பெண்கள் செய்ய வேண்டியவையும் – செய்யக்கூடாதவையும் !

Vinkmag ad

மகளிர் பக்கம் :

பெண்கள்

செய்ய வேண்டியவையும் –

செய்யக்கூடாதவையும் !

 

நாகரிகம் என்ற பெயரில் அநாச்சாரங்களும், கலாச்சாரச் சீரழிவுகளும், அலங்கரிக்கப்பட்டு மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்டைவையும் அலங்காரமென மெருகூட்டப்பட்டு அவையனைத்தும் மார்க்கம் என்ற பெயரில் மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளன. இதைப் பின்பற்றுவதில் முஸ்லிம் சமுதாயப் பெண்களும் விதிவிலக்கல்ல.

ஒவ்வொரு பெண்ணும் தன் சமூகத்தில் தன்னுடைய திறமை, ஆளுமை போன்றவற்றைக் கொண்டு தான் ஈர்க்கப்பட வேண்டும் என்று ஆசைப்படுவது போல் தன்னுடைய அழகாலும் ஈர்க்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றாள். இவ்வாறு மிதமிஞ்சி அழகை மெருகூட்டுவதற்காக இறைவனின் வரையறைகளுக்கு அப்பாற்பட்ட முறைகளையும் நடைமுறைப்படுத்தத் துணிகின்றாள்.

பச்சை குத்தல்

சில பெண்கள் தம் அழகை மெருகூட்டுவதற்காகத் தம் உடம்பின் சில பாகங்களில் உருவங்களையோ அல்லது தமக்கு விருப்பத்துக்குரியவர்களின் பெயர்களையோ (உதாரணமாக : அவளின் நேசத்துக்குரிய நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோரின் பெயர்களைப்) பொறித்துப் பச்சை குத்துகின்றனர்.

இவ்வலங்காரம் இஸ்லாமிய வரையறைக்கு அப்பாற்பட்டதாகும். ஏனென்றால் மார்க்கத்தில் ஓர் உறுப்பை நோவினை செய்வதென்பது தடுக்கப்பட்ட செயலாகும். அது ஒரு வணக்க வழிபாட்டிற்காக இருந்தாலும் சரியே. இதனை புகாரியில் பதிவாகியுள்ள அபூதர்தா (ரளி) அவர்களின் சம்பவம் தெளிவுபடுத்துகின்றது. அதாவது அபூதர்தா (ரளி) அவர்கள் தமக்குரிய மற்றும் தம்மைச் சூழவுள்ள குடும்பத்திற்குரிய உரிமைகளையும் பேணாது இறைவனை நெருங்குவதற்காக இரவு முழுதாக வணக்கத்தில் ஈடுபட்டார். அச்சமயம் அவருடன் இருந்த மற்றொரு ஸஹாபியான சல்மான் (ரளி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். உன் இறைவனான அல்லாஹ்வுக்கு உம்மிடம் சில உரிமைகள் உள்ளன. இன்னும் உன் குடும்பத்தினருக்கும் உன்னிடம் சில உரிமைகள் உள்ளன. எனவே, ஒவ்வோர் உரிமையையும் அதன் உரியவர்களுக்கு வழங்கி விடுவீராக எனக் கூறினார். அப்போது இது நபியவர்களிடத்தில் சொல்லப்பட்ட போது நபியவர்கள், சல்மான் உண்மை கூறிவிட்டார் எனப் பதிலளித்தார்கள்.

இன்னும் இச்செயலில் ஈடுபடும் பெண்களை நபியவர்கள் சபித்தும் உள்ளார்கள். இதனை புகாரி நபிமொழித் தொகுப்பில் பதிவாகியுள்ள கீழ்வரும் ஹதீஸ் உணர்த்துகின்றது. அப்துல்லாஹ் பின் உமர் (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : தன் தலைமுடியுடன் ஒட்டு முடியைச் சேர்க்குமாறு வேண்டும் பெண்ணையும், இன்னும் தன் உடலில் பச்சை குத்துவதன் மூலம் அடையாளமிட வேண்டும் என்கின்ற பெண்களையும் நபியவர்கள் சபித்துள்ளார்கள். இன்னும் மார்க்க அறிஞர்கள் சிலர் இது பற்றிக் கூறுகையில், பச்சை குத்தப்பட்ட இடத்திலிருந்து இரத்தம் கசிந்து கொண்டே இருக்கிறது. இதனால் அவ்விடம் அசுத்தமாக ஆகிவிடுகின்றது. ஆகையால் பச்சை குத்தியவர் அவ்விடத்திலிருந்து எந்தவொரு பாதிப்பையோ அல்லது அவ்வுறுப்பின் பயனையோ இழந்து விடுவாரோ என ஐயப்படாத பட்சத்தில் பச்சை குத்தப்பட்ட இடத்தைக் காயப்படுத்தியேனும் அழிப்பது அவர் மீது கடமையாகும். அவ்வாறு அவர் பயப்படுவாரானால் அதைக் காயப்படுத்தாமல் விட்டு விட்டு அவர் பாவத்தில் விழுந்ததற்காக (தெளபா) பாவ மன்னிப்புக் கேட்டு மீளுதல் வேண்டும்.

