வீரபாண்டிய கட்டபொம்மனின் 255வது பிறந்த நாள்

தமிழர்களின் வீரத்தை வெளிச்சம் போட்ட

வீரபாண்டிய கட்டபொம்மனின் 255வது பிறந்த நாள்

தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போராடிய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 255வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. 1760ஆம் ஆண்டு ஜனவரி 3 அன்று ஆறுமுகத்தம்மாள் – திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். இவருக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் சுதந்திர போராட்டம்:

கும்பினியார் (ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி) கி.பி. 1793யில் கப்பம் கேட்டனர். கி.பி. 1797யில் முதன் முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797 – 1798யில் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன், வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798யில் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். செப்டம்பர் 5, 1799யில் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். செப்டம்பர் 9 1799யில் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799யில் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799யில் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 02.02.1801யில் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலக் குறிச்சிக் கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது. ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801யில் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து 24.05.1801யில் அதனைக் கைப்பற்றியது. ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக் குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர். கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.

1974-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை அன்றைய தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி எழுப்புவித்தார். அது இன்றளவும் வீரபாண்டியனின் புகழ்பாடி நிற்கிறது. அன்று முதல் இன்று வரை வீரபாண்டிய கட்டபொம்மனின் பெயரை நினைத்தாலே தமிழர்களின் மனதில் ஒரு எழுச்சி பிறக்கிறது என்பது ஒரு மறுக்க முடியாத உண்மையாயிற்று.

 

Tags: ,

Leave a Reply