30 ஆண்டுக்குப் பிறகு வேலூரைக் கைப்பற்றிய அதிமுக

வேலூர்: அதிமுக வேட்பாளர் செங்குட்டுவன் வெற்றி

வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பா.செங்குட்டுவன், தனக்கு அடுத்தபடியாக வந்த பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தைக் காட்டிலும் 59 ஆயிரத்து 393 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

செங்குட்டுவன் பெற்ற வாக்குகள் 3,83,719, ஏ.சி.சண்முகம் பெற்ற வாக்குகள் 3,24,326.

திமுக அணியில் இடம்பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் 2 லட்சத்து 5 ஆயிரத்து 896 வாக்குகள் பெற்று 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

தேர்தல் ஆணைய விதிப்படி, ஒரு தொகுதியில் பதிவான மொத்தமுள்ள தகுதியான வாக்குகளில் 6-இல் ஒரு பங்கு வாக்குகளை பெற்றிருந்தால் அந்த வேட்பாளர்களின் டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படும். இல்லையெனில் டெபாசிட் இழந்த வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவர்.

அதன்படி இத்தொகுதியில் போட்டியிட்ட 24 வேட்பாளர்களில் அதிமுக, பாஜக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய 3 கட்சிகளின் வேட்பாளர்களைத் தவிர பிற 21 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

குறிப்பாக, தேசிய கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜே.விஜய் இளஞ்செழியன் 21 ஆயிரத்து 650 வாக்குகளைப் பெற்றும், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவுடன் களத்தில் முதன் முறையாக இறங்கிய ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஏ.இம்தாத் ஷெரீப் 3 ஆயிரத்து 742 வாக்குகளைப் பெற்றும் டெபாசிட் இழந்தனர்.

தொடக்கம் முதலே அதிமுக முன்னணி

வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அவற்றில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரஹ்மான் 657 வாக்குகளையும், பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 268 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் பா.செங்குட்டுவன் 136 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

இதைத் தொடர்ந்து 14 மேஜைகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் சுற்று முதல் 20-வது சுற்றான இறுதிச் சுற்று வரை அதிமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னணியில் இருந்தார்.

மாலை 4.45 மணியளவில் பா.செங்குட்டுவன் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ வழங்கினார்.

நோட்டாவுக்கு 7,100 வாக்குகள்

மொத்த வாக்காளர்கள் 13,05,866, பதிவான வாக்குகள் 9,67,670, நோட்டா 7,100, தள்ளுபடி செய்யப்பட்ட தபால் வாக்குகள் 433.

பா.செங்குட்டுவன் (அதிமுக) 3,83,719, ஏ.சி.சண்முகம் (பாஜக) 3,24,326, எம்.அப்துல் ரஹ்மான் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 2,05,896, ஜே.விஜய் இளஞ்செழியன் (இந்திய தேசிய காங்கிரஸ்) 21,650, ஏ.இம்தாத் ஷெரீப் (ஆம் ஆத்மி) 3,742, ஜெயபிரகாஷ் (பகுஜன் சமாஜ் கட்சி) 2,791, கே.கங்காதரன் (தமிழ்நாடு மக்கள் காங்கிரஸ்) 430, வி.நந்தகுமார் (சமாஜவாதி கட்சி) 745, வி.ஏ.ஜார்ஜ் (பாரதிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஜனதா கட்சி) 491, எச்.ஷெரீப் பாஷா (சமதா கட்சி) 496, என்.அப்துல் ரஹ்மான் (சுயே) 581, பி.அப்துல் ரஹ்மான் (சுயே) 1,052, ஆர்.ஈஸ்வரன் (சுயே) 790, கே.கங்காதரன் (சுயே) 991, எம்.கேசவன் (சுயே)1,708, சி.கோபு (சுயே) 6,056, சி.கோவிந்தன் (சுயே) 4,169, ஆர்.எஸ்.சிவப்பிரகாசம் (சுயே) 3,603, கே.சுகுமார் (சுயே) 828, எம்.தண்டபாணி (சுயே) 558, டி.திருப்பதி (சுயே) 1,293, எம்.மணிமாறன் (சுயே) 430, கே.லலிதா (சுயே) 561, ஆர்.வெங்கடேசன் (சுயே) 764.

 

 

30 ஆண்டுக்குப் பிறகு வேலூரைக் கைப்பற்றிய அதிமுக

வேலூர் மக்களவைத் தொகுதியை 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அதிமுக கைப்பற்றியுள்ளது.

1951-52 முதல் 2009 வரை இத்தொகுதியில் 15 முறை மக்களவைத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் 4 முறை காங்கிரஸ் கட்சியும், அதிமுக ஒரு முறையும், அதிமுக, திமுக அணிகளில் இடம் பெற்ற பாமக தலா ஒரு முறையும், திமுக 5 முறையும், அதன் சின்னத்தில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து இரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

1977-ல் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.ஏ.அப்துல் சமது இத்தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.

1980-ல் அதிமுக கூட்டணி வேட்பாளர் தண்டாயுதபாணி (ஜனதா) தோல்வியை தழுவினார். 1984-ல் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணியில் 1989-ல் கே.ஏ.அப்துல் சமதும், 1991-ல் காங்கிரஸ் வேட்பாளர் பி.அக்பர் பாட்சாவும் வெற்றி பெற்றனர். 1996-ல் அதிமுக அணியில் நின்ற காங்கிரஸ் தோல்வியை தழுவியது.

1998-ல் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டு என்.டி.சண்முகம் வெற்றி பெற்றார். 1999-ல் அதிமுக வேட்பாளர் முகமது ஆசிப் தோல்வியடைந்தார். அதைத் தொடர்ந்து 2004-ல் அதிமுக வேட்பாளர் பையூர் சந்தானமும், 2009-ல் அதிமுக வேட்பாளர் எல்.கே.எம்.வாசுவும் தோல்வி அடைந்தனர்.

1984-ல் அதிமுக வேட்பாளரான ஏ.சி.சண்முகம் வெற்றிக்கு பிறகு இத்தேர்தலில் பா.செங்குட்டுவன் வெற்றி பெற்றுள்ளார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு வேலூர் தொகுதி மீண்டும் அதிமுக வசமானது.

Tags: , ,

Leave a Reply