புத்தகங்களைப் படியுங்கள்!புத்துலகம் படைத்திடுங்கள்!!

Vinkmag ad

*அறியப்பட்ட வரலாற்றின்படி எழுத்து தோன்றாத காலத்தில் வாழ்ந்தவர் சிந்தனைச் சிற்பி சாக்ரட்டீஸ்.

 
அவர் அந்தத் தொல் பழங்காலத்திலேயே,”ஏதன்சு நகரத்து ஏற்றமிகு வாலிபர்களே…தீட்டிய வாளும் தினவெடுத்த தோளும் போதாது வீரர்களே! இதோ, நான் தரும் அறிவாயுதத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள்…!” என்று, நாளைய நாடு காக்கும் தலைவர்களாம் இளைஞர்களைப் பார்த்து அறிவார்ந்த அழைப்பை அன்போடு விடுத்தவர்.
 
அந்த அறிவாயுதத்தைப்- படைக்கலனை- பொதிந்து வைப்பதற்கான உறையாகத் திகழ்வது நூல்களே! புத்தகங்கள் என்று இன்று கூறப்படும் பொருளுக்கு நூல் என்பது பழந்தமிழ்ச் சொல்லாகும்.
 
நூல் என்றால் ஆயுதம் என்றும் பொருள் உண்டு என்று நம் தமிழ் அகராதிகள் பொருள் கூறுவதை அறியும் போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது.
 
ஆயுதங்கள் பற்பல உள்ளன.அவற்றுள் கத்தியும் ஒன்று.
 
*”கத்தியைத் தீட்டாதே, புத்தியைத் தீட்டு” என்று கூறித் தமிழகத்தின் கவனத்தைத் தம்பால் திருப்பிய பேரறிஞர் அண்ணா, தம்முடைய புத்தியை அன்றாடம் சலியாமல் தீட்டுவதற்குப் பயன்படுத்திய கருவி புத்தகங்களே!
 
அவர் சராசரியாக ஒரு நாளுக்கு ஒரு புத்தகம் படித்துவந்தவர்.அவற்றில் மிகுதியானவை ஆங்கிலப் புத்தகங்களே.
 
அவருடைய நெருங்கிய நண்பரும் அந்தக்காலத்து திராவிட இயக்கப் பிரமுகர்களில்  ஒருவருமான டார்பிடோ ஜனார்தனம்,”அண்ணா அன்றாடம் படித்து வந்த நூல்களையெல்லாம் குவித்துவைத்துப் பார்த்தால் அது ஒரு குன்றுபோலிருக்கும்” என்று எம்மிடம் நேரில் உரையாடிக்கொண்டிருந்த ஒரு நேரத்தில் தெரிவித்தார்.
 
அண்ணாவின் அந்த வாசிப்பு அவரை எவ்வாறு குன்றின்மேல் இட்ட விளக்காகத் திகழச் செய்தது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்!
 
*தமிழ்க் கடல் மறைமலை அடிகள் இன்றளவும் அவருடைய அறிவுத்திறம்,ஆய்வுத்திறம்,இலக்கிய விற்பன்னம், மும்மொழிப் புலமை முதலியவற்றிற்காக எண்ணிப்பார்க்கப்படும் ஒரு மேதை ஆவார்.
 
அவர் தமிழை-தமிழ் இலக்கிய நூல்களை- எழுத்தெண்ணிப் படித்தவர்.அந்த உழைப்பினால் பெற்ற பயனை அறிவுலகுக்கு அளித்தவர்;அதனால் அறிவுக் கண்ணற்றோர் ஒளி பெற்றனர்;எண்ணற்ற அறிஞர்களும் கூட எழுச்சி பெற்றனர்.
 
”இவர்களெல்லாம் கற்கக் கூடாது;கற்க விடவும் கூடாது; வேதம் எனப்படும் விஷேசமான நூல்களின் கருத்தை இவர்கள் காதாலும் கேட்டுவிடக் கூடாது;அப்படித் தப்பித்தவறிக் கேட்டுவிட்டால் அவர்களுடைய காதுகளிலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்…” என்று அறிவின் துறைகள் அனைத்தும் முற்றிலும் மறுக்கப் பட்ட ஒரு சமுதாயத்தில் பிறந்தவர் உலகின் பெரிய ஜன நாயக நாடுகளில் ஒன்றுக்கு சட்டச் சிற்பியாக,சட்ட அமைச்சராக ஆனார் என்றால் ஆச்சர்யமாக இல்லை?
 
அவர் பெயர் அம்பேத்கர்!
 
அந்த நாடு இந்தியா!!
 
