ட தமிழர் மும்மொழி கற்றாலன்றி வேலையில்லை! பிழைப்பில்லை! தன்னினம் உயரத் தளராது உழைத்தவர் தான் வாழ்ந்தாற் போதுமென்றின்று நினைக்கிறார்! இன்பத் தமிழ்க் கல்வி கற்றவர் யாவரும் வறுமைத் துன்பத்தில் ஆழ்கிறார்! ஆங்கிலக் கல்விக்கே அரசினர் ஆதரவு!

இந்நிலை மாற்றிட, நன்னிலை எய்திட அயராது உழைத்தல் வேண்டும்! தூங்கிப் பயனில்லை! வள்ளுவர் வான்குறள் ஐ.நா. அவையிலே முழங்குதல் வேண்டும்! தெள்ளுதமிழ்க் காப்பியங்களை எல்லாத் தேயத்தவர்களும் கற்று மகிழ வேண்டும்! அறிவியலின் உச்சாணிக் கிளையில் அமர்ந்திருக்கும் உலகில் அறிவியல் இன்றிக் கல்வியில்லை! தமிழில் அறிவியற் கலைகள் வேண்டும்! தமிழிசை உலகெலாம் ஒலிக்க வேண்டும்! கோயிலில் இறைவனைத் தூய தமிழில் வழிபட வேண்டும்! கல்லூரிகளில் தமிழ்க் கல்வியையே கற்க, கற்பிக்க வேண்டும்! தமிழாய்ந்த தமிழன் தான் தமிழ்நாட்டில் முதலமைச்சராய்த் திகழ வேண்டும்! தமிழ்ப் புலவர் ஒன்றுபடும் நன்னாள் வருதல் வேண்டும்! வையம் அறிமொழியதாகத் திருமலிந்த தமிழ் மொழிதான் ஆகும் வகை நம் புலவர் சேர்ந்து தொண்டுபுரிய வேண்டும் செல்வர்கள், தமிழறிஞர் கழகங்கள், தமிழ்ப் பள்ளி கல்லூரி, தமிழ் ஏடு பலப்பலவும் நிறுவ வேண்டும்!

இதுவே புரட்சிக் கவிஞர் கண்ட ‘தமிழியக்கம்,’ இனியும் தூங்கி இழி நிலை எய்திட வேண்டாம்!

எது செய்க நாட்டுக்கே

எனத் துடித்த சிங்கமே!

இன்றே, இன்னே,

புது நாளை உண்டாக்கித்

தமிழ் காப்பாய் புத்துணர்வைக்

கொணர்வாய் இங்கே!

அதிர்ந்தெழுக! தமிழுக்குத்

துறைதோறும் துறைதோறும்

அழகு காப்பாய்!

– புரட்சிக் கவிஞர்

– குறள்நெறி: சித்திரை 19. தி.பி.1995 / மே 1, கி.பி.1964

 

