வெளிநாடு சுற்றுலா செல்வோர் முன்கூட்டியேபாஸ்போர்ட் எடுக்குமாறு அதிகாரி வேண்டுகோள்

கோடை விடுமுறையில் வெளிநாடு சுற்றுலா செல்வோர், இறுதி நேரத்தில் வந்து பாஸ்போர்ட் பெறுவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க முன்கூட்டியே விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என மண்டல அதிகாரி எஸ். லிங்குசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

தற்போது பள்ளித்தேர்வுகள் முடியும் தருவாயில் உள்ளன. தேர்வுகள் முடிந்தபின் கோடைச்சுற்றூலா செல்வது வழக்கம். சமீபகாலங்காலமாக கோடை விடுமுறையில் குடும்பத்தினரோ, நண்பர்கள் மற்றும் குழுவாகவோ வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் வழக்கம் அதிகரித்துள்ளது.

அவ்வாறு வெளிநாட்டு சுற்றுலா செல்ல பாஸ்போர்ட் அவசியமாகின்றது. எனவே கோடை விடுமுறை விடுவதற்கு முன்னரே பாஸ்போர்ட் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. விடுமுறை விட்டபின்னர் வெளிநாட்டு சுற்றுலா செல்ல திட்டமிட்டு அது தொடர்பான அனைத்துப்பணிகளையும் முடித்துவிட்டு இறுதியில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்காமல் முன்கூட்டியே பாஸ்போர்ட் விண்ணப்பித்தால் உரிய நேரத்தில் பாஸ்போர்ட் கிடைத்துவிடும், சுற்றுலா செல்வதில் எந்த தடையும் ஏற்படாது.

மேலும் கையால் எழுதிய பாஸ்போர்ட் வைத்திருப்போர் அவற்றை இயந்திரத்தில் அச்சிட்டு பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் 2015 நவம்பர் 24-ம் தேதி வரைதான் கைகளால் எழுதிய பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்த முடியும். அதன்பின் அதற்கு தடைவிதிக்கப்படும் என சர்வதேச விமான போக்குவரத்து நிறுவனம் ஏற்கெனவே அறிவித்துள்ளது (இது குறித்து செய்தியும் பிரசுரமாகியுள்ளது). எனவே கைகளால் எழுதப்பட்ட பாஸ்போர்ட் வைத்திருப்போர் அதனை சமர்ப்பித்து இயந்திரத்தால் அச்சிடப்பட்ட பாஸ்போர்ட்டுகளை பெற்றுக்கொள்வதும் அவசியமாகும். புதுப்பித்தல் அல்லது கைகளால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை மாற்றம் செய்வோர், வேறு ஏதேனும் திருத்தங்கள் அல்லது சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வோர் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். பெயர் மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு உரிய சான்றுகளுடன் விளம்பரம் செய்யப்பட்ட நகலும் தேவை.

இவற்றுடன் வழக்கமான நடைமுறைகளின்படி  விண்ணப்பித்து பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ள வேண்டும். கடந்த சில மாதங்களில் திருவாரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பாஸ்போர்ட் சிறப்பு முகாம்கள் 2 நடத்தப்பட்டு அதன் மூலம் சுமார் 800 பேர் பயனடைந்துள்ளனர். அதுபோல மேலும் பாஸ்போர்ட் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன என்றார்.

Tags: , ,

Leave a Reply