இலங்கும் இஸ்லாமிய இல்லறம்

Vinkmag ad

Ilangum1 

தொகுப்பாசிரியர்

பேராசிரியர் முனைவர்

திருமலர். எம்.எம். மீரான் பிள்ளை

முன்னாள் துணை முதல்வர் & தமிழ்த் துறைத் தலைவர்

முதனிலை ஆராய்ச்சியாளர்

யு.ஜி.சி. முதுநிலை ஆய்வுத் திட்டம்

பல்கலைக் கழகக் கல்லூரி

திருவனந்தபுரம்

செல் : 94950 11317

 

உள்ளடக்கம்

1 இல்லறம் பற்றிய இறைமறை நிறைமொழிகள்

2. இல்லறம் பற்றிய இறைநபி இன்மொழிகள்

3. திருநபியின் திருமண வாழ்த்து இறைஞ்சுதல்

4. திருமண ஒப்பந்த திருவாய் வாழ்த்து வரிகள்

5. ஆண் பெண் பற்றிய அணிமொழிகள்

 

இல்லறம் பற்றிய இறைமறை நிறைமொழிகள்

( குர்ஆன் )

1 உங்களில் யாருக்காவது வாழ்க்கைத் துணை இல்லாவிடில் அவர்கள் திருமணம் செய்து விடுங்கள் (24 : 32)

2. நீங்கள் (திருமணம்) செய்து கொள்ளும் பெண்களுக்கு அவர்களுடைய மஹர்களை (மணக் கட்டணம்) கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள் (4 :4)

3. நம்பிக்கையாளர்களே ! பெண்களை பலவந்தமாக அடைவது உங்களுக்கு ஆகுமானதல்ல (4 : 19)

4. அவர்கள் (மனைவியர்) உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் அமைகின்றீர்கள். (2 :187)

5. உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் எனவே விருப்பபடி உங்கள் விளைநிலங்களுக்கு செல்லுங்கள். (2 :223)

6. உங்களிருந்தே உங்களுக்காக மனைவியரை இறைவன் படைத்திருக்கிறான். உங்கள் மனைவியிலிருந்து சந்ததிகளையும் (அவர்களிலிருந்து) பேரன் பேத்தியரையும் உற்பத்தி செய்து உங்களுக்கு நல்ல உணவுகளையும் புகட்டுகிறான். (16 : 72)

7. அவர்களிடம் (மனைவியர்) கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். (4 : 19)

8. நல்லொழுக்கமுள்ள பெண்கள் பணிந்து நடப்பார்கள். (4 : 34)

9. எவர்கள் நம்பிக்கையாளரான கற்புடைய அப்பாவிப் பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ அவர்கள் உறுதியாக இம்மையிலும் மறுமையிலும் சபிக்கப்படுவார்கள். இன்னும் அவர்களுக்கு கடுமையான வேதனையும் உண்டு. (24 : 23)

10. (மனிதர்களாகிய) அவர்கள் தாமாகவே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். இறைவனாகிய நாம் அதை அவர்களுக்கு விதிக்க வில்லை. (57 : 27)

இல்லறம் பற்றிய இறைநபி இன்மொழிகள்

( அல் ஹதீஸ் )

1. திருமணம் செய்தல் என் வாழ்க்கை வழிமுறையாகும் (சுன்னத்) எவர் இந்த வழியினை பின்பற்றவில்லையோ அவர் எனது வழிமுறை தவறியவர் ஆவார்.

2. திருமணம் செய்து கொண்டவர் மதத்தில் ஒரு பகுதியைப் பெற்று விட்டார். மறுபகுதியை அவர் இறையச்சத்தில் பெற வேண்டும்.

3. பணக்காரியைவிட, குலச்சிறப்புடையவளைவிட, அழகுள்ளவளைவிட மதமார்க்கப் பக்தியுள்ள பெண்ணை தேடித்திருமணம் செய்து கொள்ளுங்கள்.

4. உங்களை மிகவும் நேசிக்கும் பெண்ணை, பிள்ளைகளைப் பெறும்  தகுதிபெற்ற பெண்ணை அறிந்து மணந்து கொள்ளுங்கள்.

5. நீங்கள் மணமுடிக்கப் பேசிச் செல்லும் பெண்ணை பார்க்க இயலுமானால் பார்த்துக் கொள்ளுங்கள். அது உங்களிடையே இணக்கத்தையும், அன்பையும் ஏற்படுத்தக் கூடும்.

6. ஒருவர் திருமணத்திற்காக பெண் பேசும் வீட்டாரிடம், அவர் கை விடாத வரையில் மற்றவர் பெண்பேச முயல வேண்டாம்.

7. தம் பொறுப்பாளரிடம் அனுமதி பெற்று பெண்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

8. பெண்களிடம் ஒப்புதல் பெற்று அவர்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்.

9. மஹர் (மணக்கட்டணம்) சிறிதே ஆயினும் திருமண வேளையில் கொடுக்கப்பட வேண்டும்.

10. விலை மதிக்கக்கூடிய ஒரு பொருளையோ அதன் விலையையோ மஹராகக் கொடுக்கலாம்.

11. எவரது நல்லொழுக்கம் பற்றி உங்களுக்கு திருப்தி உள்ளதோ அவர் பெண்கேட்டு வந்தால் திருமணம் செய்து வையுங்கள்.

12. நல்லொழுக்கமுள்ள நங்கையை மணமுடிப்பவர் வாழ்வில் வெற்றி பெறுகிறார்.

13. உங்கள் திருமணத்தை பலர் அறிய வெளிப்படையாகச் செய்யுங்கள். இறையில்லங்களில் (மஸ்ஜிதுகள்) நடத்துங்கள்.

14. திருமணங்களில் இறையருள் நிறைந்தவை எளிமையான திருமணங்களே.

15. இறைப் புகழுரைக்கும் குத்பா பேருரைக்குப் பின் திருமணத்தை நடத்துங்கள்.

16. இருவருக்கிடையே அன்பை வளர்க்க திருமணத்திற்கு ஈடாக வேறு எதையும் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்.