bharathidasan09

  புரட்சிக் கவிஞர் என்ற பெருஞ் சிறப்புக்குரிய பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தாழ்ந்துபோன தமிழகத்தின் பகுத்தறிவுப் பகலவனாகப் பவனி வந்தார். பழமைச் சமுதாயத்தைப் பாட்டால் பண்படுத்திய பெருமை அவருக்கு மட்டுமே உண்டு. அடிமை வாழ்வினரை புரிய உலகு நோக்கி விரைந்துவர அழைத்தார். அவல வாழ்வினருக்கும் அஞ்சாமைத் திறன் ஊட்டினார். “இருட்டறையில் உள்ள தடா உலகம் சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே – வெருட்டுவது பகுத்தறிவு இலையாயின் விடுதலையும் கெடுதலையும் ஒன்றேயாகும் என்று குரல் கொடுத்தபிறகுதான் மருட்டுகின்ற மதத் தலைவரை விரட்டுகின்ற வீரமெல்லாம் தமிழ் மக்களுக்கு வந்தது. பாரதிதாசன்! இந்தப் பெயர் தமிழர் தம் நெஞ்சத்தில் இடம் பெற்ற காலம் (18.8.39) முதல் இந்தி எதிர்ப்புப்போராட்டம் கிளர்ந்தெழுந்த நேரம்! “இந்தி எப்பக்கம் வந்து புகுந்துவிடும் எத்தனை பட்டாளம் கூட்டிவரும் தீங்குள்ள இந்தியை நாம் எதிர்ப்போம். பங்கம் விளைந்திடில் உங்கள் தாய்மொழிக்கே பச்சை இரத்தம் பறிமாறிடுவோம்! நீங்கள் எல்லோரும் வாருங்கள் நாட்டினரே!” என்றெல்லாம் திரு.விக.வும் தமிழர் தலைவராக இருந்த பெரியாரும், படைநடத்திப் பெருமையுற்ற அஞ்சாநெஞ்சன் அழகிரியும் பாரதிதாசனின் போர்ப் பாட்டுக்களையே மொழிப்போரின் குரலாகக் கொண்டனர். தன்மான இயக்கத்தின் தளபதிகள் பலரில் ஒருவராக, கவிஞரும் உயர்ந்தார். அவரது ஆற்றலை அறிவுச் செல்வத்தை, புலமை விவரத்தை, புரட்சியின் வளர்ச்சியை, இதயத்தின் விடுதலை வேட்கையை வீரப் பண்ணிசைக்கும் பாவேந்தரை, தமிழக மக்களின் இதயத்திற்குக் குடியேற்றிய அரும்பணி அறிஞர் அண்ணா அவர்களுடையதாகும்! பள்ளியாசிரியராக இருந்த பாவேந்தரை பைந்தமிழகத்தின் புரட்சிக் கவிஞராக, அவரைச் சூழ்ந்திருந்த அரசியல் இருளையும் தேசீயத் திரையையும் கிழித்து வெண்ணிலா உலாவுக்கு உதவியவர் அண்ணாதாம்.

