ஹுதைபிய்யா உடன்படிக்கையின் தாக்கங்கள்

அறிவோம் இஸ்லாம்
பாத்திமா மைந்தன்
46. ஹுதைபிய்யா உடன்படிக்கையின் தாக்கங்கள்
மேலோட்டமாகப் பார்க்கும்போது எந்த ஒப்பந்தத்தை முஸ்லிம்கள் பணிந்து போய் செய்து கொண்டார்கள் என்று விமர்சிக்கப்பட்டதோ, அந்த ஒப்பந்தத்தை ‘தெளிவானதொரு வெற்றி’ என்று வர்ணிப்பது, வியப்பாகத் தோன்றலாம். ஆனால் அதன் பின்னால் நடந்த நிகழ்ச்சிகளும், உருவான சூழ்நிலைகளும் உண்மையிலேயே ஹுதைபிய்யா உடன்படிக்கை இஸ்லாமிய வரலாற்றில் பெரியதொரு வெற்றிக்கான முன்னோடியாகத் திகழ்ந்தது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பு முஸ்லிம்களுக்கும், குரைஷிகளுக்கும் இடையே போர்மயமான சூழலே நிலவி வந்தது. இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் சந்தர்ப்பமோ, வாய்ப்போ அறவே இல்லாத நிலை இருந்தது. இந்தச் சமாதான உடன்படிக்கை இத்தகைய சூழ்நிலைக்கு முடிவு கட்டி விட்டது.
இப்போது முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் ஒருவரையொருவர் சந்திக்கத் தொடங்கினார்கள். அவர் களுக்கு இடையே குடும்ப மற்றும் வர்த்தகத் தொடர்புகள் ஏற்படலாயின. முஸ்லிம் அல்லாதவர்கள் எந்தவித தயக்கமோ பயமோ இல்லாமல் மக்காவில் இருந்து மதீனாவுக்கு வந்தனர். பல நாட்கள்&பல மாதங்கள் அங்கு தங்கி முஸ்லிம்களுடன் பழகினார்கள்.
எந்த நல்லடியார்களுடன் நாம் போரை விலைக்கு வாங்கிக் கொண்டிருந்தோமோ, அவர்களின் உள்ளங் களில் பகை உணர்வோ, வெறுப்போ இல்லை என்பதை உணர்ந்து கொண்டனர். இதனால் முஸ்லிம் அல்லாதவர்கள் தாமாகவே இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டனர். குரைஷித் தலைவர்கள் அவர்களின் உள்ளங்களில் விதைத்திருந்த தவறான எண்ணங்கள் தாமாகவே மறையத் தொடங்கின.
இந்த ஒப்பந்தத்திற்கு முன்பு முஸ்லிம்களின் எண்ணிக்கை மூவாயிரமாக இருந்தது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது முஸ்லிம்களின் எண்ணிக்கை பத்தாயிரமாக உயர்ந்தது.
இதே காலகட்டத்தில்தான் குரைஷிகளின் புகழ் பெற்ற தலைவர்கள் சிலர் இஸ்லாத்தினால் கவரப்பட்டு, முஸ்லிம் அல்லாதவர்களிடம் இருந்து ஒதுங்கி, முஸ்லிம்களின் நண்பர்களாய், உற்ற துணைவர்களாய் மாறினார்கள். காலித் பின் வலித், அம்ரு பின் ஆஸ், உஸ்மான் இப்னு தல்ஹா ஆகியோர் இஸ்லாத்தில் இணைந்தனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி, பத்தாண்டுகளுக்குப் போரை நிறுத்திக் கொள்வது முஸ்லிம்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். குரைஷிகளுடன் முஸ்லிம்கள் ஒருபோதும் முதலில் போரைத் தொடங்கியதில்லை. மாறாக எப்போதும் குரைஷிகள்தான் முதலில் போரைத் தொடங்கினார்கள். இந்த பத்தாண்டு போர் நிறுத்தம் என்பது அல்லாஹ்வின் பாதையில் இருந்து மக்களைத் தடுக்கும் குரைஷிகளின் கொடுமைக்கு ஒரு முடிவு கட்டப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் இன்னொரு அம்சம், முஸ்லிம்கள் இந்த ஆண்டு திரும்பிச் செல்ல வேண்டும்; வரும் ஆண்டு மக்காவுக்கு வந்து மூன்று நாட்கள் தங்கிக் கொள்ளலாம் என்பதாகும். இதன் மூலம் இறை இல்லமான கஅபாவுக்கு முஸ்லிம்களை குரைஷிகள் வரவிடாமல் இதுவரை தடுத்து வந்ததற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. அந்த ஆண்டு மட்டும் முஸ்லிம்களை மக்காவுக்கு வரவிடாமல்  தடுக்க முடிந்ததைத் தவிர வேறெந்த சாதகமும் குரைஷிகளுக்கு இல்லை.
