வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை கலெக்டர் தகவல்

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையினை இரண்டு மடங்காக உயர்த்தி ஆணை வழங்கப்பட்
டுள்ளது.
வரும் ஜூன் 30, 2017 காலாண்டு முதல் 9ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10ம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300ம், பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டிற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்குமேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும்.
தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும் மாணவ, மாணவியருக்கு இவ்உதவிதொகை வழங்கப்பட மாட்டாது. எனினும், தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவிதொகை பெறலாம்.
ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 வருடம் வரை உதவித் தொகை பெற நாளது தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைத்து தொடர்ந்து உதவித்தொகை பெறலாம். சுயஉறுதி மொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவிதொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்றவர்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600 வீதமும் பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000ம் வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த ஒரு அரசு அலுவலகத்திலும் உதவித்தொகை பெறக்கூடாது.
இந்த உதவித் தொகை பெறுவதற்கு மேற்காணும் தகுதிகள் உள்ளவர்கள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்து கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்று கொள்ளலாம். விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் வருடம் முழுவதும் வழங்கப்படும். உதவித்தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது என கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

Tags: , , , ,

Leave a Reply