இருபதாண்டுகளுக்கு முன்னால் இன்றைய தமிழகம் இல்லை. தமிழர் தலைவர்களுக்கு இன்றுள்ள சிறப்பு அன்றில்லை. அதிகாரம் அடக்குமுறை இவற்றின் அணைப்பு மட்டுமன்று; அக்கிரகாரப் பெருமையென்று ஒன்றிருந்தால்தான் அறிஞர்களும் மதிக்கப்பட்ட காலம்! தேசீய மாயையும் ஆரிய மோகமும் ஆதிக்க வல்லாரிகளை ஆட்டிப் படைத்திட்ட காலமாகும். 1945ஆம் ஆண்டில் பாரதிதாசன் அவர்களுக்கு தமிழர்கள் பொற்கிழியும் பொன்னாடையும் வழங்கினர். ரூ.25,000 பணமுடிப்பு வழங்கிய விழாவில் பன்மொழிப் புலவர்களும் பல்வேறு அரசியல் துறையினரும் கூடினர்; வாழ்த்தினர். வெள்ளம் போல் தமிழர் கூட்டம் என்ற கவிஞரின் சொல் அன்று தான் செயல்பட்டது? பெரியார் இராமசாமி, அறிஞர் அண்ணா, பேராசிரியர் சேதுப்பிள்ளை, ம.பொ.சிவஞானம், செங்கல்வராயன், சீவானந்தம், நாவலர் நெடுஞ்செழியன், உமர்நாத்து, எண்ணற்றோர் அவரவர் நிலைக்கேற்ப கவிஞரைப் பாராட்டினர். திராவிடர் கழக முகாமிலே இருந்தாலும் தாயகத்தின் புகழ் வளர்க்கும் வல்லவர்களில் ஒருவராக மதிக்கப்பட்டார். பெரியாரும் கவிஞரும் அண்ணாவும் என்ற அழகான சொற்றொடர் இடைக்காலத்தில் அழிந்துபோனது வேதனைக்குரியதாகும்! பாமரர் இதயம் முதல் பல்கலைக்கழக மண்டபங்கள் வரை பாரதிதாசன் பாடல்களும் படங்களும் எழில் செய்தன. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அன்றைய துணைவேந்தர் பேராசிரியர் எம்.இரத்தினசாமி அவர்கள் தலைமையில் புரட்சிக் கவிஞரின் படத்தை அறிஞர் அண்ணா அவர்கள் என்றும் மறக்கமுடியாத இன்றும் சிறப்புக்குரிய உரை நிகழ்த்தித் திறந்து வைத்தார்கள்! ‘‘ஏ! தாழ்ந்த தமிழகமே!’’ என்ற புத்தக வடிவில் இருப்பது அந்தப் பேருரை தான்! ‘‘உண்மைக் கவிஞனைப் போற்று! உயிர்க் கவிஞனைப் போற்று! உயிர்க் கவிகளைப் போற்று! புரட்சிக் கவிகளைப் போற்று! புதுமைக் கவிகளைப் போற்று! புத்துணர்ச்சி கவிஞரைப் போற்று! தருக்கரின் பிடியிலே சிக்கிவிட்ட தாழ்ந்த தமிழகமே! தலை நிமிர்ந்து நில்! தாயக விடுதலை விரும்பும் வீரக்கவிகளைப் போற்று! என்றெல்லாம் அண்ணா வேண்டினார், மறுமலர்ச்சித் தமிழகத்தில்.

