கீழக்கரை, ஆக. 4: துபையில் அமெரிக்கக் கடற்படையினரால் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர் சேகர் குடும்பத்தினருக்கு அமெரிக்க அரசால் வழங்கப்பட்ட ரூ.5 லட்சம் நிதி உதவியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் அக் குடும்பத்தினரிடம் சனிக்கிழமை வழங்கினார். மேலும், இதில் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.
கடந்த ஜூலை 16-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் துபையில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது, அமெரிக்கக் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இச் சம்பவத்தில் ராமநாதபுரம் அருகே உள்ள தோப்புவலசையைச் சேர்ந்த மீனவர் சேகர் (27) உயிரிழந்தார். மேலும், மோர்பண்ணையைச் சேர்ந்த மீனவர்கள் முத்துக்கண்ணன், பண்டுவநாதன், ராமேஸ்வரம் கரையூரைச் சேர்ந்த முத்துமுனியராஜ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த சேகரின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிதி வழங்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்திருந்தது.
இதன்படி, அமெரிக்க அரசு வழங்கிய நிவாரணத் தொகைக்கான காசோலையை உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ராமநாதபுரம் ஆட்சியர் நந்தகுமார் சனிக்கிழமை வழங்கினார்.
