அவரால் எப்படி இவ்வாறு ஆக முடிந்தது?
 
அவர் எப்படியோ ஒரு வழியாகப் பள்ளியில் படித்தார்,கல்லூரிகளில் படித்தார்,பல்கலைக் கழகங்களில் படித்தார்,பட்டங்கள் பல பெற்றார் என்பதனால் மட்டுமல்ல.
 
அதற்கு அப்பாலும் அறிவின் எல்லைகள் விரிந்து கிடப்பதைப் பார்த்தார்…அங்கெல்லாம் பறந்து,பறந்து அறிவைத் தேடினார்;அறிவு நூல்களை வாங்கிக் குவித்தார்.உலகின் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட அவர், அந்த அந்த நாடுகளில் இருந்து தமக்கும் நாட்டுக்கும் பயன்படும் என்று கருதிய நூல்களை வாங்கிக் கப்பல்களில் சிப்பங்களாக அனுப்பிக்கொண்டிருந்தார்;வாங்கிக் குவித்த நூல்களை வைப்பதற்காகவே ”ராஜ கிருகம்” என்றொரு மாளிகை நூலகத்தைக் கட்டினார்.
 
அந்த நூலகத்தைப் பார்த்து பெரிய படிப்பாளியும் பெரும் எழுத்தாளரும் உலகறிந்த நூல்களின் ஆசிரியரும் இந்த நாட்டின் முதல் பிரதமரும் ஆன ஜவஹர்லால் நெஹ்ருவே வியந்தார்!
 
அந்த நூலகத்தில் அம்பேத்கர்,இரவும் பகலும் படித்தார்;காலமெல்லாம் படித்தார்,படித்துக்கொண்டிருந்தார்….
 
அவருடைய நூலறிவின் உச்சம், இந்த நாட்டுக்கு அவர் இயற்றி அளித்த சட்டமாக இன்றும் விளங்கி வருகிறது.
 
புத்தகங்களை வாங்கிப் படிக்கும் வழக்கம் உள்ளவர்கள் அறிவில் உயர்வார்கள்,வாழ்வில் உயர்வார்கள், நாட்டையும் நானிலத்தையும் உயர்த்துவார்கள் என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகள்!
 
அவர்களில் ஒருவராக ஆக விரும்பும் அனைவரும் புத்தகங்களை வாசிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.
 
படிப்பவர்கள் சிந்திப்பார்கள்;அறிவார்ந்த நூல்களைப் படைப்பவர்களாக மாறுவார்கள்;காலம் கடந்தும் வாழ்வார்கள்.
 
கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு முகாமையான குறிப்பு:அறிவுலக ஞானி இமாம் கஸ்ஸாலி சொன்னார்-”இம்மை மறுமை வாழ்வுகளுக்குத் தேவையானவற்றையெல்லாம் கற்பது கடமை;எந்தப் பயனும் தராத நூல்களைக் கற்காது தவிர்ப்பது அறிவுடைமை”
 
எண்ணிப் பாருங்கள்…
 
திருவள்ளுவர் காலத்து அரசன் யார்? அவர்காலத்துச் செல்வச் சீமான்கள் பெயர்கள் என்ன? அந்தக் காலத்துப் பிரமுகர்கள் யார்? யாருக்கும் தெரியாது.
 
ஆனால் திருவள்ளுவரை மட்டும் எல்லாருக்கும் தெரிகிறது.ஏன்? அவர் எழுதிய திருக் குறளால்…! அவர் எண்ணற்ற நுண்ணிய நூல்களைக் கற்றிருக்க வேண்டும்… அதன் பயனாக சிந்தித்து இருக்க வேண்டும். திருக்குறள் என்ற நூல் பிறந்தது.அந்த அறிவாயுதத்தால்,அறிவுலகில் அவர் கொடி பறந்தது,பறக்கிறது,பறக்கும்…
 
எனவே, இளைஞர்களே! நாளைய உலகின் நாயகர்களே!
 
புத்தகங்களைத் தேடுங்கள்! வாங்குங்கள்!! படியுங்கள்!!  நல்ல புத்தகங்கள் உங்களுக்கு எல்லாவகை நலன்களையும் நல்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை! எனவே,
 
புத்தகங்களைப் படியுங்கள்!புத்துலகம் படைத்திடுங்கள்!!
 
                                                                                                     —-ஏம்பல் தஜம்முல் முகம்மது.

 

News

Read Previous

முதுகுளத்தூர் வட்டாரத்தில் மழை நீடிப்பு விவசாய வேலைகள் மும்முரம்

Read Next

பத்திரமாக வெடிப்போம் பட்டாசு

Leave a Reply

Your email address will not be published.