பாரதிதாசன் பரம்பரை உயர்ந்தது! புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தனது கவிதைப் பணியினைக் கழகப்பணியாக உருவாக்கினார். தமிழகமெங்கும் அவர்தம் கவிதைக் குரல்கேட்டது! பல்கலைக் கழகத்திலேயிருந்து தமிழகமெங்கும் புயலெனச் சுழன்ற நெடுஞ்செழியன் கவிஞரின் கவிதைகளை எங்கும் எடுத்துச் சொன்னார்.

‘‘வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா

மகாராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா

கொலைவாளினை எட்டாமிகு கொடியோர் செயல் அற’’

என்ற உணர்ச்சியுரையை கேட்டவர்கள் விடுதலைக் கிளர்ச்சிக்குத் தம் உடலுழைப்பினைத் தந்துதவினார்.

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்

வெற்றித் தோள்கள்…. சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு’’

என்ற செந்தமிழ்த் தேன்சுவைப் பாடலை எத்தனை தரம் கேட்டாலும் இன்னும் தெவிட்டாதே! பேராசிரியர் அன்பழகன் அவர்களது திருமண வாழ்த்துச் செய்தியாக புரட்சிக் கவிஞர் பாடினர்! அந்தப் பாட்டு தமிழர் தம் மங்கிய உணர்வை கயங்கிய உள்ளத்தைக் கிளரச் செய்தது! ‘‘பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறந்தது. சிறுத்தையே வெளியே வா – எலியென உனை இகழ்ந்தவர் மருள புலியென செயல்படு!’’ என்றெல்லாம் அவர் சொன்ன பொன்மொழிகள் அறிவியக்கப் பணியாளர்களுக்கு படைக்கலன்களாக அமைந்தன. திராவிடர் கழக அரசியல் கலகக்களங்களைக் கண்டவர் கவிஞர்! புதுவையில் காலிகள் அவரை கல்லால் அடித்தனர் – கருஞ்சட்டையைக் கிழித்தனர் – கலைஞர் கருணாநிதியும் அப்போதுதான் அடிபட்டார்! அன்றைய மாநாட்டு நிகழ்ச்சியின் போது பிற்பகலில் அழகிரி அவர்கள் பேசும்போது, ‘‘காலையில் நான் வராதபோது நடக்கக் கூடாத நிகழ்ச்சிகள் நடந்ததாகக் கேள்விப்பட்டேன். நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக மலரட்டும். அன்றோர் நாள் சாக்ரடீசை நஞ்சூட்டிக் கொன்றுவிட்டபின் இன்றுவரை சாக்ரடீசைத் தேடுகிறார்கள். நமக்கொரு சாக்ரடீசு கிடைக்கவில்லை. அன்றோர் நாள் ஆப்ரகாம்லிங்கனைச் சுட்டுக் கொன்றுவிட்டபின் இன்றுவரை இலிங்கனைத் தேடுகிறார்கள்; ஆனால் நமக்கொரு ஆப்ரகாம் இலிங்கன் கிடைக்கவில்லை. இன்றும் நமது புரட்சிக் கவிஞரைக் கல்லால் அடித்துக் கொன்றுவிட்டால், பின்னால் பல ஆண்டுகள் நமக்கொரு புரட்சிக் கவிஞர் கிடைக்கவில்லையே என்று கொன்றவர்களே வருத்தப்படுவார்கள் என்று நெஞ்சத்தின் அதிர்ச்சியைக் கண்ணீரால் காட்டினார். கல்லால் அடித்த புதுவை மக்கள் கவிஞரை மக்கள் அணியின் தூதுவராகச் சட்டமன்றம் அனுப்பினர். பணியாற்றினார்; பாராட்டுரைகள் பலபெற்றார். மக்கள் கவிஞராக மறுமலர்ச்சித் தென்றலாகத் தமிழ்ப் பகைவரின் வைரியாக, வைரம் பாய்ந்த உள்ளத்தவராக உழைத்தார்! உயர்ந்தார்! தமிழகத்தின் சிற்றூர் அனைத்தும் புரட்சிக் கவிஞரின் பண்பாடின! பாண்டியன் பரிசு, இசையமுது கவிதைத் தொகுப்புகள், தமிழியக்கம், சேரதாண்டவம், தமிழச்சியின் கத்தி, பொன்முடிதன் காவியம், கவிதை, கட்டுரை ஆராய்ச்சியுரைகள் என்ற நீண்ட பட்டியல் நினைவிலே நிற்பவைகள் தான்! பாவேந்தர் பாரதிதாசன் ‘குயில்’ என்ற கவிதை இதழ் இன்பத் தமிழ்ச் சுரங்கம் – சுவைசொட்டும் சுவடியாக இன்றும் இலங்குகின்றன! எழுத்தால் வடிக்க இயலாத ஏற்றமும் சிறப்பும் புகழும் கொண்டிருந்த புரட்சிக் கவிஞர் தமது 73வது அகவையில் திராவிடத்திரு நாட்டின் மக்கள் எல்லாம் கண்ணீர் வடிக்க 21-4-64இல் பிரிவுற்றார்! மணிவிழாக் கண்ட மாபெரும் கவிஞரை மறக்கமுடியாத நாம் மாண்டசெய்தியையும் கேட்டுவிட்டோம் ‘வளமார் எமது திராவிடம் வாழ்க வாழ்கவே’’ எனக் கவிஞர் வாழ்த்திய தாயகத்தின் விடுதலை விரும்பும் மக்கள் வீழ்ந்தாலும் பாவேந்தரின் பாக்கள் பாசமுள்ளவர் தம் நேச உள்ளங்களில் தவழும்! பாரதிதாசரின் மரபு பார் முழுதும் புகழ்பரவ பாடிச் செல்லட்டுமே!