17. திருமணம் செய்து கொள்பவரின் நன்மை வேண்டியும் அபிவிருத்திக்காகவும் தீங்கை விட்டு பாதுகாவல் தேடியும் இறைஞ்சுங்கள்.

18. உங்கள் மனைவிக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இடமும் அளிக்கவேண்டியது உங்களது கட்டாயக் கடமையாகும்.

19. உங்களுக்கு மனைவி மீது சில கடமைகள் உண்டு. அவருக்கும் உங்கள் மேல் சில கடமைகள் உண்டு.

20. எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் உங்களின் மனைவி உங்களுக்கு மணமுடித்து வைக்கப்பட்டாரோ அந்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டியது உங்களின் முக்கியக் கடமையாகும்.

21. ஒரு பெண் தன் கணவனுடைய இல்லத்தில் அரசியாவார்.

22. இளையோரே ! உங்களில் ஆற்றலுடைய ஒவ்வொருவரும் திருமணம் செய்துகொள்க. ஏனெனின் இது (தீய) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பை பாதுகாக்கும்.

23. உங்கள் மனைவியிடம் நீதியாகவும் நேர்மையாகவும் நல்லவிதமாகவும் நடந்து கொள்ளுங்கள்.

24. உங்களில் எவர் தமது மனைவிக்கு நல்லவரோ அவரே உலகில் மேலானவர்.

25. தன் மனைவியை எவரும் வெறுக்கலாகாது. அவளுடைய ஒரு குணம் பிடிக்க வில்லையானால் மற்றொரு நல்ல குணத்திற்காக நேசிப்பீர்களாக !

26. உலகம் என்பது பெருஞ்செல்வம்; நல்ல பெண்ணே அதில் சிறந்த பொருள்.

27. இவ்வுலக இன்பங்களில் மிகவும் மேலானது நற்பண்புடைய பெண்ணே.

28. ஒருவர் மற்றொருவருக்கு சிரம் பணிய அனுமதிக்கப்பட்டிருந்தால் மனைவி தன் கணவனுக்கு சிரம் பணிய கட்டளை இட்டிருப்பேன்.

29. கணவன் திருப்தியுற்ற நிலையில் இறக்கும் பெண் சுவனபதி செல்வது உறுதி.

30. தம் கணவர் காண முகம் மலர்பவளும், அவனது கட்டளையை பின்பற்றி நடப்பவளும், உடலாலும் பொருளாலும் மாறுபட்டு அவரின் அதிருப்தியை அடையாதவளுமாகிய பெண்ணே பெண்களில் மிகச் சிறந்தவளாவாள்.

31. ஒரு பெண் தக்க காரணமின்றி தன் கணவனை விட்டு விலகிச் சென்று படுப்பாளாயின் அவளை வானவர்கள் (மலக்குகள்) சபித்துக்கொண்டேயிருப்பர்.

32. பெண்கள் ஆதாமின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவர்கள். அதனை நிமிர்த்த முயன்றால் அது உடைந்து விடக்கூடும். ஆதலின் நல்லவற்றை மென்மையாக எடுத்துரைத்து திருந்திட முயலுங்கள்.

33. நாணமில்லாத பெண் உப்பில்லாத பண்டம் போன்றவன்.

34. பெண்களின் முகத்தில் அடிக்காதீர். அவர்களை ஏளனம் செய்யாதீர். தனியாக வேறிடங்களில் தங்கவும் அனுமதியாதீர்.

35. பருவம் அடையும்வரை இரு சிறுமிகளை போற்றிப் பேணுபவர் சொர்க்கத்தில் என்னோடு நெருங்கி இருப்பர்.

36. பருவப் பெண்ணை இவ்வுலகில் பாதுகாக்கும் செயல் மறுமையில் நரகத் தீயிலிருந்து பாதுகாக்கும் நல்ல திரையாகும்.

37. தகுந்த காரணமின்றி ஒரு ஆணோ பெண்ணோ விவாகரத்து கோரினால் அவர்கள் சுவனத்தின் நறுமணத்தை நுகர முடியாது.

திருநபியின் திருமண வாழ்த்து இறைஞ்சுதல்

( துஆ )

”பரக்கல்லாஹு லக வபாரக்க அலைக்க வஜமஅ

பயனக்குமா ஃபீ கைர் “

பொருள்

“இறைவன் உமக்கு அருள் செய்வானாக மேலும் உம்மீது அபிவிருத்தியை சொரிவானாக ! உங்கள் இருவரையும் நலனில் ஒன்றிணைப்பானாக !”

 

தித்திக்கும் தீந்தமிழில் திருமணப் பேருரை

( நிக்காஹ் குத்பா )

 

இறைவன் தனக்கே எல்லாப் புகழும் !

அவனையே புகழ்வோம் ! அவன் துணை நாடுவோம் !

அவனையே நம்புவோம் ! அவனே அடைக்கலம் !

நம்முள் ஆத்மா நம் செயல் அனைத்திலும்

தீமைகள் ஓடத் தேடுவோம் காவல் !

ஒருவரை நாதன் உயர்த்திட நாடிடின்

ஒருவரும் அவனை ஒழித்திட இயலார் !

ஒருவரை நாதன் ஒழித்திட நாடிடின்

ஒருவரும் அவனை உயர்த்திட இயலார் !

ஆண்டவன் அல்லால் அல்லர் யாரும்

வணங்குதற் குரியோர் வாய்மை உரைத்தோம் !

அவனது அடியார் அண்ணல் நபிகள்

தூதரும் என்றே துணிந்தோம் யாமே !

உலகத்தீரே உங்கள் இறையை

அஞ்சுக ! அவனே அனைவர் தம்மையும்

ஆக்கினன் ஒன்றாம் ஆத்மாவினின்றே !

அதனின்று அதற்கோர் துணையை

ஆக்கினன் ; பின்னர் அம் முறையாக

பரவச் செய்தான் பல ஆண் பெண்களை

ஆதலின் அந்த ஆதியை அஞ்சுக !

தமிழில் :

இறையருள் கவிமணி

பேராசிரியர் டாக்டர் மர்ஹும் கா. அப்துல் கபூர்.

