19 ஆம் நூற்றாண்டில் தமிழகம்

19 ஆம் நூற்றாண்டில் தமிழகம் 

 
-முனைவர் வீ.அரசு

———————————————-
(தொகுப்பு: இரா.குமரகுருபரன்)
 
இந்திய முழுநிலப்பரப்பில் மதவாத சக்திகளின் எழுச்சியில் தற்போதைய ஆட்சி அமைந்துள்ள நிலையில் தமிழகத்தின் 19ஆம் நூற்றாண்டு நிலைமையை புரிந்துகொள்ள வேண்டிய தேவை நமக்கு ஏற்பட்டுள்ளது.தனித்தனியாக அமைந்த பகுதிகள் இந்தியா என்ற ஒரே தேசமாகக் கட்டப்படுதல் வரை நீண்ட வரலாறு உண்டு.250 ஆண்டுகளில் கிழக்கு இந்தியக் கம்பெனியாரும், பிரித்தானிய ஆட்சியாளர்களும் வளர்ந்து ஜார்ஜ் கோட்டையை நிறுவியது வரையிலான வரலாறு…1700இல் பம்பாயில் கால் பதித்து விலைக்கு வாங்கியது. கொல்கத்தா தலைமையகம் ஆனது ; 1899 திப்பு சுல்தான் பிடியில் சுல்தானிய ஆட்சி அதிகாரம் வருதல், கட்டபொம்மனுக்குத் தூக்கு என்கிற பின்புலத்தில் 19 ஆம் நூற்றாண்டு துவங்குகிறது.
வாழ்முறையில் சந்திக்காத பல புதிய விஷயங்கள் நிகழ்கின்றன.கி.மு.500 முதல் கி.பி.500 வரை தொல்பழங்குடி மரபு படிப்படியாக வளர்ச்சியுறுகிறது.நிலா உரிமையாளர், அரசன் கீழ் சொல்படி வாழும் மக்கள் கொண்ட சமூகமாக… கி.பி. 5 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை புதிய நிலைகள் தோன்றுகின்றன. சங்க இலக்கிய தொல்காப்பிய சமயச் சார்பற்ற மரபு சைவ, வைணவம் ஆட்சிக்கு வந்தபின் விதிக்க மரபாக மாற்றப் படுகிறது. சமண, பவுத்தம் சார்ந்த உலகாயுதம் வைதிக, பிராமணீய ஆதிக்கத்தை எதிர்கொள்ளுகிறது. 9-12 ஆம் நூற்றாண்டுகளில் சோழர்களின் பிரமாண்டமான கோவில் கட்டும் கலை உருப்பெருகிறது. தஞ்சைப் பெரியகோவில் எடுத்துக்காட்டு. சாதாரண மக்கள் அரசகுடிகளாக கோவில் நிலம், மடம் சார்ந்து வாழத் துவங்குகின்றனர். 12 ஆம் நூற்றாண்டு முதல் முகலாயர்கள், விஜயநகரப் பேரரசு, நாயக்கர் காலம் தொடங்கி, குட்டி அரசுகள், பாளையக்காரர்கள் உருவாகி, வட்டாரம் சார்ந்த சிறிய சிறிய மன்னர்கள் தோன்றிய காலம்…நிர்வாகச்சீர்படுத்தல் தேவைப்படுகிறது. விக்டோரியா மகாராணி கொடிநிறுவியதற்குப் பின்  இதுவரை இல்லாத எழுத்தறிவு குறிப்பிட்ட பண்டிதர் சாதி அதிகாரம் அடைந்தது.பார்ப்பனர்களும், குறிப்பிட்ட பகுதி பண்டிதர்களும் அரசு வட்டாரத்தில் இடம்பெற்றனர். சித்த வைத்தியர், கணக்குப்பிள்ளை என்ற கிராமப்புற அமைப்பு, ஓலை வடிவம் 19ஆம் நூற்றாண்டில் தலைகீழ் மாற்றமாக திண்ணைப் பள்ளிக்கூடங்கள் உருவாகின. பின்னர், கல்விக்கூடங்கள் உருவாக்கப்பட்டு பாடத்திட்டக் குழு ஏற்படுத்தப்பட்டது.புது எழுத்தறிவு முறை ஒடுக்கப்பட்டோருக்கு சாத்தியமானது.கல்வி, எழுத்தறிவு கொடுத்தலில் கிறித்தவத்துக்கு சமயப் பிரசார நோக்கம் இருப்பினும், அவர்கள் அளித்த கல்விமுறை முகத்தையே மாற்றியது. 