தேர்தல் வருகிறது… நம் தேசத்தைக் காப்போம்

Vinkmag ad

 

 உலக நாடுகளில் நம் இந்திய தேசம் தனிச்சிறப்பு வாய்ந்த தேசம். இது ஜனநாயக பூமி! பல்வேறு மதம், இனம், குலம், மொழி, கலாச்சாரம் கலந்த கலவை மண்! வேற்றுமையில் ஒற்றுமை கொண்டிலங்கும் பாரதமிது! ஆன்மிக மணம் கமழும் நல்லிணக்க நாடு நம் தாய்நாடு!

உலகமே வியந்து போற்றும் நம் தேசத்தின் இறையாண்மைக்கு ஒட்டுமொத்தமாய் வேட்டு வைக்க வோட்டுக் கேட்டு வருகிறது பார‘தீய’ சக்தி.

வகுப்பு துவேசத்துடன் நல்லிணக்கத்தைச் சுக்கு நூறாய் உடைத்து நொறுக்கப் புறப்பட்டிருக்கின்றன பாசிச சக்திகள். வளர்ச்சி என்னும் மாய கோஷத்துடன் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஏவலாட்கள் களமிறங்கி விட்டார்கள்.

‘ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு’ என்று குஜராத்தின் தன் சொந்த மாநில மக்களைக் கொன்று குவித்த வகுப்பு வெறி இன்று நாடாளத் துடிக்கின்றது.

மதத்தின் பெயரால் நம் உள்ளங்களை பிரிப்பதை நாம் அனுமதிக்க முடியுமா? வகுப்புவாதிகள் நம் மீது ஆதிக்கம் செலுத்தினால் நம் தேசம் என்னாகும்? மோதலும் வெறுப்பும் அதிகரிக்கும். வேற்றுமை கோலோச்சும். இனவாதம் தலைதூக்கினால் நம் மண்ணின் அமைதி என்னாகும்? உலக அரங்கில் நம் தாய்தேசம் தலைகுனிந்து நிற்கும்.

ஆம்…! வகுப்புவெறி தாண்டவமாடிய வேளையில் ‘இனி எந்த முகத்தைவைத்துக் கொண்டு வெளிநாடு செல்வேன்’என இந்திய பிரதமரையே தலைகுனிய வைத்ததுதான் பாசிசம்!

பாசிசம் சிறுபான்மையினருக்கு மட்டும் எதிரானது அல்ல. பெரும்பான்மையினருக்கும் எதிரானது. நாட்டின் அமைதிக்கு நேர் எதிரானது. ஒற்றுமைக்கும், இந்திய தேசத்தின் இறையாண்மைக்கும் எதிரானது. தன் இருப்பை நிலை நிறுத்த யாவற்றையும் அழித் தொழிப்பதுதான் பாசிசம்.வகுப்புவாதிகளிடமிருந்து நம் நாட்டை மட்டுமல்ல நம் தமிழகத்தையும் காப்பற்ற வேண்டிய நேரமிது.

ஆம்…! உலக நாடுகளில் இந்திய தேசத்திற்கு எவ்வளவு சிறப்பும் தனித்துவமும் இருக்கின்றதோ அதே போல இந்திய மாநிலங்களில் நம் தமிழகம் தனித்துவமும், சிறப்பும் வாய்ந்தது.

மாமா மச்சானாக, அண்ணன் தம்பிகளாக வலம் வரும் தமிழகத்தில் பிரித்தாளும் சூழ்ச்சியோடு வகுப்பு வாதக் கூட்டம் கடை விரித்துவிட்டது. வட மாநிலங்களெல்லாம் வகுப்புத்தீ பற்றிய போது தமிழகம் அமைதிப்பூங்காவாகத் தான் எப்போதும் இருந்திருக்கின்றது. வகுப்புவாதம் நம் மண்ணுக்கு அந்நியமானது.

இது பெரியார் பகுத்தறிவித்த தமிழ்மண். நல்லிணக்கம் தமிழர் பண்பாடு. நமது பண்பாட்டை வட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யவேண்டிய இந் நாளில் தேர்தலை முன்னிறுத்தி வடமாநிலத்திலிருந்து வகுப்பு துவேசத்தை இறக்குமதி செய்ய தீய சக்திகள் தீவிரம் காட்டுகின்றன.

தங்களின் சுயலாபங்களுக்காக சில உதிரிக்கட்சிகள் பாரதீய சக்திகளோடு கூட்டணி வைத்திருப்பது துரதிஷ்டமானது.பெரியாரின் வாரிசு, திராவிடப் பாரம்பரியம்,

மதச்சார்பின்மை என்று நீட்டி முழங்கியவர்கள் இன்று வகுப்புவாதிகளோடு தோள் சேர்ந்து நிற்பதை என்னவென்று சொல்வது! தங்களின் சொந்த நலன்களுக்காக நம் தமிழகத்தின் அமைதியைக் குலைக்க அனுமதிக்கும் இக் கூட்டணியை புறந்தள்ள வேண்டிய நேரமிதுதான்.

வகுப்புவாதக் கூட்டணி நம் தமிழகத்தில் காலூன்ற நாம் அனுமதித்தால் தமிழகத்தின் அமைதி குலையும்,ஒற்றுமை சிதையும். வெறுப்பு எங்கும் நிலவும். அத்தகைய கசப்பான சூழலுக்கு நாம் ஒருபோதும் அனுமதியளிக்கக் கூடாது.

வகுப்புவாதக் கூட்டணியை இம் மண்ணிலிருந்து விரட்டியடிக்கவேண்டும். ஒவ்வொரு இந்தியக் குடிமகனுடைய மகத்தான பொறுப்பும் இதுதான். வாக்கு என்ற மகத்தான ஆயுதத்தால் பாசிச, வகுப்புவாதக் கூட்டத்தை விரட்டியடிப்போம். எல்லாரும் ஒன்றிணைந்து இத் தீய சக்திகளிடமிருந்து நம் தேசத்தைக் காப்போம்

News

Read Previous

ஜெயலலிதா ஆட்சியில்தான் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது

Read Next

இந்தியப்பாராளுமன்றத்தேர்தலில் ஃபாஸிசமும் வாக்காளர்களின் பொறுப்பும்

Leave a Reply

Your email address will not be published.