 

திருமண ஒப்பந்த திருவாய் வாழ்த்து வரிகள்

 

இஸ்லாமிய இல்லற வீணையின்

இருமன ராக சன்மார்க்கச் சங்கமமே !

இறைநபி இலக்கண இலக்கு

கணம் மாறா நடைமுறை இலக்கியங்களே !

இணையிலர் ஏக இறைவனின்

மாபெரும் மறைக் கயிற்றினை

இரு கைகளால் இறுகப்பற்றி

இறை நம்பிக்கை முனை நோக்கி

கலியாணப் பயணக் காதல் கண்மணிகளே !

இருமெய்யாக பிறந்திருந்தும்

ஒரு மெய்யான நேர் பாதையில்

ஒன்றிணைந்து ஒருமையான

பெருமை மிகு உயிர்மைகளே !

இருவேறு சோலை வழியாக

ஒரு கிளையில் வந்தமர்ந்து

ஒன்றிணைந்த புல்புல் புள்களே !

மார்க்கச் சோலையில் இதழ் விரித்து

இணைந்து மணம் வர்ணம் பெற்று

பூரணம் நிறைந்த புது மொட்டுகளே !

கலியாண ராக கானம் பாடி

பறக்கின்ற தவ்கீத வானம் பாடிகளே !

தீன் சோலைத் தோட்டத்திலே

துள்ளும் ஈமான்களாய் திகழ்க !

தம்பதியை திருப்பதியாய் ஏற்று

திருமதியே திருப்பதிகம் பாடிடுக !

தங்களகம் நிறைய மங்களமாகுக !

தம் கால மெலாம் மங்கலமாகுக !!

வாழ்வு வீதியில் சீர் சிறப்போடு

அன்புத் தேரோட்டி பண்பு காட்டிடுக !

மகர் தந்த மகரந்த சேர்க்

கைபிடித்து கண் கலங்காமல்

மதினா நாதர்வழி நன்னடை சென்றிடுக !

அடிக் கரும்பில் கற்கண்டாய்

இன்சுவையை இதயமுற சுவைத்திடுக !

வாழ்த்த நாதந்த நாதன்

நன்மறை தரும் வழியில்

நாணய நாநய வாழ்வு நாடிடுக !

தீன் வான் தவ்தீத நிலாக்களே !

குழந்தை நட்சத்திரக் குழாமுடன் குலவுக !

சிருங்கார உணர்வு ரீங்காரமிடும் !

சிங்கார வண்டுகளாய் சிறகடிக்க !

பச்சைக் கிளிகளாய் பார் வானில்

பேருவுவ கையுடன் பயணம் செய்திடுக !

இணைக் குயில்களாய் எழுந்து

ஏதத்வ பண்பாட்டு இசைத்திடுக !

பிள்ளைத் தமிழ் பாடிக் களிக்கும்

கிள்ளைகளை கிளைகளில் தருக !

மனக் கிழிசலை தைக்கின்ற

தையலாய் மெல்லிழையாய்

குடும்ப வரலாற்றில் பதிந்திடுக !

ஆடையில்லாதவன் அரை மனிதன்

ஆள் பாதி ஆடைபாதி ஆதலினால்

துணையை அழகான துணியாக

துணிந்தணிந்து துலக்கம் பெறுக !

சீரிய சேயிழைச் சேலைச் சோலையே !

வசந்தமாய் வாழ்வில் வந்தவனை

வாசமாய் நேசமுடன் சூடிடுக !

இறை ஒளியில் தினமும் மலர்ந்த

நிறமும் மணமும் நிரந்தரம் நல்கும்

திருமலராய் திக்கெட்டும் திகழ்க !

ஆரணங்கே ! ஆடவன் நெஞ்சில்

ஆபரணமாய் தோரணமாய் திகழ்க !

புதுமணவாளன் பெருங்கரங்களில்

புல்லாங்குழலாய் பாட்டு இசைத்திடுக !

குடும்ப நிலத்தில் இல்லற விதைதூவி

அன்பு ஆதரவு நாற்று நட்டு

ஒழுக்க நீர்பாய்ச்சி கல்வி உரமிட்டு

ஐ ஆர் எட்டாக அதிகமாக பல

அருமணிகளை அறுவடை செய்க !

இல்லற வாழ்வில் நல்லறம் பேணி

சொல்லறம் திறம்பாது வாழ்ந்திடுக !

அறிவு ஆற்றல் அஞ்சா நெஞ்சம்

பொன் பொருள் புகழ் பூமி

கல்வி குணம் நல்ல மக்கள்

இளமை தோற்றம் இன்பம்

வெற்றி வீடு உடல்நலம் என

பேறுபதினாறும் பெற்றிடுக !

நாவினிக்க நெஞ்சினிக்க நாட்டார்

வாழ்த்து வளம் பாட்டிசைக்க

பாட்டாகப் பட்டாகத் துலங்கிடுக !

மறைத்தேன் மலைத்தேனமுதம்

இறைத்தேன் சுவைத் தேன் ரசம்

பலவாறாய் சுரக்கப் பருகிடுக !

மானம் மாய்க்கும் மது சூது மாது

பாதை மாற்றிடும் புகை போதை சூடி

நெஞ்சம் சிதைக்கும் லஞ்ச வஞ்ச வட்டி

எட்டியாய்க் கருதி எட்டிப்போயிடுக !

வீணாக விறகாக எரியாமல்

இணையின் விரல் நுனியில்

வீணையாய் இணைந்திடுக !

கலியாணக் குலக் கொழுந்தே !

கொழுநனெனும் கொழுகொம்பில்

பற்றிப் படர்ந்து பரவிடுக !

ஒருவருக்கொருவர் நீவிர்

கதகதப்பான கம்பளிபோல்

வெடவெடக்கும் வேறுபாடு

குளிர் போக்கி வாழ்ந்திடுக !

இனத் தன்மான ஆடையை

எக்காலமும் மாறாது காத்திடுக !

வெயில் வெறுப்பு காத்து நிற்கும்

துணியாய் துணையை துணிந்தணிக !

வேதனை அழுக்கு நீக்கும்

வெண் போர்வை ஆயிடுக !