1840களில்தான் எழைக்குடும்பத்து மாணவர்கள் கல்வி பெறமுடிகிறது . பெண்களுக்கு எழுத்தறிவு சாத்தியமாகிறது. பல்கலைக் கழகங்கள் உருவாக புதிய சட்டங்கள் இயற்றப்படுகின்றன. ‘சதி’ என்ற உடன்கட்டைக்குத் தடை, பலி கொடுக்கத் தடை என்பதாக மனிதனை மனிதன் மதிக்கும் சட்டங்கள், எல்லோரும் அச்சிடலாம், பத்திரிகை நடத்தலாம் என்பதற்கான சட்டங்கள் உருவாக்கப்பட்டன. எழுத்தறிவு பெற்றவர்களிடையே பத்திரிகை, புத்தகம் வாசிப்புப் பழக்கமும், பண்பும் வளர்ந்து ‘ஜர்னலிசம்’ என்று சொல்லக்கூடிய பத்திரிகைத்துறையாக பரிணமித்தது. சிறுசிறு பகுதிகளில் வாழ்ந்த மனிதர்கள் ஜனநாயகம் என்ற டெமாக்ரசியின் புதிய கருத்தாக்கத்துக்கு ஆட்பட்டனர். இப்படியே 40, 50 ஆண்டுகள் கடந்தன. சமூக ஆதிக்க சாதியினர் ஐரோப்பிய நாடுகளுக்குச்சென்றனர்   லண்டன் சென்று பயின்றனர். ஐரோப்பிய புத்தொளி அறிவு மரபு மேலோங்கியது. இதை நமது மரபாக வளர்த்தெடுக்க முயற்சிகள் தோன்றின. அதற்கான சூழலும் நிலவியது.
ஐரோப்பிய நாடுகளின் பாதிரிமார் நமது மொழி, மொழிக்குடும்பம் பற்றி ஆய்வுகளில் தோய்ந்தனர். எல்லிஸ் அவர்கள் திராவிட மொழிக்குடும்பம் ஐரோப்பிய குடும்பமரபிலிருந்து மாறுபட்டது என்றுரைத்த புரிதல்கள், (“நமக்கு வெள்ளைக்காரன் சொன்னாதான் தெரியுது”), ஓலைகளை வாசித்தவர்களை லட்சக்கணக்கில் அச்சிட்ட பிரதிகளை படிக்கவைப்பவர்களாக  மாற்றியது!…நமது சூழலும் மறுமலர்ச்சி சூழலாக மாறியது.
நமது மதம், மூடநம்பிக்கைகள், சடங்குகள் ஆகிவைகளில் மாற்றங்கள் நிகழ்ந்தன. பெரிய மனிதர்கள் முன்னுதாரணம் காணலாம். 1823 இல் சிதம்பரம் அருகிலுள்ள மருதூரில் பிறந்த இராமலிங்கம் 1858 வரை சென்னையிலும்,,பின்னர் கருங்குழியிலும் வாழ்ந்து  வடலூரில் சென்று 1867இல் சத்திய தருமச்சாலை என்பதான மடத்தை நிறுவினார். சைவ சமயத்தில் மாற்றங்கள் செய்ய விரும்பினார். வைதிக மரபாக இருந்ததை , சைவ மரபுகளின் ஊடாக மெய்யியலை முக்கிய வகையாக மாற்றினார். 11-13 ஆம் நூற்றாண்டுகளில் ஆழ்வார்கள், நாயன்மார்கள் வாயிலாக உருவாக்கப்பட்ட  தாச, சற்புத்திர, சக, சன் தத்துவ மார்க்கங்கள் வழியாக சைவ சன்மார்க்கத்தை வளர்த்தெடுத்தார். சைவ மரபு என்று சொல்லப்பட்டாலும் , சாதிக்கொடுமையும் மூட நம்பிக்கையும் கொண்ட சம்ஸ்கிருத ஆதிக்கத்தின் கீழிருந்த சைவம் அல்ல அவரது இயக்கம். சித்த வைத்திய மரபு அழிப்புக்கு அவர் வருந்தினார். பஞ்சமும், பட்டினிச் சாவுகளும், நிர்வாகச் சீர்கேடுகளும் 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் துவங்கி உருவான காலம்.. சென்னை, செங்கல்பட்டு மக்கள் இதர பகுதிகளுக்குக் குடியேற்றம் கண்டனர். அவர்களது பசி, கண்டு துடித்து,மிக நேர்மையாகச் சந்தித்த வள்ளலார் இராமலிங்கம்  பசிப்பிணி தீர்க்க அணையாத அடுப்பை உருவாக்கினார். மணிமேகலை காப்பியம் இதைத் தானே வலியுறுத்தியது!