இறுதி அம்சத்தில் இடம் பெற்ற, அதாவது ‘மக்காவில் இருந்து யாராவது தப்பித்து மதீனா வந்தால் அவர்களைத் திரும்ப மக்காவுக்கு அனுப்பி விட வேண்டும்; ஆனால் மதீனாவில் இருந்து தப்பித்து யாராவது மக்கா வந்தால் அவர்களைத் திருப்பி அனுப்ப மாட்டோம்’ என்பதையே குரைஷிகள் தங்களுக்குச் சாதகமாக நினைத்தனர். ஆனால் அதுவும் உண்மையில் அவர்களுக்குப் பாதகமானதே. ஏனெனில் எந்த ஓர் உண்மை முஸ்லிமும் அல்லாஹ்வை விட்டோ, அவனது தூதரை விட்டோ, மதீனாவை விட்டோ விலகிச் செல்ல மாட்டார். அப்படிச் சென்றாலும் அதில் முஸ்லிம்களுக்கு எந்த ஒரு நஷ்டமும் இல்லை. இதையே நபிகளார், ‘யாரொருவர் நம்மிடம் இருந்து விலகி அவர்களுடன் சென்று விடுவாரோ அல்லாஹ் அவரைத் தூரமாக்கி விடுவானாக’ என்ற சொல்லின் மூலம் சுட்டிக் காட்டினார்கள். மதீனாவில் இருந்து யாராவது தப்பித்து மக்கா வந்தால் அவர்களைத் திருப்பி அனுப்ப மாட்டோம் என்று குரைஷிகள் கூறியதை நபிகளார் ஏற்றுக் கொண்டதற்கு, தனது மார்க்கத்தின் மீதும், அதைப் பின்பற்றியவர்கள் மீதும் தான் வைத்திருந்த முழுமையான நம்பிக்கைக்கு ஆதாரமாகும்.
மேற்கூறப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் அம்சங்கள் முஸ்லிம்களுக்குச் சாதகமாக அமைந்து விட்டன.
இருந்தபோதிலும் இந்த ஒப்பந்தம் செய்தபோது வெளிப்படையான இரு காரணங்களால் அனைத்து முஸ்லிம்களின் உள்ளத்திலும் கவலை குடிகொண்டது. ‘இறை இல்லத்திற்குச் செல்வோம்; உம்ரா செய்வோம்’ என்று கூறிய நபிகளார், மக்காவுக்குச் செல்லாமலேயே எப்படி நம்மைத் திருப்பி அழைத்துச் செல்லலாம் என்பது முதல் காரணம்.
முகம்மது நபி அல்லாஹ்வின் தூதர்; அப்படியிருக்க அவர்கள் ஏன் குரைஷிகளின் நிர்ப்பந்தத்திற்குப் பணிய வேண்டும்? சமாதான ஒப்பந்தத்தில் ஏன் தாழ்மையான நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்? என்பது இரண்டாவது காரணம். இதன் காரணமாக முஸ்லிம் களின் உணர்வுகள் காயமடைந்தன. ஏனைய மக்களைக் காட்டிலும் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவலை கொண்டார். ஒப்பந்தம் முடிந்ததும் நபிகளாரை சந்தித்து தனது மனக்குறையைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ‘(நபியே! ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கையின் மூலம்) நிச்சயமாக நாம் உங்களுக்கு (மிகப் பெரிய) தெளிவானதொரு வெற்றியைத் தந்தோம். (அதற்காக நீங்கள் உங்களது இறைவனுக்கு நன்றி செலுத்துவீராக!)’ (திருக்குர்ஆன்&48:1) என்ற வசனம் அருளப்பட்டது.
உடனே நபிகளார் ஒருவரை அனுப்பி அந்த வசனத்தை உமர் (ரலி) அவர்களிடம் ஓதிக் காட்டும்படி கூறினார்கள். அதைக் கேட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்த உமர், ‘அல்லாஹ்வின் தூதரே! இது வெற்றியான விஷயமா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபிகளார், ‘ஆம்’ என்றவுடன் உமர் மனமகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றார்.
Tags: , ,

Leave a Reply