 

ஆள்பவள் ஆண் பேணுபவள் பெண்

இலக்கணம் எக்கணமும் கோணாமல்

இலக்கியமாய் இலங்கி இருந்திடுக !

தேன் இனிமை பால் பழம்

அமுதும் சுவையுமாய் கலந்திடுக !

தீங்கனி தேனமுதம் பருகி

இல்லறக் கடலில் மூழ்கி முத்தெடுத்து

பிள்ளைக் காவியங்கள் பல

பாரினில் படைத்து அளித்திடுக !

ஆல்போல் தழைத்தெழுந்து

அறுகுபோல் வேரோடிப்பரந்து

வாழையடி வாழையாக வளர்ந்து

வம்சம் தழைத்து பெருகுமாறு

வளம் நலம் தினமும் பெற்றிடுக !

மனம் புரியாத மகிழ்ச்சிப் பேரலையில்

பல்லாண்டு பாடிடுவேன் ! பார்புகழ !

பன்னீர் பூக்கள் வாசம் பெருகிட

ஜவ்வாது கஸ்த்தூரி சந்தனப் பூமழை

வாழ்த்துகள் வளமாய் சொரிந்திடுக !

 

ஆண் பெண் பற்றிய அணிமொழிகள்

 

1.மனைக்கு தலைவி மனைவி, அவள் என்றும் தன் தலைவனான கணவனுக்கும் தம் பிள்ளைகளுக்கும் தலைவியாக இருத்தல் வேண்டும். தலைவலி ஆகிவிடக் கூடாது.

2. இல்லத்தை ஆள்பவள் இல்லாள். இல்லத்து ஆளின் இதயத்தை ஆள்பவளாக அவள் இருத்தல் வேண்டும். இல்லாதவளாக அவள் போய்விடக் கூடாது.

3. ’பெண் தாதி’ என்பதே ‘பெண்டாட்டி’ ஆகியது கணவன். பிள்ளைகள், பெற்றோர், உறவினர் ஆகியவர்களை தாதி (செவிலி) போல் போற்றிப் பாதுகாக்க வேண்டியவளாதலின் இப்பெயர் பெற்றனள்.

4. கல்யாணக் கன்னியர்கள் கண்ணாடிப் பாத்திரங்கள், கை நழுவி விடாமல் கவனமாகப் புழங்குங்கள்.

5. வேறொரு வீட்டுச் சோலையிலிருந்து கணவன் வீட்டுத் தோட்டத்திற்கு வந்த இள மூங்கிலே புது மங்கை, கணவன் நினைத்தால் இவளைக் குடும்பப் புகழ்பாடும் புல்லாங்குழலாக மாற்றலாம்; அடுப்பூதும் ஊது குழலாகவும் மாற்றலாம்.

6. வருவாய், வெளியுறவுத் துறைகள், பொறுப்புடைய, குடும்ப தேசத்தின் பிரதமர் கணவன், உள்துறை குடும்ப நலத்துறை அமைச்சரே மனைவி.

7. புது மனைவி புருஷன் வீட்டிற்கு புகுத்த புத்தழகு ஓவியம். கணவன் அதை கட்டிலறையில் மாட்டி அழகு பார்க்கலாம். சமையல் அட்டிலறையில் பூட்டி வைத்து கரியும் புகையும் படியவும் செய்யலாம்.

8. கல்யாணம் செய்து வந்த கன்னியர்களை மனம் கன்னிப் போகாமல் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது கணவர்களின் கடமையாகும். அவர்கள் உரிமையில் ஒருபோதும் ‘கன்னம்’ வைக்கக் கூடாது.

9. மனைவியர்கள் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் கள்வர்களாக கணவர்கள் இருக்கலாம். உள்ளதைக் கொள்ளையிடும் ‘கள்வர்கள்’ ஆகிவிடக் கூடாது.

10. கணவனும் மனைவியும் எவரும் எவருக்கும் கீழில்லை; மேலில்லை, இருவரும் சராசரி சரிசமமானவர்கள்.

11. கணவனும் மனைவியும் இல்லறக் கல்லூரியின் மாணவர்கள்; மா ஆண்வர்கல் அல்லர்.

12. கணவனும் மனைவியும் இல்லற வாழ்வில் சரிசமம் ஆனவர்கள்; தன் மானம் உடையாத மானவர்கள்.

13. கட்டிலறையிலும் அட்டிலறையிலும் விதவிதமான சுவையுடன் உணர்வும் உணவும் படைப்பவள் மனைவி.

14. சமையல் என்பது ‘சமைந்த்’ ஆண் பெண் இருவருக்கும் உரியதாகும். கட்டிலறையும் அட்டிலறையும் இருவருக்கும் உரிய செயற்களமாகும்; வேலைத் தளமாகும்.

15. வீணையாய் வந்த வனப்பான வனிதையை தாம்பத்ய விரல்களால் மீட்டி இல்லற இசை எழுப்புங்கள்; எரிந்து எரிந்து விழுந்து வீணாய் விறகாய் கொழுந்து விட்டு எரிய வைத்து விடாதீர்கள்.

16. பிள்ளைகள், பெற்றோர், உறவினர் ஆகியவர்களுக்காக ஓடாய் துரும்பாய் உழைத்து, மெழுகாய் உருகி ஒளி பாய்ச்சுபவர்களே உண்மையான தம்பதியர்.

17. குடும்பப் பக்தியுள்ள தம்பதியினர் ஊதுபத்தியாக உழைத்துருகி நாட்டுக்கும் வீட்டுக்கும் மணம் சேர்ப்பார்கள்.

18. ஏக இறைவனை நம்பும் ஆண் பெண்கள் ஏகபத்தினி விரதத்தையும் ஏகபர்த்தா விரதத்தையும் இறுகப் பற்றுவார்கள்.

19. திருமணமான தம்பதியருக்கு தம் பதியான ஊரும் வீடுமே என்றும் திருப்தியான திருப்பதி.

20. சந்தனம் அரைக்க அரைக்க மணம் பெறும் ‘தந்தனம்’ என குடும்பத்திற்கு தம்மை தானம் செய்யும் தம்பதியர் இரைக்க இரைக்க உழைத்து புகழ் மணம் பெறுவர்.

