விருப்பின் பொருள் வெறுப்பு

2010 தீக்கதிர் தீபாவளி மலரில் வந்திருந்த  இந்தச் சிறுகதை உங்களது வாசிப்பிற்கு…

எஸ் வி வி


சிறுகதை                                              


விருப்பின் பொருள் வெறுப்பு
எஸ் வி வேணுகோபாலன் 


‘தீ
பாவளி பண்டிகை என்ன தமிழர் திருநாளா, நான் அதெல்லாம் கொண்டாடுறதில்லிங்க..’ என்று வெளியே வெற்றுப் பெருமைக்குச் சொல்லிக் கொண்டாலும், நரசிம்மன் வாழ்க்கையில் அதற்கு வேறு கசப்பான காரணங்கள் இருந்தது இந்த உலகுக்குத் தெரியாது.  உலகத்திற்கு அத்தனை கவலை இருந்தால், அதாவது ஆகுபெயர் அடிப்படையில் உலகிலுள்ள மக்களுக்கெல்லாம் அத்தனை அக்கறை இருந்திருந்தால் இந்தக் கொடுமையெல்லாம் ஒரே மனிதனுக்கே தொடர் ஓட்டப் பந்தயம் மாதிரி நடந்து கொண்டே இருக்குமா…

அப்போது நரசிம்மனுக்கு ஆறு வயது.  எப்போது என்று கேட்கக் கூடாது.  இதெல்லாம் ஒரு சொல்வழக்கு.  நரசிம்மனது பாட்டி மரணப் படுக்கையில் இருந்த நேரம்.  இந்தத் தீபாவளி தாண்டாது என்று அடுத்த வீடுகளில் இவன் காது படப் பேசிக்கொண்டனர். தீபாவளி எப்படி தாண்டும்.  அதென்ன நம்ம மாதிரி பச்சைக் குதிரை தாண்டும் வஸ்தாதா என்று தோன்றினாலும், பாட்டியின் கடைசி காலம் வந்து விட்டதைக் கஷ்டத்தோடு அவனும் பார்த்துக் கொண்டிருந்தான்.

வழக்கமாகவே அப்பா இந்தத் தீபாவளி விவகாரங்களை இரண்டு நாளுக்கு முன்தான் பேச்சாகவே தொடங்கிவைப்பார்.  விடிஞ்சா தீபாவளி என்றால் அன்று இரவு கடைத்தெருவில் கடைசிக்கும் கடைசியான கோஷ்டியாக இந்தக் குடும்பம் துணிமணி வாங்கப் போய் நிற்கும்.  இத்தோட அடுத்த தீபாவளிக்குத் தான் விக்கும் என்ற நிலையில், அந்த மாதிரி நேரத்தில் போனால் தான் கடைக்காரன் அப்படியே சகாய விலைக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பான் என்பது அப்பாவின் ஐதீகம்.  காணச் சகிக்காத கண்ராவிக் கலரில் ஊர்  முழுக்கக்  கழிச்சு விட்டுப்  போன அயிட்டங்கள் தான் நம்ம தலையில் கட்டுவான், உங்கொப்பனுக்கு எவன் எடுத்துச் சொல்றது என்று அம்மா, அவனிடம் கடையிலேயே வைத்துப் புலம்பிக் கொண்டே, இது நல்லாயிருக்குங்க, மலிவாவும் இருக்கு…என்று ஏறெடுத்துப் பார்க்காமலேயே ஏதோ சரக்கைக் கட்டி வீட்டுக்கு எடுத்து வந்துவிடுவது வழக்கம். 

அப்புறம் பட்டாசு வாங்குறது பெரிய ராவுடி.  பசங்க மெனக்கெட்டு கடைக்காரன் கொடுக்கும் பட்டியலில் ஒண்ணொண்ணா டிக் போட்டு திருப்பிக் கொடுக்கிரவரைக்கும் அப்பா பெருந்தன்மையாத் தான் தெரிவார்.  எல்லாம் எடுத்துச் சேர்த்துப் பொட்டலம் போட்டு நீட்டும்போது, எவ்வளவு ஆச்சு என்பார்.  விலையைச் சொல்லவும் ராக்கெட்டு எட்டுற ஒசரத்துக்குக் குதிப்பார்.  ஏண்டா, என்னங்கடா இத்தனை ஆயுதம் வாங்கிக் குவிச்சிருக்கீங்க. இது காந்தி பொறந்த நாடு. புத்தன் பொறந்த நாடு. சமாதானம் தான் உயிர் மூச்சுன்னு புறா பறக்கவிட்ட நேரு பொறந்த நாடு.  எதுக்குடா அணுகுண்டும் ஹைடிரஜன் குண்டும் போட்டு ஊரை, நாட்டை அழிக்கிறீங்க  என்று ஏதோ ஜப்பான் மேலே இவங்க தான் குண்டு வீசின மாதிரி ஒரு முறை முறைப்பார்.