அவரது ‘அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை’  சைவ மதத்தின்.இன்னொரு கட்டமைப்பாக மாறியது. சமூக சீர்திருத்தவாதியான விவேகானந்தர் ஆங்கில மொழியறிவு காரணமாக உலகம் அறிந்தவரானார்.ஆனால் அது அறியாத இராமலிங்கரை உலகம் அறியவில்லை என்பது மிக வேதனையானது.
 மடம், சைவம், சைவ மரபு சார்ந்து தொடங்கினாலும் ‘விடுதலை’ நோக்கியே அவர் பயணித்தார்.
வெங்கடாசல நாயக்கர் “இந்துமத ஆபாசம்” என்ற நூலை எழுதினார். ஏழை வன்னியர்கள் உழைப்பு, பார்ப்பனீய சடங்குகள் மனுதர்மம் மூலம் அழிதல் பற்றி 900 பாடல்கள் இதிலுண்டு. அதிகாரிகள் நிலத்தை ஏழைகளிடமிருந்து அபகரிப்பு செய்தது, நில மீட்சி குறித்து செய்திகள் காணப்படுகின்றன.
பிரம்ம சமாஜம் சமய மரபாக இப்போது உருப்பெறுகின்றது.19ஆம் நூற்றாண்டு கிறித்தவ மதம் வந்தபின் மேல்தட்டு வர்க்கம் அச்சமடைகிறது. மதத்தில் சீர்திருத்தம் உள்வாங்கப்படாவிட்டால் மதமும், பண்பாடும் அழியக்கூடும் என்ற கவலை பிறக்கிறது. 1828இல் பிரம்மசமாஜக் கோட்பாடு ராஜாராம் மோகன்ராயால் தோற்றுவிக்கப்படுகிறது. உருவ வழிபாடின்மை, உடன்கட்டை ஏறுதல் என்ற ‘சதி’க்குத் தடை என்பதை வலியுறுத்தி கொல்கத்தாவில் உருவான பிரம்மா சமாஜம் பல பகுதிகளுக்கும் முன்னேறுகின்றது. பிரம்ம சமாஜத்தின் பிள்ளையான வேத சமாஜம் மூலம் 1864இல் தத்துவ போதினி இதழ்  தொடங்கப்படுகிறது. புதிய ஆரியனை, சக்தியை தேடுவது நோக்கமாகக் கொண்ட இது, வழிபாடுகள் தேவை அல்ல என்ற முன்னெடுப்பையும் வைக்கிறது. 1875இல் ஆரிய சமாஜம் தோன்றுகிறது; ராமகிருஷ்ண பரமஹம்சர் கருத்து சார்ந்த கருத்தியலை முன்வைத்து, ராமகிருஷ்ண மடம் 1897இல் அவரது சீடரான விவேகானந்தர் மூலம் உருவாகிறது.
