விவசாயியின் நலம் காப்போம்

விவசாயியின் நலம் காப்போம்
ஏறு பூட்டி ,சால் ஓட்டி
தண்ணி பாய்ச்சி , விதை விதைச்சி
சேத்தில் இறங்கி , நாத்து நட்டு
உரத்தைப் போட்டு ,களையெடுத்து ,
நெத்தி வேர்வை நிலத்தில் சிந்தி
நேர்த்தியாப் பாத்துகிட்டு
கதிரறுத்து , களமடிச்சி
சந்தையிலே வித்துப்புட்டு
வந்த காசை வச்சிக்கிட்டு
கூழு, கஞ்சி குடிச்சிப்புட்டு
வானம்பாத்து ,அடுத்த போகம்
விளைச்சிடவே காத்திருப்பான் .

நெல்லு வாங்கிப்போனவனோ
கொள்ளை விலைக்கு வித்துப்புட்டு
வெள்ளையும் சள்ளையும் போட்டுக்கிட்டு
வெற்றியோடு வலம்வருவான் .
சோறுபோடும் விவசாயி
சோந்துபோயி படுத்திருப்பான்.
மழையும் பொய்த்து வறண்டுப்புட்டா
மனசு நொந்து போயிடுவான் .
வறண்டு போன நிலத்தைப்பாத்து
வாழ்க்கையையே முடிச்சிக்குவான் .
மக்களுக்கு சோறுபோடும் விவசாயியின்
சிக்கல்களைத் தீர்க்காம
பக்கபலமாய் நின்று
தற்கொலையைத் தடுக்காம
கட்சியை வளர்க்கவே
கடனுக்கொரு ஆர்ப்பாட்டம்
கண்துடைப்பு அறிக்கையின்னு
அரசியலார் செய்திடுவார்.
ஆட்சியில் இருக்கையிலே
அணுவளவும் அசைக்காமே
எதிர்க்கட்சி ஆனவுடன்
ஏகமாய்க் கூவிடுவார் .

மழையும் கைவிட்டு
மனிதரும் கைவிட்ட
விரக்தியால விவசாயி நிலத்தை
வித்துப்புட்டு போயிடுவான் .
விளைநிலமெல்லாமே
வீடுகளா மாறிடுதே.
விளைநிலங்கள் எல்லாம்
வீடுகளாகிவிட்டால்
வீடுகள் பட்டினியால் -சுடு
காடாகிப் போய்விடுமே.
விளைவுகள் அறியாமல்
வீணர்கள் வினை செய்வார்
அரசாங்கம் நடத்தாமல்
அரசியலே நடத்துகிறார் .

விவசாயம் நாட்டின்
முதுகெலும்பென்றுரைத்திடுவார்
முதுகெலும்பை முறிக்கும்
முயற்சியும் செய்திடுவார் ..
வரு பசிதீர்க்க உழைக்கும்
வள்ளலாய் இருக்கும் விவசாயி
வாடும் பயிரைக்கண்டு வாடி
வள்ளலாராய் ஆகின்றார்

பசிபோக்கும் விவசாயி
பட்டினியில் இறந்துவிட்டால்
நசித்திடும் விவசாயம்
நஷ்டம் நமக்கும்தான்
பசிக்குச் சோறின்றி
பல்தொழில்துறைகளிலும்
உழைப்பவன் ஓய்ந்துவிட்டால்
தொழில் வளம் ஓய்ந்துவிடும்.
தொழில் வளம் ஓய்ந்துவிட்டால்
வரி வசூல் குறைந்துவிடும்
வருமானம் குறைந்துவிட்டால்
அரசாங்கம் ஸ்தம்பிக்கும் .
அரசாங்கம் ஸ்தம்பித்தால்
அரசியலார் அழிந்திடுவார் .

அரசியலார் வைக்கும் தீ
அனுமன் வால் தீயைப்போல்
அவரையும் எரித்துவிடும் -நம்
அனைவரையும் எரித்துவிடும் .
மழைவளம் பெருகிடவே
மரவளம் பெறுக்கிடுவோம்.
மழைவெள்ளம் வீணாதல்
அணைகட்டி தடுத்திடுவோம்.
ஆறுகளும் ஏரிகளும்
தூர்வாரி காத்திடுவோம்.
மணல் திருட்டைத் தடுத்து
நீர்வளம் காத்திடுவோம் .
நதிநீரைப் பங்கிட்டு
நாட்டுப் பற்றைக் காட்டிடுவோம்.
ஆற்றுநீரில் கலக்கும்
ஆலைக்கழிவைத்தடுத்திடுவோம்.
இயற்கை உரம்கொண்டு
பயிர்வளம் காத்திடுவோம்.
மக்கள் பசிதீர்ப்பவனின்
தற்கொலை தடுத்திடுவோம்.
விளைபொருளுக்குரிய விலை
விவசாயிக்களித்திடுவோம் .
விவசாயத்தொழிற்கருவி
விலையின்றி வழங்கிடுவோம்.
விவசாயத் தொழில்வளர
வேண்டுவன செய்திடுவோம்.

தன்னலம் கருதாது
பொதுநலம் கருதியே
பொழுதெல்லாம் உழைத்திடும்
பொன்னான விவசாயியின்
நன்னலம் காத்தலில்
நம் நலமும் உண்டென்று
நாமெல்லாம் உணர்ந்திடுவோம்.
நாட்டுநலம் காத்திடுவோம். .
.
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
09.01.2017

Tags: 

Leave a Reply