வங்கி டெபாசிட்… பாதுகாப்பானதா?

Vinkmag ad

 

வங்கி டெபாசிட்… பாதுகாப்பானதா?

ஒரே வங்கியின் பல கிளைகளில் எவ்வளவு தொகை வைத்திருந்தாலும், வங்கி திவால் ஆகும்பட்சத்தில் ரூபாய் ஒரு லட்சம்தான் இன்ஷூரன்ஸ் கிடைக்கும்.

நாம் அனைவரும் வங்கிகளில் டெபாசிட் செய்கிறோம். சட்டரீதியாகப் பார்த்தால், இது நாம் வங்கிகளுக்குத் தரும் பாதுகாப்பற்ற (Unsecured) கடனாகும். வங்கி திவாலானால்,  நாம் போட்டிருக்கும் இந்த டெபாசிட் பணம் என்னவாகும் என்பது பலரது  கேள்வி.

வங்கியிலிருக்கும் சிறு வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க ரூபாய் ஒரு லட்சம் வரை இன்ஷூரன்ஸ் கட்டாயமாக இருக்கவேண்டும் என்ற விதி உள்ளது. ரூபாய் ஒரு லட்சத்துக்கு மேல் இருக்கும் தொகைக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை என்பதே உண்மை.

ஆனால், கடந்தகால நடவடிக்கை களை வைத்துப் பார்க்கும்போது, ஒரு வங்கி திவாலானால், அதை மற்றொரு பெரிய வங்கியுடன் நமது ரிசர்வ் வங்கி இணைத்துவிடுகிறது. ஆகவே, இந்திய மக்களுக்கு வங்கிகளின் மீது அதிக நம்பிக்கை இன்றளவும் உள்ளது.

நம் அனைவருக்கும் வங்கிகளில் உள்ள டெபாசிட் ரூபாய் ஒரு லட்சம் வரைக்கும் இன்ஷூரன்ஸ் இருப்பது தெரிந்திருந்தாலும், அதன் நுணுக்கங்கள் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த நுணுக்கங்களைப் பற்றி சிறிது தெரிந்துகொள்வோம்.

அனைத்து கமர்ஷியல் வங்கிகளும், இந்தியாவில் செயல்படும் அனைத்து வெளிநாட்டு வங்கிகளும், அனைத்து பிராந்திய கிராமப்புற வங்கிகளும் (Regional Rural Banks) மற்றும் லோக்கல் ஏரியா வங்கிகளும் (Local  Area Banks) இந்தக் காப்பீட்டை கட்டாயமாகத் தரவேண்டும். மேகாலயா, லட்சத் தீவுகள், சண்டிகர் மற்றும் தாத்ரா – நாகர் ஹவேலி ஆகிய இடங்களைத் தவிர்த்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளும் இந்தக் காப்பீட்டை தரவேண்டும். முதன்மை கூட்டுறவு சங்கங்கள் (Primary Cooperative Societies) இந்தக் காப்பீட்டை வழங்குவதில்லை.

இந்த இன்ஷூரன்ஸை வழங்குவது நமது மத்திய ரிசர்வ் வங்கியினுடைய துணை நிறுவனமான டி.ஐ.சி.ஜி.சி என்று அழைக்கப்படும் டெபாசிட் இன்ஷூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரன்டி கார்ப்பரேஷன் (DICGC-Deposit Insurance & Credit Guarantee Corporation) ஆகும். இந்த இன்ஷூரன்ஸை வழங்குவதற்கு அனைத்து வங்கிகளும் இந்த நிறுவனத்துக்கு ப்ரீமியத் தொகையைத் தாங்கள் வைத்திருக்கும் டெபாசிட்டின் அடிப்படையில்  செலுத்துகின்றன.

சேமிப்பு, நடப்பு, ரெக்கரிங் மற்றும் வைப்பு நிதி ஆகிய அனைத்துக் கணக்குகளையும் இன்ஷூரன்ஸ் செய்கிறது டி.ஐ.சி.ஜி.சி. இந்த நிறுவனம் தரும் காப்பீட்டில் ஒரு நபர் எத்தனை லட்சம் ரூபாயை வைத்திருந்தாலும் அசலும் வட்டியும் சேர்த்து அதிகபட்சமாக ஒருவருக்கு ரூபாய் ஒரு லட்சம் வரைக்கும்தான் தரப்படும். ஒரு நபர் ஒரே வங்கியின் பல கிளைகளில் எவ்வளவு தொகை வைத்திருந்தாலும், அந்த வங்கி திவால் ஆகும்பட்சத்தில் அல்லது அதன் லைசென்ஸ் மத்திய ரிசர்வ் வங்கியால் ரத்துச் செய்யப்படும்போது,  மொத்தமாக ரூபாய் ஒரு லட்சம்தான் இன்ஷூரன்ஸ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இன்ஷூரன்ஸ் முக்கியம் என்று நினைப்பவர்கள் பல வங்கிகளில் தங்கள் டெபாசிட்டை பரவலாக வைத்துக்கொள்வது நல்லது.

