வந்ததோ சுற்றுலா; வியந்து கற்பதோ சிற்பக் கலையை..!

  • மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக்கலைக் கூடத்தில் சிற்பம் செதுக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி.
    மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக்கலைக் கூடத்தில் சிற்பம் செதுக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி.

மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்துள்ள வெளிநாட்டவர் 15 பேர் சிற்பங்களைச் செதுக்கும் 3 மாதப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சிற்பக் கலைஞர் ஸ்டெபனோ (71) என்பவர் தலைமையில், குளோபல் ஸ்டோன் எனும் சர்வதேசச் சிற்பக்கலை ஆர்வலர்கள் மையம் சுவீடனில் இயங்கி வருகிறது. இவர் பல்வேறு நாடுகளில் சிற்பக் கலை தொடர்பான கண்காட்சிகளை நடத்தி வருகிறார். இவரது தலைமையில் ஹாலந்து, இத்தாலி, நார்வே, சுவீடன், டென்மார்க், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 15 பேர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுலா சென்ற இவர்கள், மாமல்லபுரத்துக்கு அண்மையில் வந்தனர். இங்குள்ள கடற்கரைக் கோயில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட பல்லவர் காலத்து உயிரோவியக் கலைச்சிற்பங்களைப் பார்த்து வியந்தனர். பல்லவர் காலத்துக்குக் கலைப்பாணிச் சிற்பங்களின் மீது எழுந்த ஆர்வம் காரணமாக மாமல்லபுரத்தில் சில மாதங்கள் தங்கி சிற்பம் செதுக்குவது குறித்து கற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.

இதையடுத்து, மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக்கலைஞர் த.பாஸ்கரனிடம் தங்கள் ஆர்வத்தைத் தெரிவித்தனர். பின்னர் அவர் தனது சிற்பக்கலைக் கூடத்தில் 15 பேருக்கும் முதற்கட்டமாக கருங்கல், பச்சைக்கல் கிரானைட் கற்களில் சிற்பம் செதுக்கும் பயிற்சியைத் தொடங்கினார்

முன்னதாக, பயிற்சி எடுக்கவந்த வெளிநாட்டு கலைஞர்களுக்கு தமிழ்க் கலாசாரப்படி மலர்மாலை அணிவித்து நெற்றியில் திலகமிட்டு பயிற்சியாளர் பாஸ்கரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கற்பூரம் ஏற்றி பூஜை நடத்திய பின்னர், வெளிநாடடு சுற்றுலா பயணிகள் சிற்பம் செதுக்கும் பயிற்சியில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.

தொடக்க விழா நிகழ்ச்சியில் மதிமுக துணைப் பொதுச்செயலர் மல்லை சத்யா, மல்லை தமிழ்ச் சங்கச் செயலர் ஏ.எச்.அப்துல் அமீது, சிற்பக் கலைஞர்கள் எம்.மகாதேவன், வி.ஜெகந்நாதன், ஆதிமூலம், இளையராஜா, நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் எம்.செந்தாமரைக் கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பயிற்சி

இதுதொடர்பாக பயிற்சியாளர் ஸ்தபதி பாஸ்கரன் கூறுகையில், நவீனக் கலைச் சிற்பங்கள், பல்லவர் கலைப் பாணி சிற்பங்களை உளியினால் செதுக்குவது, வடிவமைப்பது, மெருகேற்றுவது குறித்து தனித்தனிக் குழுக்களாக வெளிநாட்டுக் கலைஞர்கள் 15 பேருக்கு மார்ச் மாத இறுதி வரை பயிற்சி அளிக்கவுள்ளோம். தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கடவுள் சிற்பங்கள், இயற்கைச் சிற்பங்கள் என பல்வேறு படைப்புகள் செய்ய இங்கு பயிற்சியளிக்கப்படும்.

இந்தியர்களைவிட ஐரோப்பா கண்டத்தில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு கலை ஆர்வம் அதிகம் என்றார்.

“மனதைக் கவர்ந்த கலைச்சிற்பங்கள்’

மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள் குறித்து குறித்து சுவீடன் நாட்டுக் கலைஞர் ஸ்டெபனோ நிருபர்களிடம் கூறியதாவது:

சுவீடன் நாட்டில் ஐரோப்பிய கலைப்பாணி சிற்பங்களை வெண்கலம், கிரானைட் கற்களில் செதுக்கும் பயிற்சி அளித்து வருகிறேன். அந்தச் சிற்பங்கள் சாதாரணமாக இருக்கும். ஆனால், பல்லவர் காலத்து கலைச்சிற்பங்கள் அருமையாக தத்ரூபமாக பார்ப்பவர்களின் மனதைக் கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளன. இதைக் கற்றுக் கொள்ள ஆர்வமாக உள்ளேன். 3 மாதங்களுக்குத் தனித்தனிக் குழுவாகப் பயிற்சி எடுக்கவுள்ளேன் என்றார்.

Tags: ,

Leave a Reply