21. குடும்ப ஆலமரத்தின் ஆணிவேர் ஆடவன்; தாய் மரம் மனைவி, விழுதுகள் பிள்ளைகள் இணைந்து செயல்பட்டால் ஆலமரம் தழைத்து வளரும்.

22. ஊதாரிகளான கணவன் – மனைவியர் குடும்பத்தின் உதவாக்கரைகளாக ஊராரால் ஊதிப்பறக்க விடப்படுவர்.

23. உடல்நலக் குறைவில் ஒருவருக்கொருவர் தாங்கலாகவும் நிழலாகவும் தங்களை குறைவின்றி அர்ப்பணிப்பவர்களே தகைமையுடைய தம்பதியினராவர்.

24. மேலாடை என்பது உடல்மேல் அணிவதற்காக; மேனியை மேதினியாரிடமிருந்து மறைப்பதற்காக. துணிந்து உரிந்து உடலை வெளிக்காட்டுவதற்கு துணை செய்வதற்கல்ல துணி.

25. உறுப்புகளை மூடினால் அழகு; மூடாமல் விட்டால் அழுக்கு.

26. அங்கங்களை அங்கங்கே திறந்து காட்டி பங்கத்துடன் நடப்பவர்கள் திறந்த வெளி பல்கலைக்கழகம் போன்றவர்கள். பலரும் இதில் பதிவு செய்ய முயலலாம்.

27. மயிலுக்கு முழுத்தோகை அழகு; மங்கைக்கு முழு ஆடை அழகு.

28. பாலுக்கு மூடி பாலாடை; பருவப் பெண்பாலுக்கு மூடி மேலாடை.

29. விழியாலும் விளியாலும் வலை மீசி தூண்டில் போடும் காமுக வேடர்கள் ஆண்களிலும் உண்டு; பெண்களிலும் உண்டு.

30. ஆபாசமாக ஆயாசமாக ஆடையணிந்து குலுக்கித் தளுக்கி நடப்பவர்கள் மறைமுகமாக பாலியல் வன்முறையை தூண்டுபவர்களாவர்.

31. ஆண்-பெண் இருபாலாரும் பண்பாட்டின் பெருமாதிரியான கல்விக்கூடங்களாக நடத்தல் வேண்டும். ஒரு மாதிரியாக நடமாடும் கலவிக் கூடமாக நடமாடிவிடக்கூடாது.

32. பெண்கள் அளவோடு நகையணிந்து நடந்தால் அழகான கலை. அளவின்றி நகை சுமந்து நடந்தால் பிறர் நகைப்பிற்குரிய அழுக்கான களை.

33. அளவற்ற ஆடை யணி அலங்காரங்களை பாரமாகக் கொண்ட பாவைகள் கணவர்களுக்கு பாரமாவார்கள். அகங்கார பாவத்தின் பாரத்தையும் அவர்கள் சுமக்க நேரிடும்.

34. உணர்ச்சியால் தூண்டப்பட்டு காமப் பாசத்துடன் ஆ வென வாய் திறக்க வைப்பதே ஆபாசம்.

35. பெண்கள் நாட்டிற்கும் வீட்டிற்கும் மட்டுமல்ல கணவர்களுக்கும் கண்கள் தான். எவராவது தம் கண்களைக் குத்திக் கிழிப்பார்களா? பார்வையிழக்கத் துணிவார்களா?

36. மனைவிக்கு ‘கண் அவன்’ கணவன் இமைப் பொழுதும் தூசி விழாமல் அவனைக் காக்கும் இமைகளாக இமைக்காமல் அவர்கள் செயல்பட வேண்டும்.

37. நல்ல பொண்ணுக்கு வல்ல அழகு பொன் நகையல்ல; புன்னகையே.

38. நிறம், மணம், மென்மை, என்பன மலரின் குணங்கள் அழகு, அறிவு, ஒழுக்கம் என்பன பூவையின் குணங்கள்.

39. அழகு என்பது கறுப்பு, வெளுப்பு, சிவப்பு வண்ணத்தில் வருவது அல்ல, நெஞ்சின் நல்ல எண்ணத்தில் உருவாவது.

40. புற அழகு வயது ஏற ஏற இறங்கத் தொடங்கும். தோல் சுருங்க சுருங்க தேக்கங்கொண்டு போய் விடும். அக அழகு வயது ஆக ஆக ஆக்கங்கொண்டு ஆகிவரும்.

41. வாயாடிப் பெண் பேயாடிப் போவாள். வாயாடி ஆண் நாயாடிப் போவான்.

42. கல்வியில்லாத ஆண்-பெண்கள் கட்டாந்தரை, துணை நினைத்தால் களர் நிலத்தையும் பண் படுத்தி எடுக்கலாம்.

43. ஒழுக்கமில்லாத ஆண்-பெண்கள் வாழ்வு வேலியில்லாத பயிரைப் போல் சீரழியும்.

44. உண்மையான கணவன் – மனைவியர் இடையேயான அன்பு, உடல் கூனிக் குறுகினாலும் கூனிப்போகாது; குறுகிப் போகாது. வயது ஆக ஆக ஆவர்த்தனமாகி அதிகரிக்கும்.

45. உடல், பொருள், உணர்வு, செயல் இவற்றை காப்பதே கற்பு இது ஆண்- பெண் இருவர்க்கும் பொது.

46. காசுக்கு கற்பை விற்பவள் விலைமகள். அதனை வாங்குபவன் விலைமகன்.

47. இல்லறக்கடலில் நேர்மையுடன் முயற்சியுடன் மூழ்கினால் புகழ், பெருமை எனும் முத்துக்களை அள்ளி வரலாம்.

48. சாதாரண கரி உறுதியுடன் மண்ணுக்குள் வைராக்கியம் கொண்டதால் வைரம் ஆனது. உதாரணமாக கணவன் – மனைவியர் வாழ்வில் மனவுறுதியுடன் நல்ல வைரக்யம் கொண்டு வாழ்ந்தால் வைரமாய் ஒளிவிடலாம்.

