வசந்த காலம்

 

திருமலர் மீரான்

 

ரமலானுல் முபாரக்

புனித காலம்

இறையருள் குறிஞ்சிகள்

பூத்துக் குலுங்கும்

வசந்த காலம் !

 

விண்ணவர் குயில்கள்

தீன் ராகம் இசைக்க

மண்ணகம் தேடும்

அபூர்வ காலம் !

 

கருணை மனுக்களைக்

கரங்களில் ஏந்தித்

தெளபாவிற்காய்

வரிசையாய் நிற்கும்

பாவாத்மாக்களின்

மனுநீதிக் காலம் !

 

பாதகச் செயல்களைச்

சுமந்து தவிக்கும்

ஐம்பொறிகளின்

ஓய்வின் காலம் !

 

இதய தாமரைகள்,

திருமறைக் கதிர்களால்

மலர்ந்து சிறக்கும்

உதய காலம் !

 

முப்பதாயிரம் இரவினும்

முத்தாய் ஜொலிக்கும்

முதுபெரும் இரவாம்

லைலத்துல் கத்ரின்

வரவின் காலம் !

 

அல்லாஹ் அளித்த

அருமறைப் பேழையைத்

திருநபி முகம்மது

திருவாய்க் கொண்டு

திறந்த காலம் !

 

பரோலில் சென்ற

சைத்தான் இப்லீசு

ஆயுட் கைதியாய்ச்

சிறைப்படும் காலம் !

 

மனமொழி

மெய்களால்

கசடற ஒழுகிய

நோன்பாளிகளைச்

சுவனத்தின்

ரய்யான் வாயில்

விருந்திற்காய்

வரவேற்கும் காலம் !

 

நோன்பு வேள்வியில்

வென்ற வீரர்கள்

இறைவனிடமிருந்து

பரிசினைப் பெறுகின்ற

அதிர்ஷ்டகாலம் !

 

திக்ர் துஆ

தவ்பா சலவாத்

தொழுகை யென்னும்

வைரச் சுடர்களால்

இரவுகளைப் பகலாக்கிப்

பகல்களில் ஒளி பாய்ச்சும்

மூமின்களென்னும்

வித்தைக்காரர்களுக்குப்

பொற்காலம் !

 

திருமலர் நோன்பின்

தீந்தேன் சுவையை

மாந்தித் திளைத்த

மாந்தர்க்கெல்லாம்

ஈதுல் பித்ர்

திருவிழாக் காலம் !

நன்றி :

மதிநா மாத இதழ்

ஆகஸ்ட் 1980

 

( முனைவர் திருமலர் மீரான் பிள்ளை தற்பொழுது அமீரகம் வருகை புரிந்துள்ளார். இவர் திருவனந்தபுரம் அரசு கல்லூரி தமிழ்த்துறைத் தலைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பல்வேறு நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அமீரக தொடர்பு எண் : 02 63 969 11 )

Tags: , ,

Leave a Reply