இப்போது பட்டியல் அவர் கைக்குப் போய்விடும்.  பொட்டு கேப்பு (‘அதென்னடா கொள்ளைக்காரன் மாதிரி துப்பாக்கி, கேக்கறேன்..’), ஊசி வெடி, பிஜ்லி உதிரி வெடி, பாம்பு மாத்திரை (இதப் போட்டுக் கொளுத்தினாலும் கொசுவை விரட்டுன புண்ணியம் உண்டு… ), சாட்டை, சின்ன புஸ்வாணம் (‘பெரிசு வச்சுப் பத்தவிட்டா தென்ன மரம் பட்டுரும்’), கம்பி, கைச் சக்கரம் (மகா விஷ்ணுவே நேரில் வர்ற மாதிரி இருக்கட்டும்..அப்பத்தான் நரகாசுரனைக் கொல்ல முடியும்..)…என்று மாற்றி மாற்றிப் போட்டுட்டு, மறுநாள் விடியலில் அரைமணியில் வாங்கிய எல்லா வெடியும், வாணமும் விட்டு ஓய்ந்து போய் எதுத்த வீட்ட முறைச்சிட்டு நிக்கையிலே, ‘டேய், எப்படியோ இந்த முறை கால் மணி அதிக நேரம் வெடிச்சிருக்கீங்க, ஏமாத்தி நிறைய வாங்கிட்டீங்கடா’ என்று வெறுப்பேற்றும் பேச்சு வேறு.

முன்னதாக, துணி மணி வாங்கிய கையோடு திரும்பி வர்ற வழியில் சாமிநாதன் டெயிலரிடம் சொக்காயும், அரை நிக்கரும் தைக்கக் கொடுத்து அங்கேயே உட்கார்ந்து பக்கத்திலிருந்து தைத்து வாங்கிக் கொண்டு வந்துவிடு என்று அவனையும் சேர்த்து அடகு வைத்தது மாதிரி விட்டுவிட்டுப் போய்விடுவார் அப்பா.  அந்த ஆள் வைத்திருக்கும் துணி மலையைப் பார்த்தால் இன்னும் ஒன்பது தீபாவளி கழித்து வந்தாலும் தைத்துக் கிடைக்காத மாதிரி தெரியும்.  இதுக்கு நடுவில், அளவு சரியில்ல, அளவுக்குக் குடுத்த துணி திரும்பி வல்ல, இது எங்க துணியே இல்ல…என்று நிமிசத்துக்கொரு பஞ்சாயத்து வேறு நடக்கும்.  மூன்று மணி நேரம் உட்கார்ந்து கண் சுழல ஆரம்பிக்கும் நேரம், சாமிநாதன், தம்பி ராசா தூக்கம் வந்துடுத்து பாரு, நீ போயிரு, நான் வீட்டுக்குப் போற வழியில் கொடுத்துட்டுப் போயிர்றேன் என்பார்.  அப்படியெல்லாம் துணி வந்து சேராது. திரும்பி, அதிகாலையில் திடுக்கிட்டு எழுந்து அண்ணனைக் கூப்பிட்டுக்கிட்டு வழி நெடுக படுத்திருக்கும் கருப்பு நாய்களை எச்சரிக்கையாக ஏமாற்றி நடந்து வந்தால், விடிய விடிய தெச்சிட்டிருப்பார் டெயிலர். துணிக்குவியலைக் காட்டி ஒன் துணிய எடுத்துக் கொடு, சட்டுன்னு ஒரு அடி அடிச்சுக் கொடுத்திடறேன் என்று அவர் சொல்லும்போது எங்கேயாவது ஓடிப்போயிரலாம என்று தோன்றும்…..

ந்தத் தீபாவளிக்கு  இப்படியான கொண்டாட்டத்துக்கும்  ஆபத்து வந்திருச்சு என்று தெரிந்துவிட்டது.  பாட்டியைப்  பார்த்தபடி, அண்ணன் கிட்ட உக்காந்து அழ ஆரம்பித்தான் நரசிம்மன்.  அப்பா, பாட்டிக்கு ஒண்ணும் ஆயிராதே என்று கேட்டான் நரசிம்மன்.   பசங்களுக்குப் பாட்டின்னா அம்புட்டு உசுருன்னு  யாரிடமோ அப்பா சொல்லிக் கொண்டிருந்தார்.  சரியாக அப்பா கடைத்தெருவிற்குப் புறப்படும் நேரம் பார்த்து, பாட்டி கொஞ்சம் சமிக்ஞைகளைக் கொடுக்க ஆரம்பித்தாள்.  நடு ராத்திரி நேரம் இவன் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது, ‘அத்தே  போயிட்டீங்களா…’ என்று அம்மா அலறிய போதுதான் இவனுக்குத் தெரிந்தது.  பாட்டி  அவளூருக்குப் புறப்பட்டு விட்டாள்.