49. உள்ளதைக் கொண்டு உள்ளத்தால் திருப்தியுற்று வாழ்பவர்கள் உலகத்தார் உள்ளத்திலும் இடம் பிடிப்பார்கள்.

50. சுய புத்தியில்லாத ஆண் – பெண்கள் பிறர் சொல் புத்தியையாவது தயங்காது ஏற்று அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

51. புதுச் செருப்பு காலைக் கடித்தாலும் நாள் போகப் போகச் சரியாகி விடும். புகுந்த வீட்டில் புதுமனைவியும் சரியாமல் நாளடைவில் சரியாகி விடுவாள்.

52. பண்பாடும் அறிவும் உடைய ஆண் – பெண்களே சமூகத்தில் உண்மையான மதிப்பும் மரியாதையும் பெற்றுத்திகழ்பவராவர்.

53. பூவைகள் பூ போன்றவர்கள் பூ ! இவ்வளவு தானா என்று உதாசீனத்துடன் அவர்களைக் கையாண்டுவிடக்கூடாது.

54. குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்யும் கீர்த்திமிகு பாவைகளை பொம்மைகளாகக் கருதி ஆட்டிப் படைத்தல் ஆடவர்களுக்கு அவமானகரமாகும்.

55. கணவன் கட்டுக்கு அடங்காத பிடாரியும், மனைவியை கொடுமை செய்யும் அடங்காப் பிடாரனும் இல்லத்தை அறுக்கும் கோடாரிக் கம்புகளாகும்; வம்புகளாகும்; அம்புகளாகும்.

56. தேன் குடத்தில் வீழும் வண்டிற்கு அக்குடமே சமாதி. காமத்தீயில் வீழ்பவர்களை தீய அத்தீயே சுட்டுப்பொசுக்கி சாம்பலாக்கி சமாதி கட்டி விடும்.

57. துணியை துணிவுடன் களைவதும் கலைப்பதும் கலையல்ல; களங்கமான களை.

58. குதிகால் செருப்பணிந்து அரை குறை ஆடையுடன் தளுக்கி குலுக்கி குதித்து செயற்கையாக ஆடி நடப்பவர்களால் பண்பாடே பெரும் பாடுபடுகிறது; ஆட்டம் கண்டு விடுகிறது.

59. காசுக்காக மனைவியைக் கைவிடுகின்ற கணவனும், கணவனைக் கைவிடுகின்ற மனைவியும் மகாபாவ மனோபாவமுடையவராவர்.

60. தம் மனைவி – மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்கின்றவனே சிறந்த கணவனாக சிறந்த தந்தையாக மட்டுமின்றி சிறந்த மனிதனாகவும் கருதப்படுவான்.

61. அளவோடும் நிதானத்தோடும் வாழ்கின்ற குடும்பப்பாங்கான பங்கமில்லாத் தங்கக் குணவதிகளே உயர்குலத் தகுதியும் பெருமையும் உடையவர்களாவர்.

62. கற்பைப் பேணுவது ஆணுக்கும் பெண்ணுக்கும் அடிப்படைக் கடமையும் இலக்கணமும் மட்டுமின்றி பொற்பைத் தருவதும் ஆகும்.

63. அழகு, அறிவு, ஒழுக்கம், மதப்பற்று ஆகியவைகளே ஆண் பெண்களுக்கு சீரிய சொத்து; ஏனையவைகள் எவையும் சொத்தைகளே.

64. பெண்களின் அழகு வீட்டுக்குரியது; அலங்காரம் வீட்டுக்காரனுக்குரியது. அறிவு நாட்டுக்குரியது. ஒழுக்கம் எல்லோருக்கும் உரியது.

65. மூக்கணாங்கயிறில்லாத மாடும் கட்டுப்பாடில்லாத ஆண் – பெண்ணும் சந்திக்கு வரவேண்டி வரும்.

66. வருவாய்க்கு ஏற்ற வரம்பு வாழ்க்கையை மேற்கொள்கின்றவர்கள் ஒரு போதும் தோல்வியைத் தழுவுவதில்லை.

67. கல்வித் தேர்வில் உயர்ந்த மதிப்பெண்களும் கலவித் தேர்வில் சிறந்த மதிப்பெண்ணும் பெறுகின்றவன் வாழ்வுத் தேர்வில் முதல் வகுப்பில் வென்றவனாவான்.

68. ஆண் – பெண்களுக்கு ஏகபத்தினி விரதமும் ஏகபர்த்தா விரதமுமே போக வாழ்வில் உடல், உணர்வு, உறவுகளை அழிவிலிருந்து பாதுகாக்கும்.

69. அளவற்ற அலங்காரமும் ஆடம்பரமும் உடைய அகங்காரமானவள் இருமுனைக் கத்திக்கு ஒப்பாவாள். எந்நேரமும் அவளால் அவளுக்கும் பிறருக்கும் ஆபத்து நேரிடலாம்.

70. கபடதாரிகளான ஆண் – பெண்களின் வேடம் காலதாமதமின்றி கால மழையில் கலைக்கப்பட்டு காலாவதியாகி விடும். பொய்ச்சாயம் மெய் மழையில் வெளுத்துப் போய் விடும்.

71. வாழ்வுப் புத்தகத்தின் அழகிய பலவண்ண முகப்பு அட்டை மனைவி, தொகுப்பாசிரியரான கணவனே அந்த அட்டையை ஆத்திரத்தில் கிழிந்து எறிந்திடக் கூடாது.

72. கணவனோ, மனைவியோ அன்புக் கணைகளுக்கும் பதிலாக வம்புக்கணைகளை ஏவிவிடக் கூடாது. அவ்வாறாயின் வாழ்வே துன்பக்களமாகி விடும்.

73. தம் மக்களுக்கு தகுந்த கல்வியளித்து தகுதியுள்ள பணியைப் பெறச்செய்து கண்காண உள்ளம் விழைய சிறந்தோர். இடத்தில் திருமணம் செய்து வைப்பவரே எல்லா வகையிலும் நிறைவு பெற்ற பெற்றோராவர்.