மத சீர்திருத்தங்கள் தமிழ்நாட்டிலும் தொடங்கப்படுகின்றன. மதத்தைப் பாதுகாக்க, இந்துத்வ மரபின் செல்வாக்குள்ள பணக்காரர்கள், குட்டி பூர்ஷ்வா மேட்டுக்குடியினர் ஹிந்து, சுதேசமித்திரன் ஆகிய பத்திரிகைகளைத் துவக்குகின்றனர். விதவைகள் மறுமணத்தை நீக்கமற ஆதரிக்கத் துவங்குகின்றனர். வள்ளலார் ஆண் மறுமணத்துக்கு எதிரானவர். சமயம் சார்ந்த சடங்குகள் எதிர்த்தவர். அறிவுஜீவிகள், பிரம்ம சமாஜம், வள்ளலார் என்பதாக பல்வேறு கோணங்களில் கருத்தாக்கங்கள் முன்வந்தன. யாழ்ப்பாணத்தில் ஆறுமுக நாவலர் இந்து மதத்தை ‘மிஷனரி’யாக நிறுவி, சைவ மரபு சார்ந்த பாடப்புத்தகத்தை செய்யுளிலிருந்து உரைநடைக்கு எழுதினர்.
அமெரிக்காவில் சமூக ஆர்வலர் தாமஸ் பெயின் மனித உரிமைகள் நூலை 1844இல் எழுதினர். அடிமைத்தனம் என்றால் என்ன மனித உரிமைகள் யாவன என்பது 1850இல் உலகம் அறிய முடிந்தது.இந்த சமயத்தில்தான் மும்பை, புணே நகரங்களில்  ஜோதிபா புலே பார்ப்பனீயத்துக்கு எதிராகவும், பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்தும் சத்திய சோதக் சமாஜத்தைத் துவக்கினார்.  1848இல் சூத்திர சாதிப் பெண்களுக்கு பள்ளிக்கூடம் ஏற்படுத்தினார்.மராட்டிய மண் சார்ந்த இயக்கமாக மாறியது. மதஎதிர்ப்பின்றி, அதே சமயத்தில் பெண்கள் விடுதலை, சமூக விடுதலை, வலியுறுத்திய இயக்கமாக சத்ய சோதக் இயக்கம் உருவானது; அம்பேத்கர் புலே இயக்கதிலிருந்து உருவாகிறார். கொல்கத்தாவில் மதச் சீர்திருத்தங்கள் நிகழ்கின்றன.
தமிழகப்பிரிவு சாரார், இச்சூழலை மதங்கள் பேசும் கடவுள்கள் தேவையில்லை என்று வேறொரு கோணத்தில் பார்க்கத் துவங்குகின்றனர்  “சென்னை இலௌகிக சங்கம்” (Madras Secular Society) என்ற இயக்கத்தை உருவாக்குகின்றனர். உலக நிகழ்வுகள், அமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டது. 1850இல் ப்ரூநோவைத் தூக்கிலிட்டது கத்தோலிக்க மதம்.கோபர்நிகஸ் உலகம் பந்து போன்றது; சுற்றுவது; தட்டையானதல்ல என்ற கோட்பாட்டை  முன்வைத்தாலும்,வெளியே சொல்ல பயந்தார். பௌதிக அறிஞரான ப்ரூனோ மதத்துக்கு எதிரான கருத்துக்களைக் கூறியதற்காக 1600இல் உயிரோடு கொளுத்தப்பட்டார். அவர் ஏன் கொளுத்தப்பட்டார் என்று ஐரோப்பாவே கொந்தளித்து பெரும் தாக்கம் ஏற்பட்டது. மடாலயங்கள் ஏன் புதிய சிந்தனைக்கு எதிராக இருக்க வேண்டும் என்ற விடுதலைச் சிந்தனை மரபு தோன்றி, கிறித்தவ மடாலயத்துக்கு  எதிர்ப்பாக எழுச்சி பெற்றது. 17ஆம் நூற்றாண்டு வால்டேர், பிரெஞ்சு புரட்சி மூலம் வெளிச்சத்துக்கு வந்தார். தாமஸ் பெய்ன், பெர்ட்ரண்ட்  ரஸல்,  அன்னி  பெசன்ட் அம்மையார் ஆகிய சுய சிந்தனையாளர்கள் கூட்டங்கள் இயக்க வடிவம் பெற்றன. ‘லண்டன் செகுலர் சொசைடி’ என்பது 1860இல் உருவானது. மின்சாரம், புவி ஈர்ப்பு விசை, அணு பிளப்பு, பயண ஊர்திகள் ஆகிய மனித வாழ்வை மாற்றும்  கண்டுபிடிப்புகள் , சமயம் முக்கியமல்ல; சமயச் சார்பின்மையே முதன்மையானது, மதமின்றி வாழ முடியும்  என்று சொன்ன ஐரோப்பிய அறிவாளிகள் பற்றி எடுத்துரைத்தது. கிறித்தவத் தொடர்பின்றி, அறிவியல், நீதி, அறம் பற்றிய சிந்தனைகள் மிகப்பெரும் செல்வாக்கு கொண்ட கருத்துநிலையாக மாற்றியது.