அந்த நேரத்திலேயே வந்து சேர ஆரம்பித்த உறவுசனத்தில் ஒரு ஆள், ‘நியாயப்படி பார்த்தால், அடுத்த வருசமும் உங்களுக்கு தீபாவளி கிடையாது’ என்று அப்போது அது ஒரு முக்கிய முடிவெடுக்க வேண்டிய விஷயம் மாதிரி சொல்லிவிட்டார்.  அடுத்த நாள் பாட்டியை வழியனுப்பப் போனால் வேறு தினுசில் வெடிகளை வெடித்துக் கொண்டு கோலாகலமாகச் சென்று கொண்டிருந்தாள் பாட்டி.  பாட்டியைப் பறி கொடுத்தது வேதனையானது என்றாலும், தீபாவளி அன்றைக்காப் பார்த்து அவள் இப்படிச் செய்திருக்கக் கூடாது என்று அவன் உணர்ந்தான்.  இனிமேல் அவளிடம் சண்டை போட முடியாது என்பதால் பிரச்சனையை அத்தோடு விட்டுவிட்டான் நரசிம்மன். 

தற்கப்புறம் வந்த தீபாவளி ஒன்றின்போது, அப்பா ஏதோ வேண்டுதல் என்று திருப்பதி மலைக்கு எல்லோரையும் அழைத்துச் சென்றுவிட்டார்.  பண்டிகை நாளில்தான் மலையில் கூட்டம் இருக்காது என்பது அவரது ஆராய்ச்சி அறிவு.  அங்கே மலையில் ஈரத் துணி சுற்றி எல்லோரையும் அங்கப் பிரதட்சிணம் செய்ய விட்டு, புது துணி போட முடியாதபடி பார்த்துக் கொண்டவர், மலையில் வெடியெல்லாம் கூடாது, தடை செஞ்சிருக்காங்க என்று பக்குவமாச் சொல்லி கன்னத்தில் சாமிக்குப் போட்டபடி ஊருக்குக் கூட்டிச் கொண்டு வந்துவிட்டார்.  பள்ளியில் அவனவன் பட்டாசு வெடித்த கணக்கை ஒப்பிட்டுக் கொண்டிருக்க, ‘லட்டு வடை வாங்க எவ்வளவு கஷ்டம் தெரியுமா திருப்பதி மலையிலே…’ என்று அளந்து விட்டுக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று நரசிம்மனுக்கு.

அப்புறம் ஒரு தீபாவளியின்போது முதல் வெடியில் கையைச் சுட்டுக் கொண்டு பதறியதில் நெருப்புப் பொறி விழுந்து சட்டை வேறு ஓட்டை ஆகி பெரிய ரகளை ஆகாமல் தப்பியது பெரும்பாடு ஆனது.  அதற்கடுத்த ஆண்டுகளில் ‘அவனுக்குப் பாவம் தீபாவளின்னாலே அலர்ஜி குழந்தை தானே..’ என்று எல்லோரும் பேசத் தொடங்கிவிட்டனர்.  அப்போது குழந்தை நரசிம்மனுக்கு பதினாலு வயது.  எப்போது என்று கேட்க மாட்டீர்கள் தானே. இப்படியாகத் தானே, தீபாவளியைப் பிடிக்க விடாதபடி ஒரு கூட்டமே வேலை செய்து அவனை அப்படி பிடிக்காது என்று சொல்பவனாக மாற்றிவிட்டது. 

டித்து முடித்து ஒரு வேலைக்கும் போய் சொந்தச் செலவில் கொண்டாட ஒரு தீபாவளியும் வரத்தான் செய்தது.  ஆள் ஆளுக்கு ஆசை ஆசையாய்க்  கோரிக்கை வைக்கவும், கம்பெனியில் கடைசி நேரத்தில் அவனைப் பார்த்து விட்டெறிஞ்ச போனஸ் காசுக்கு பெரிய ஏற்பாடெல்லாம் யோசிக்க முடியவில்லை. மற்றவர்களுக்கெல்லாம் கேட்டதை எடுத்துக் கொடுத்தான். ‘அவன் பாவம் அப்படித்தான், தனக்குன்னு யாதொண்ணும் செஞ்சுக்க மாட்டான்’னு அம்மா தொலைபேசியில் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்ட குஷியில் தியாகியாகவே மாறியும் விட்டான். 

வம்படியாகப் பழைய லுங்கியைக் கட்டிக் கொண்டு வெளியே வந்தான்.  தெரு முழுக்க யார் யாரோ வைத்துக் கொண்டிருந்த வெடிகளைப் பார்த்துக் கடந்து போய், ராவுத்தர் பாய் டீக்கடையில் உட்கார்ந்து கொண்டு, ‘என்னாத்துக்குங்க இப்படி காசைக் கரியாக்கி ஒரு பண்டிகையோ, நமக்கு இதெல்லாம் பிடிக்கறதில்லிங்க பாய், என்ன இருந்தாலும் பொங்கல் மாதிரி வருமா, ஒரு டீ போடுங்க பாய்… ‘  என்று சொல்லிக் கொண்டான்.

****************
நன்றி:  தீக்கதிர் தீபாவளி மலர் 2010
Tags: , ,

Leave a Reply