– குறள்நெறி: சித்திரை 19. தி.பி.1995 / மே 1, கி.பி.1964

 

+++++

bharathidasan07

தமிழ் தொன்மையும் தோலாப்புகழும் மிக்கதொரு மொழியாம் இனிமையும் எளிமையும் கொண்ட செந்தமிழ் தனித்தியங்கும் தகைமையும் தகுதியும் பெற்ற பண்பட்ட மொழி என்று கால்டுவேலர் போன்ற மேனாட்டார் ஏற்றிப் போற்றும் கூற்றினை மேற்கொண்டு தமிழகத்தில் தனித்தமிழ் இயக்கம் தொடங்கப்பெற்றது. மாண்புமிகு தமிழ் மாற்றாரின் படை எடுப்பால், வேற்று மொழிகளின் தாக்குதல்களால் புறக்கணிக்கப்பெற்றுப் போற்றுவாரற்றுக் கிடந்த காலத்தில்தான் எழுச்சி கொண்ட இயக்கம் துவண்டெழுந்தது. தனித்தியங்கும் வலிவும் பொலிவும் மிக்க தண்டமிழ் தரணியாளும் பொறுப்பிழந்து தாழ்ந்து கிடப்பதை நீக்கி, அரியணை ஏற்ற ஆட்சி செலுத்துமாறு அணிபெற வைத்தவர்கள் தனித்தமிழ் இயக்கத்தினர், மறைமலை அடிகள் போன்ற தமிழ்ப் பெரும் புலவர்களும் பாரதிதாசனார் போன்ற தமிழ்ப் படையின் தளபதிகளும் தறுகண்மையுடன் முன்னின்று செயல்பட்டனர். எனவேதான், இன்று தமிழ் வென்று நிற்கும் நிலைக்கு உயர்ந்துவிட்டது.

காலவெள்ளத்தில் கனிதமிழில் கலப்பு நிகழ்வது கண்டு மனம் பொறாத மறத் தமிழர் தளபதி ‘தமிழியக்கம்’ கண்டார். அதில் அவர் கூறுவதாவது –

பவன் மண்டல்’ முதலியன இனியேனும்

தமிழகத்தில் பயிலா வண்ணம்

அவண் சென்று முழங்கிடுவீர்! ஆங்கிலச் சொல்

இந்திமொழி வடசொல் யாவும்

இவண் தமிழிற் கலப்பதுண்டோ? பிராம்மணர்

கள் உண்ணும் இடம் இப்பேச்சில்

உவப்புண்டோ? தமிழ்மானம் ஒழிந்திடுதே

ஐயகோ உணர்வீர் நன்றே!’’

என்று வீறுசால் உரை நிகழ்த்தி வேங்கையெனத் தமிழர் கூட்டத்தை எழுச்சிக் கொள்ள வைத்தார். தமிழில் தூய்மையுடன் எழுத முடியும்; எழுதினால் அது இனிமையுற இயங்கும். அதனைப் புலவர்கள் செய்ய முன்வர வேண்டுகின்றார் அவர்.

‘தனித்தமிழில் தக்கபுதுக் காப்பியம்

நன்னூல் இயற்ற

நினைப்பாரேல் நம்புலவர் நிலவாவோ

ஆயிரநூல் தமிழகத்தே!’

என்று கூறும் சீரிய கருத்தினை சிந்தையிற்கொண்டு உழைக்க வேண்டும் நாம். மேலும் அவர் குயிலில் எழுதிவந்த ‘வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?’ என்னும் தொடர் கட்டுரையை நூலாக்கித் தர ஆவன செய்ய வேண்டும். வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும் என வீரமுடன் முழங்கிய தளபதி இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை எண்ணுந்தோறும் நெஞ்சம் துணுக்குறுகின்றது. இருப்பினும் அவர் நமக்கு இட்டுச் சென்ற கட்டளைகளைத் தொடுத்து முடிப்போம் வாரீர்!!!

‘கடல்போலும் எழுக! கடல் முழக்கம் போல்

கழறிடுக தமிழ் வாழ்கென்று!

கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம்

தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!!’

nellai-chokkalingam01

 

 

 

 

 

 

குறள்நெறி :வைகாசி 19, தி.பி.1994 /  சூன் 1, கி.பி. 1964

 

 

 

 

 

News

Read Previous

பாரதிதாசன் கவிதைகள் – வி.ஆர்.எம்.செட்டியார்

Read Next

துன்பம் …………..

Leave a Reply

Your email address will not be published.