இந்த ஒரு லட்சம் ரூபாயில் வட்டியும் அசலும் அடங்கும். உதாரணத்துக்கு, ஒருவர் 90,000 ரூபாயை டெபாசிட் செய்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். வங்கி திவாலான தேதியில் அவருக்கு வட்டி ரூ.8,000 என்று வைத்துக்கொள்வோம். இந்தக் காப்பீடு மூலம் அவருக்கு ரூ.98,000 ரூபாய் கிடைத்துவிடும். அதேசமயத்தில், ஒருவர் ரூபாய் 1.25 லட்சம் டெபாசிட் செய்து வைத்துள்ளார்; அதற்கான வட்டி அன்றைய தேதியில் 15 ஆயிரம் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு மொத்தம் வங்கித் தரவேண்டியது ரூ. 1.40 லட்சம் என்றாலும், ரூபாய் ஒரு லட்சம்தான் இதன்மூலம் கிடைக்கும்.

இந்த ஒரு லட்சத்தைக் கணக்கிடும்போது, அந்த வங்கியில் அவர் வைத்துள்ள அனைத்து அக்கவுன்ட்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். உதாரணத்துக்கு, ஒருவர் சேமிப்புக் கணக்கில் ரூ.10,000, நடப்புக் கணக்கில் ரூ.20,000, ஃபிக்ஸட் டெபாசிட்டில் ரூ.90,000 ஆயிரம் என வைத்திருந்தால், அவருக்கு மொத்தத்தில் ரூபாய் ஒரு லட்சம்தான் செட்டில் ஆகும்.

அதேசமயம், வெவ்வேறு கெப்பாசிட்டியில் (Capacity) ஒரே வங்கியில் உள்ள கணக்குகள் வெவ்வேறாக எடுத்துக்கொள்ளப்படும். உதாரணத்துக்கு, திவ்யா என்பவர் தனது பெயரில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். அதேசமயம், திவ்யா பார்ட்னராக இருக்கும் நிறுவனத்தில் இன்னொரு கணக்கை வைத்துள்ளார். அல்லது அவர் தனது குழந்தைக்குப் பாதுகாப்பாளராக (Guardian) இன்னொரு சேமிப்புக் கணக்கில் உள்ளார். அதேபோல், மற்றொரு நிறுவனத்தில் இயக்குநராக (Director) உள்ளார் என வைத்துக்கொள்வோம். இந்த அனைத்துக் கணக்குகளிலும் அவர் வெவ்வேறு கெப்பாசிட்டிகளில் உள்ளதால், அந்த வங்கி கவிழும் போது, அந்த ஒவ்வொரு கணக்குக்கும் உச்சபட்சமாக அசலும் வட்டியும் சேர்த்து ரூபாய் ஒரு லட்சம் கிடைக்கும்.

ஜாயின்ட் கணக்குகள் வைத்துக் கொள்ளும்போது,  கணவன் ஒரு கணக்கில் முதல் அக்கவுன்ட் ஹோல்டராகவும், மனைவி இரண்டாவது அக்கவுன்ட் ஹோல்டராகவும் இருக்கிறார்கள். அதே வங்கியில் இன்னொரு  கணக்கில் மனைவி முதல் அக்கவுன்ட் ஹோல்டராகவும், கணவர் இரண்டாவது அக்கவுன்ட் ஹோல்டராகவும் இருந்தால், இந்த  இரண்டு கணக்குக்குமே உச்சபட்சமாக ரூபாய் ஒரு லட்சம் தனித்தனியாகக் கிடைக்கும். ஆனால், அந்த இரண்டு கணக்குகளிலும் கணவனே முதல் அக்கவுன்ட் ஹோல்டராக இருந்தால் இரண்டு கணக்குகளுக்கும் சேர்த்து ரூபாய் ஒரு லட்சம்தான் கிடைக்கும்.

காப்பீட்டுத் தொகையைத் தரும்போது, வங்கிக்கு வாடிக்கையாளர் கடன் பாக்கியிருந்தால் அதைப் பிடித்துக்கொண்டு தர வங்கிக்கு உரிமை உள்ளது. இழப்பீட்டுத் தொகையை டி.ஐ.சி.ஜி.சி நேரடியாகத் தராது.  திவாலான வங்கியின் சொத்துகளை விற்று சீர்படுத்துவதற்காக (Liquidate) அமர்த்தப்பட்ட லிக்விடேட்டர் (Liquidator)  மூலமாகத்தான் காப்பீட்டுத் தொகை வாடிக்கையாளர்களுக்குத் தரப்படும். வங்கிகள் இணைக்கப்பட்டால், திவாலான வங்கியை வாங்கிய வங்கிக்கு இந்த இன்ஷூரன்ஸ் தொகைத் தரப்படும்.

இந்தியாவில் டெபாசிட்டுக்கான காப்பீட்டுத் தொகைக் குறைவாகவே உள்ளது. அமெரிக்காவில் ரூ.1.55 கோடி ($2,50,000) வரை இந்த இன்ஷூரன்ஸ் தொகைத் தரப்படுகிறது. இந்த இன்ஷூரன்ஸ் தொகையை உயர்த்த  ஆர்பிஐ யோசிக்கவேண்டும். தவிர, டெபாசிட் வாங்கும் அனைத்து நிறுவனங்களும் இந்த இன்ஷூரன்ஸ் எடுத்தால்தான் மக்கள் நிம்மதி அடைவார்கள்!

News

Read Previous

வங்கி கணக்கு விபரம் அறிய ……………

Read Next

முதலுதவிப் பெட்டியில் என்னென்ன பொருட்கள் தேவை

Leave a Reply

Your email address will not be published.