வெயிலோடு உரையாடல்

வெயிலோடு உரையாடல் 
எஸ் வி வேணுகோபாலன் 
 
காய்தல் உவத்தல் அன்றி 
சமமாகத் தன்னை எல்லோர்க்கும் 
அர்ப்பணித்துக் கொள்கிறது வெயில் 
 
நிழலாகப் பார்த்துப் 
பதுங்கி இருப்போரையும் 
மறைவாக எங்கோ 
ஒதுங்கி இருப்போரையும் 
‘வெளியே வா பார்த்துக் கொள்கிறேன்’ 
என்று காத்துக் காய்ந்து கொண்டிருக்கிறது வெயில் 
 
வழிய வழிய பாட்டிலில் 
எண்ணெய் ஊற்றி அனுப்பும் 
கடைக்காரன்போல 
உடல்முழுக்க வெம்மையூற்றி நிரப்பி 
அனுப்பி வைக்கிறது வெயில் 
 
வெளியூரிலிருக்கும் மகன் கடுதாசிக்காக 
ஏங்கியேங்கித் தவிப்பதுபோல் 
வாசல் திண்ணையிலிருந்தபடி 
மழைக்காக வானத்தை 
எட்டியெட்டிப் பார்த்து ஏமாந்து 
உதடு சுளிக்கவைக்கும் சுள் வெயில் 
 
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து 
தானே பேசுபொருளாகித் 
தன்புகழை எல்லோரும் 
வேர்க்க விறுவிறுக்கப் 
பாடவைக்கிறது வெயில் 
 
வெயிலுடுத்துப் புறப்படுகிறான் 
விடுமுறை நாட்களின் 
விளையாட்டுக்கு ஆள் தேடும் சிறுவன் 
 
வெயிலோடு பேசியபடி 
போய்க்கொண்டிருக்கிறார் வண்டியோட்டி 
வெயிலை இறக்கிவைத்து மொண்டெடுத்துக் கொடுத்துவிட்டு 
வெயிலைத் தலைக்கேற்றி 
வெயில் கைப்பிடித்து நடக்கிறாள் மோர் விற்பவள் 
 
கைநழுவி விழுந்த வெயிலெடுத்துத் 
தலையில் சும்மாட்டிடையே அழுத்தி வைத்து 
வெயில் சுமந்து சாரத்தில் ஏறுகிறாள் சித்தாள் 
 
வெயிலழகு வெயிலமுதம் வெயிலின்பம் 
வெயிலன்பு வெயிலினிமை வெயிலருமை
வெயிலுக்கு வெயிலே இணை.
Tags: ,

Leave a Reply