மேலும் சிலர் இரு புருவ முடிகளும் இணைந்திருந்தால் அவை இரண்டிற்கும் மத்தியில் உரோமங்களை நீக்கி இடைவெளி ஏற்படுத்தல், அல்லது அடர்த்தியாக இருந்தால் அதனை மெல்லியதாக்கி உயர்த்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அதேபோல் வைபவங்களில் கலந்து கொள்ளும் பெண்கள், மணப்பெண்கள் போன்றோர் தங்களை அழகுபடுத்துவதற்காகத் தம்முடைய இரண்டு கை, கால்களில் இருக்கக்கூடிய உரோமங்களை நீக்கி அந்த இடங்களை மருதாணி இடுவதன் மூலம் அலங்கரித்துக் கொள்கின்றனர்.

முஸ்னத் அஹமத் என்னும் நபிமொழித் தொகுப்பு நூலில் பதிவாகியுள்ள நீண்ட சம்பவம் ஒன்று : இப்னு மஸ்ஊத் (ரளி) இவர்கள் கூறுகின்றார்கள் : நபியவர்கள் கழற்றக் கூடியவளையும், பல்லைக் கூறாக்கக்கூடியவளையும், முடி சேர்க்கக்கூடியவளையும், பச்சை குத்தக் கூடியவளையும் தடுத்துள்ளார்கள்.

இவ்வாறு அனுமதியற்ற முறையில் இறைவன் படைப்பிலிருந்து இல்லாத ஒன்றை உருவாக்குவதோ அல்லது இருக்கும் ஒன்றை நீக்குவதோ இறைவனின் படைப்பை மாற்றியமைப்பதில் உள்ளடங்கும்.

இஸ்லாம் எவ்வாறு ஒரு பெண் தனது அந்தரங்கப் பகுதியிலிருந்தும் அக்குள் பகுதியிலிருந்தும் உள்ள முடியை நீக்குவதைக் கடமையாக்கியுள்ளதோ அதேபோல் சில இடங்களிலிருந்து முடி அகற்றப்படுவதை ஹராமாக்குகின்றது. என்றாலும் பெண்கள் மீசை, தாடி போன்றதன் பொதுவான வடிவத்திற்கு மாற்றமானவை முளைத்தால் அதை நீக்கி விடுவதில் இஸ்லாம் அவர்களுக்கு அனுமதியை வழங்குகின்றது.

மேலும் சிலருடைய பற்கள் சீரில்லாமல் அலங்கோலமாக முளைத்திருக்கும். உதாரணமாக முரசு முழுவதும் அடுக்குப்பல்லாக முளைத்தல் அல்லது முரசில் அங்கொன்று இங்கொன்றுமாக வாயை மூட முடியாத அளவிற்கு வாய் நிரம்பக் காணப்படும். இது போன்ற சந்தர்ப்பங்களில் சிகிச்சை மூலம் சீராக்கிக் கொள்வது அனுமதியாகும். ஆனால் அழகிற்காக எந்தவிதச் சிக்கலும் அல்லது தடையும் உடம்பிற்கு ஏற்படாத நிலையில் பல்லைக் கூறாக்கல், அழகுபடுத்தி சமப்படுத்தல் என்பவற்றை நபியவர்கள் சபித்துள்ளார்கள் என்பதைப் பெண்கள் நன்றாக விளங்கிக்கொண்டு செயல்பட வேண்டும். இறைவனால் தடைசெய்யப்பட்ட அலங்கார முறைகளைத் தவிர்த்து இறைவனின் வரையறைகளைக் கடைப்பிடிப்போமாக.

-ரிப்கா பின்த் ஆதம்பாவா

அஷ்ஷரபிய்யா, இலங்கை.

 

நன்றி : இனிய திசைகள்  – மார்ச் 2014

News

Read Previous

என்றும் உள்ள தென்றமிழ்- நாமக்கல் கவிஞர்

Read Next

திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

Leave a Reply

Your email address will not be published.