74. அடிக்கிற கைதான் அணைக்கும்; அடியேய் என விளிக்கிற வாய் தான் அன்பே எனக் கூறிக் களிக்கும்.

75. திருமணம் என்பது ஓர் நீண்ட கால வாழ்வு ஒப்பந்தம். கணவன் – மனைவியர் இடையே சுரக்கும் அன்பும் ஆதரவும் அதைப் படிப்படியாக இறுகச் செய்து உறுதிப்படுத்தும்.

76. ஒத்தவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கும் பந்தப் பாசம் பிணைப்பு தொடர்பான உடன்படிக்கையே திருமணம். இதில் இருமனமும் ஒருமனதாக உறுதிமொழியை இறுதி வரை நிறைவேற்றக் கடமைப் பட்டவராவர்.

77. பெண் படிப்பறிவு இல்லாதவளாயினும் பகுத்தறிவு உள்ளவளாக இருத்தல் வேண்டும். வேகம் இல்லாதவளாயினும் விவேகம் உடையவளாக அமைதல் வேண்டும்.

78. கத்தியும், குத்தியும் பேசுகிற கணவன் வாழ்வைக் கத்தரிப்பவனாவான். வெட்டியும் தட்டியும் பேசுகின்ற மனைவி வாழா வெட்டியாக வாழ நேரிடும்.

79. தகுதிக்கு மீறி குதிகுதி என குதிக்கிற ஆண் பெண்கள் தடம்மாறி குதிக்காமலே தானே படுகுழியில் வீழநேரிடும்.

80. மனைவியின் ஆடம்பர வாழ்வுக்கு சுற்றி சுற்றி வந்து பம்பரமாக உதவுபவனின் ஆட்டம் திடீரென்று நின்று போகலாம்.

81. பொய் பூசி மெய்களை இணைத்து திருமணத்தை நடத்துபவர்கள் பொய் மெய்யாய் வெடிக்கும்போது தூள் தூளாகி விடுவர்.

82. தண்டவாளப் பாதை விரிசலின்றி இணையாக இருந்தால் தான் ரயில் தடம் புரளாமல் இலக்கை அடைய முடியும். வாழ்வு ரயிலில் பிரயாணம் செய்பவர்களுக்கும் இது பொருந்தும்.

83. வேலை பார்த்து உழைத்து குடும்பம் நடத்தும் ஒவ்வொரு ஆண் பெண்ணும் சமுதாயத்தில் தனித்தகுதியும் மதிப்பும் பெறுகின்றவராவர்.

84. இன்னவரின் மனைவி என பெண்ணை அறிமுகப்படுத்துவது போன்று இன்னவரின் கணவன் என அறிமுகப்படுத்துவதும் சமவுரிமையின் பாற்பட்டதாகும்.

85. ஒவ்வொரு பெண்ணின் வாழ்வு வெற்றிக்குப் பின்னால் ஒரு ஆண் இருப்பதைப்போல் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் உறுதியாக ஒரு பெண் இருப்பாள். வாழ்வுத் தோல்விக்கும் வீழ்ச்சிக்கும் இது பொருந்தும்.

86. அன்ன நடை; மான் விழி; குயில் மொழி பெண்களுக்கு நன்று; ஏறுநடை; சிறுத்தை விழி; சிங்கமொழி ஆண்களுக்கு நன்று.

87. பெற்றோர்களாயினும் சகோதரர்களாயினும் குடும்பச் சொத்துப்பாகப் பிரிவினையில் அநீதியும் வஞ்சகமும் செய்வாராயின் வாழ்வில் சபிக்கப்பட்டு வேதனையுறுவர் என்பது இறைநியதியும் எழுதப்படாதச் சட்டமுமாகும்.

88. கணவர்களின் ஏகபோக நன்செய் நிலங்களான மனைவியர்களிடம் பலபோகம் பயிர் செய்யலாம். அன்பு நீர் பாய்ச்சி ஆர்வ உரமிட்டு வெறுப்பு களை பிடுங்கி பிள்ளை விளைச்சலைப் பெருக்கும் பெரு விவசாயியே கணவர்.

89. அழகையும் கவர்ச்சியையும் வெளியே விளம்பரப்படுத்தும் சுவரொட்டிப் பலகைகள் அல்ல பெண்கள். கணவர்களின் செய்கைகளுக்கு இருக்கை இட்டு இதயத்தில் இடம் பிடிக்க வேண்டிய அழகுப் பெட்டகங்களே வீட்டுப் பெண்டிர் என்பது இல்லறம் விளம்பும் அறம்.

90. அன்பால் ஆர்வமூட்டி அழகு அலங்காரக் கவர்ச்சியால் தூண்டி தம் திறத்தாலும் தந்திரத்தாலும் கணவனை தன் வசப்படுத்த இயலாதவன் பிற பெண்களின் முந்தானையைப் பின்பற்றி பின் தானையாக தானவனை விட்ட பெரும்பாவத்திற்கும் குற்றத்திற்கும் ஆளாவார்கள்.

91. கணவர்களாயினும் மனைவியர்களாயினும் தங்கள் உடல் வாசஸ்தலங்களை தூய்மையாகவும் வனப்பாகவும் வாசமுடனும் பேணவில்லையெனின் அருவருப்பாலும் பெரும் வெறுப்பாலும் சகவாசம் குறைய, தன்வசப்படுத்த முடியாமல் ஒருவரை விட்டு ஒருவர் ஒதுங்கவும் விலகவும் நேரிடும்.

92. குளத்திலுள்ள திருமலர் நீரில் அளவிற்கேற்ப நிலை நிற்கும்; அது போல் வீட்டின் வருவாய்க்கேற்ப திருமதியும் நிலை நிற்க வேண்டும்.

93. வீட்டு மாது உளங்கனிந்தால் வாழ்வு முக்கனி சர்க்கரையாகத் தித்திக்கும். பூவை உளம் வாடினால் வாழ்வு இலுப்பைப்பூவாக அலுப்பு தரும்; எட்டிக்காயாக எட்டி நிற்கச் செய்யும்; இன்ப மயக்கம் போய் தயக்கம் ஏற்படும்.

