வசிப்பிடப் பகுதியிலேயே அனைத்து சான்றிதழ்களும் பெறும் வசதி

பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள அரசு அலுவலகங்களிலேயே அனைத்துச் சான்றிதழ்களையும் கணினி மூலமாக பெற்றுக்கொள்ளும் வசதி தமிழகத்தில் முதல்முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து அனைத்துப் பள்ளிகளும் இம் மாதம் 2 ஆம் தேதி திங்கள்கிழமை திறக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகளில் சேர்ந்து மேற்படிப்பு படிக்கவும், அரசின் சலுகைகளைப் பெறவும் தமிழக அரசின் சார்பில் வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியன அவசியமாகவும், அவசரமாகவும் தேவைப்படுகிறது. இச் சான்றிதழுக்கான விண்ணப்பங்களை கடையில் விலைக்கு வாங்கி, பூர்த்தி செய்து கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரிடம் கையெழுத்தும், அரசின் முத்திரையும் இடப்பட்டு சான்றிதழ் பெறும் முறையே பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வந்தது. இம்முறையால் அதிகாரிகளை சான்றிதழ் பெறுவதற்காக தேடி அலைந்து நேரம் வீணாகியது.

இம் முறையை மாற்றி நேரம் வீணாகாமலும், தேவையில்லாத செலவுகள் ஏற்படுவதைத் தவிர்க்கவும் அவரவர்களுக்குத் தேவைப்படும் எந்தச் சான்றிதழ்களையும் அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே பெற்றுக் கொள்ளும் வசதி தமிழகத்திலேயே ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்முதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் எவ்வித அலைச்சலும் இல்லாமல் பொதுமக்கள் தங்கள் வசிப்பிடம் அருகிலேயே எந்த சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ள முடிகிறது.

இதுகுறித்து ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சியை சேர்ந்த மாணவி ஜெ.ஜெயசூர்யா கூறியது:

பிளஸ் 2 படிப்பை அண்மையில் முடித்து கல்லூரியில் சேருவதற்காக வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் முதல் பட்டதாரிக்கான சான்றிதழ் ஆகிய நான்கையும் உடனடியாக பெற்றாக வேண்டிய அவசியம் இருந்தது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இவ் வசதியை கேள்விப்பட்டு என் வீட்டுக்கு அருகில் உள்ள பட்டணம்காத்தான் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அனைத்து சான்றிதழ்களையும் பெற ஒரே நாளில் ஒரே நேரத்தில் விண்ணப்பித்தேன். சான்றிதழ்கள் அனைத்தும் தயாராக இருப்பதாகவும், ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கே நேரில் வந்து பெற்றுக் கொள்ளுமாறும் எனது தந்தையின் செல்போனுக்கு மூன்றே நாள்களில் தகவல் வந்துவிட்டது. உடனடியாக சென்று 4 சான்றிதழ்களையும் சுலபமான முறையில் பெற்றுக் கொண்டேன். ஒரு சான்றிதழுக்கு ரூ.30 மட்டும் கட்டணமாகச் செலுத்தினேன் என ஜெயசூர்யா தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரிடம் இதுகுறித்து கேட்ட போது அவர் கூறியது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகங்களில் வழங்கப்பட்டு வந்த இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் மற்றும் ஆதரவற்ற விதவை சான்றிதழ் உள்ளிட்ட அனைத்தும் ஜூன் மாதம் முதல் தேதி முதல் அனைத்து வட்டங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை வட்டாட்சியர் அலுவலகங்களுக்குச் செல்லாமலேயே தங்களுக்கு அருகிலுள்ள நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், கிராமங்களில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள், புதுவாழ்வுத் திட்ட சேவை மையங்கள் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் வழங்கிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். தேவைப்படும் ஒவ்வொரு சான்றிதழுக்கும் ரூ.30 செலுத்தியும், அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்து பொதுமக்கள் எந்த சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளலாம். வேறு எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. சான்றிதழ் தயாரானவுடனேயே விண்ணப்பித்தவர்களின் செல்போனுக்கு தகவல் வந்துவிடும் என்றார்.

Tags: , ,

Leave a Reply