கடவுளுக்கும், மதத்துக்கும் ‘படைப்பில்’ தொடர்பில்லை என்ற “உயிர்களின் தோற்றம்” குறித்த டார்வின் கண்டுபிடிப்பு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. கடவுள் இல்லாத நிலை என்பது மரண அடியாக அறிவாளிகள் மத்தியில் செல்வாக்கு பெற்றது.
மார்க்ஸ் , எங்கல்ஸ் 1848இல் உலகத் தொழிலாளர் இயக்கத்துக்கு வழிகாட்டும் விதத்தில் கம்யூனிஸ்டு அறிக்கையை வெளியிட்டனர்.
 ‘சார்ட்டர்’ இயக்கம் சோஷலிசக் கருத்தாக்கங்கள் இல்லாவிடினும் கூட அறிவியல் பூர்வமான சீர்திருத்தங்களை முன்வைத்தது.
மக்கள் பெருக்கம் பற்றி மால்தூஸ் கொண்ட கருத்தை முன்வைத்து மால்தூஸ் மன்றம் உருவானது. 18ஆம் நூற்றாண்டு இறுதியிலும், 19ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் அடிப்படை பொருட்கள் இன்றி வறுமை துன்பத்துக்குக் காரணம் மக்கள்பெருக்கமே; இதைத் தடுத்து நிறுத்தினால் மாற்றம் வரும் என மால்தூஸ் கொள்கை வலியுறுத்தியது. மார்க்சியம் இந்தக் கொள்கையை எதிர்த்தது.
இத்தகைய சுய சிந்தனையாளர்கள் ரஸல், இங்கர்சால் மட்டுமன்றி கடவுள் மறுப்பாளன் கவிஞன்  ஷெல்லியின் ஆதரவும் இம்மன்றங்களுக்கு கிட்டியது. இத்தகைய சமூகம் சார்ந்த செயல்பாடுகளை நேரடியாக ஏற்றுக் கொண்டவர்கள் சென்னை இலௌகிக சங்கத்தார்.தத்துவ விசாரிணி, தத்துவ விவேசினி  ஆகிய இதழ்களை தமிழ் மண்ணுக்கு ஏற்ற வகையில் வெளியிட்டனர். மநுதர்ம எதிர்ப்பு,, நாத்திக மரபு, உலகாயுதம், சாங்கியம், பவுத்த மரபு போன்ற கருத்துக்களைத் தாங்கி வந்தன. ஐரோப்பாவில் மடாலயங்களுக்கும்,விவிலியத்துக்கும் எதிர்ப்பு வலுத்துள்ள நிலையை இதற்கும் ஒப்பிடலாம்.ஐரோப்பிய மரபை நாத்திக தர்க்க மரபாக  மாற்றியது இச்சங்கம். பெண்களுக்கு எதிரான கொடுமைகள், குழந்தை மண எதிர்ப்பு, விதவை மறுமணம் ஆகிய கொள்கைகளை வலியுறுத்தி எழுதின.  2000-2010இல் இப்பத்திரிகைகளை ஆய்வு செய்து  ‘தத்துவ விவேசினி’, ‘தி திங்கர்’ எனும் இரண்டு வார இதழ்களில் உள்ள செய்திகளை ஆறு தொகுதிகளாக 3,500 பக்கங்களாக ஆக்கியுள்ளேன். இதை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இவற்றைப் படிக்கலாம்.”மாற்றுவெளி” என்ற ஆய்விதழும் 14வது வெளியீட்டைக் கண்டுள்ளது. எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா, ந.முத்துமோகன், ஆ.சிவசுப்ரமணியன் ஆகியோரின் படைப்புக்கட்டுரைகள் தாங்கி வெளியாகின்றன.