94. பல சொல்லியும் அதட்டியும் தட்டியும் திருந்தாத துணையுடன் தொடரும் வாழ்வு தொடா வாழ்வாக, தொடரா வாழ்வாக மாறும். நகரா வாழ்வாக நரக வாழ்வாக நலிந்து விடும்.

95. எப்போதைக்கும் பெண்கள் போதையில் மயக்கமுற்றுக் கிடக்கும் ஆண்கள் தன் தன்மானத்தை விமானத்தில் பறக்க விட நேரிடும்.

96. கற்றோர் கற்றோரை காமுற்று கல்யாணம் செய்வதே நன்று. அற்றோர் அற்றோரை ஆர்வமுற்று மணம் செய்யலாம்.

97. பொய்யாக ஊடுவதும் மெய்யாகக் கூடுவதும் குடும்ப வாழ்வில் சகஜம். மெய்யாக ஊடுவதும் பொய்யாகக் கூடுவதும் குடும்ப வாழ்வை பலகஜதூரம் துரத்தி விடும்.

98. அழகும் செல்வமும் அழிவது; நிலையற்றது; பெற்ற அறிவும் பேணும் ஒழுக்கமும் அழியாதது; நிலையானது.

99. அவள் அவளாக அழகாக இருந்தால் அவனும் அவனாக தேனாக இருந்து ஆவன செய்வான். அவன் அவனாக அளவாக அமைந்தால் அவளும் அவலாக ஆவலாக அமைவாள்.

100. கல்லடி படும் மாமரமும் சொல்லடி படும் மங்கையும் மானம் மாய்ந்து வாழ நேரிடும்.

101. இறந்ததை மறந்து இருப்பதை நினைத்து இல்லறத்தை சந்தடியின்றி சந்த வாழ்வாக சந்தன வாழ்வாக அமைத்தால் இந்த நாள் மட்டுமின்றி எந்த நாளும் வந்தநாளும் தங்க நாள்தான். இனிமை தங்கும் நாள் தான்.

102. தம் மக்களை ஒழுக்க நெறியோடு வளர்க்க இயலா பெற்றோர் வாழ்வில் வளம் அற்றோராவார். அம்மக்களாலேயே அவமானமும் அவதியும் உற நேரிடும்.

103. உடல் கவர்ச்சி, பணக்கிளர்ச்சிகளால் கவரப்பட்டு நடக்கும் கல்யாணங்கள், நாளடைவில் கவர்ச்சி வீழ்ச்சியுற தளர்ச்சியடைய நேரிடும்.

104. மணப் பொருத்தத்திற்கு பணப் பொருத்தத்தை விட மிக மிகத்தேவை அறிவு, மனம், உடல் பொருத்தங்களாகும்.

105. படித்தும் கேட்டும் பார்த்தும் செய்தும் அறிவைப்பெற ஆண் – பெண்கள் முயற்சி எடுத்தல் வேண்டும்.

106. அழகிருந்தும் அறிவில்லாதவர்கள் நிறமிருந்தும் மணமில்லாத மலரைப் போன்றவர்கள்.

107. அறிவு என்பது கல்விக்கூடங்களில் கற்றுத்தருவது மட்டுமல்ல. உலக வாழ்வு எனும் உன்னத கலாசாலையில் செய்முறைப் பயிற்சியால் பெறும் அனுபவ அறிவு சிறந்த அறிவின்பாற் பட்டதாகும்.

108. அழகு, அறிவு, செல்வம் பெருகியவர்கள் வாழ்வியல் அகந்தையை அகற்றி பணிந்து வாழ்வதே சிறந்த பண்பாடு ஆகும்.

109. சமயலறையில் விதவிதமான உணவு வகைகளை வேகத்தில் வேகவைத்து கணவனுக்கும் மக்களுக்கும் சுகமாகப் பரிமாறி அறுசுவை படைக்கின்றவள், அவர்களின் மனதை வேதனையில் வேகவைத்து சுவை அறு சோகத்தை ஒரு போதும் சமைத்துவிடக்கூடாது.

110. முற்றிய நெல்மணிகளைத் தாங்கிய வயல் காற்றிலும் வெள்ளத்திலும் பணிவுடன் குனிவதால் அடித்துச் செல்லப்படாமல் காப்பற்றப்படுகிறது. பணியாமல், தற்பெருமையுடன் நிமிர்ந்து நிற்கும் முருங்கைமரம் தலைக்கனத்தால் காற்றில் கண்ட துண்டங்களாக நொறுங்கிப் போகிறது. இது நமக்கு நல்ல் ஓர் படிப்பினையாகும்.

111. ஈகையும் விருந்தோம்பலும் இல்லாத இல்லம் உப்பு சப்பில்லாத உணவகம் போன்றதாகும். சுவை விட்டு அலுப்பு தட்டும்.

112. கெஞ்சியும் கொஞ்சியும் வாழ்வது குடும்பவாழ்விற்கு சுவையும் பயனும் சேர்க்கும். மிஞ்சியும் அஞ்சியும் வாழ்வது சுவையும் பயனும் நீக்கும்.

 

 

 

நல் வாழ்த்துக்களுடன்….

எஸ். ஷமீம், இறக்குமதி மேலாளர், எம்.கே. குழுமம், அபுதாபி

ஆர் இர்ஃபானா ஷமீம், வேளாண் அலுவலர், கேரள அரசு மருத்துவர்

எம்.மீர் சிஷ்த்தி, விரிவுரையாளர், அறுவையியல், அரசு

மருத்துவக் கல்லூரி, ஆலப்புழை

பொறிஞர், என். அமானத் கலந்தாய்வாளர், கோஸ்கோ, அபுதாபி

வெளியீடு

பாரதம் பதிப்பகம்

18/1383/3 மீராஸ், குந்நப்புழை சந்திப்பு

ஆறாமடை அஞ்சல், திருவனந்தபுரம் – 695 032.

 

News

Read Previous

இலக்கு..

Read Next

பொருளீட்டலுக்கான நீதி நெறிகளும் அதற்கான வழிமுறைகளும்

Leave a Reply

Your email address will not be published.