19ஆம் நூற்றாண்டில் செயல்பட்ட அற மரபு 20ஆம் நூற்றாண்டில் எப்படி வளர்த்தெடுக்கப் படுகிறது? வள்ளலார் கடவுள் மறுப்பாளர் அல்ல ; பிரம்ம சமாஜத்தினர் கடவுளை மறுக்கவில்லை. ஆனால், சீர்திருதவாதிகலாக இருந்தனர். இடதுசாரிகள் உட்பட விவேகானந்தரை விதந்து பேசுகின்றனர்.
பிரதாபமுதலியார் சரித்திரம் எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை சுகுணசுந்தரி நாவலில் ” நான் கல்யாணம் பண்ணக்கூடிய இவன், நான் செத்தால் உடன்கட்டை ஏறுவானா?” என்று கதாநாயகி கேட்கிறாள்! தமிழர்களின் மூடச் சடங்குகள் பற்றி நேர்மையாகவும், சத்தியமாகவும் பேசிய நாவல்.  ஆனால்,
கத்தோலிக்க மதத்தை மறுக்காதவர் வேதநாயகம் பிள்ளை!
“ஹிந்து” இதழ் திலகர் கையிலிருந்த காங்கிரஸ் அமைப்பின்  முந்தைய  நேடிவ் அசொசியேஷன் தொடங்கிய முன்னோடிகள். நியோ-தியசாபிகல் சொசைடியை ஆல்காட் என்ற அமெரிக்கர் அமைத்தார். ஆரிய தேசம் உன்னதமானது சம்ஸ்கிருத மொழி ஆன்மிக தேடல் என்பதாகக் கூறி மத ஒன்றிணைப்புக்கு உதவியது நவீன வடிவக் கடவுட் கோட்பாடான ஆன்மா, பிரும்மம், ஞானம் என்பதற்காக வித்திட்ட நிறுவனம்.
இயங்கியல் சார்ந்த சுயசிந்தனை மரபு தேவைப்படுகிறது.கடவுள், மத மறுப்பாளர்கள் வாய்த்த கருத்துநிலையை வரலாற்றில் பதிவு செய்யவில்லை. தமிழ்ச் சமூகத்தின் மத, மூடநம்பிக்கை மறுப்பு சார்ந்த விஷயங்களை எப்படிப் புரிந்து கொள்வது?
வங்கத்திலிருந்துதான் மறுமலர்ச்சி தொடங்கியதாக கூறப்படுகிறது. அங்குள்ள சீர்திருத்தவாதிகள் கடவுள், மத மறுப்பாளர்கள் அல்லர்; மாறாக, மத, நாத்திக மறுப்பாளர்கள் தமிழகத்தில்தான் உருவாகியுள்ளனர்  இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமென்றால் எது மறுமலர்ச்சி என்ற சிங்காரவேலர், பெரியார் இயக்கங்கள், இடதுசாரி, பகுத்தறிவு சிந்தனை மரபுகளை உள்வாங்க வேண்டும்.  வங்காளம், கேரளம் ஆகிய பகுதிகளில் மதம் பற்றிய பார்வைகளுக்கும், ஜீவா, பெரியார் பங்களிப்புக்கும் உண்டான புரிதலை ஒப்புநோக்க வேண்டும்.மறுமலர்ச்சி இயக்க மரபுகளை சென்னை இலௌகிக சங்கம் எப்படி எதிர்நோக்கியது? புலே ஏறக்குறைய சமரசம் செய்தாரா ? வரலாறு எப்படி எழுதப்படவேண்டும் என்று ஆய்வு செய்ய வேண்டும்.
(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தென் சென்னை சார்பாக சென்னையில் ஜூலை 12 அன்று நடைபெற்ற தோழர் கே.பி.பாலசந்தர் மூன்றாம் ஆண்டு நினைவு சொற்பொழிவில் பேராசிரியர் முனைவர் வீ.அரசு பேசியது)
//இதன் சற்று சுருக்கமான வடிவம் தீக்கதிர் நாளிதழில் -வண்ணக்கதிர்-ஆகஸ்ட் 3 அன்று வெளிவந்தது//.

 

Tags: 

Leave a Reply