ராமநாதபுரம்: அதிமுக வேட்பாளர் அ. அன்வர்ராஜா 1.19 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

anwarrajaராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான அ. அன்வர்ராஜா 1,19,324 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் எஸ். முகம்மது ஜலீலை தோற்கடித்தார்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த திருச்சுழி,புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அறந்தாங்கி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளான பரமக்குடி. முதுகுளத்தூர், திருவாடானை, ராமநாதபுரம் ஆகிய 6 தொகுதிகளை உள்ளடக்கியது.

இம்மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அ. அன்வர்ராஜா, திமுக சார்பில் எஸ். முகம்மது ஜலீல், காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் சு. திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்.டி. உமா மகேசுவரி, பா.ஜ.க. சார்பில் து. குப்புராமு, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கே. சிவகுருநாதன், எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் அதன் மாவட்டத் தலைவர் எம்.ஐ. நூர்ஜியாவுதீன் ஆகியோர் உள்பட 23 சுயேச்சைகளையும் சேர்த்து மொத்தம் 31 பேர் போட்டியிட்டனர்

கடந்த ஏப்.24ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 1726 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 3648 வாக்குப்பதிவு இயந்திரங்களும், பதிவான வாக்குகளை சேகரிக்க மொத்தம் 1824 இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.

வாக்காளர்களைப் பொறுத்தவரை மொத்த வாக்காளர்கள் 14,54,678 பேரில் 9,98,672 பேர் வாக்களித்திருந்தனர். வாக்குப்பதிவு சதவிகிதம் 68.65 ஆக பதிவாகியிருந்தது. வாக்குச் சாவடிகள் 1726இல் 444 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவயாக கருதப்பட்டு அவையனைத்திலும் வெப்கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் ராமநாதபுரத்திலிருந்து தேவிபட்டிணம் செல்லும் சாலையில் உள்ள அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரி வளாகத்தில் தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன. வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலாவது தபால் வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டன. பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகளை எண்ணும் பணி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான க. நந்தகுமார் தலைமையில் தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை முதல் முதலாக தொடங்கியதில் இருந்தே அதிமுக வேட்பாளர் அ. அன்வர்ராஜா முன்னிலையில் இருந்தார். முதல் சுற்றில் 7280 வாக்குள் வித்தியாசத்தில் முதலிடத்தில் அதிமுக இருந்தது. பின்னர் தொடர்ச்சியாக ஒவ்வொரு சுற்றிலும் அதிமுகவே துவக்கத்தில் இருந்தே முதலிடத்தில் இருந்தது. இறுதிச் சுற்றின் படி அதிமுக வேட்பாளர் அ. அன்வர்ராஜா திமுக வேட்பாளர் எஸ். முகம்மது ஜலீலை விட 1,19,324 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இறுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:

அன்வர் ராஜா (அதிமுக) 4,05,945

முகம்மது ஜலீல் (திமுக) 2,86,621

குப்புராமு (பாஜக) 1,71,082

உமா மகேஸ்வரி (இ.கம்யூ) 12,312

திருநாவுக்கரசர் (காங்.) 62,160

நோட்டா 6,279

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான க. நந்தகுமார் வெற்றி பெற்ற வேட்பாளர் அ. அன்வர்ராஜாவுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

அன்வர் ராஜா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் வாக்கு எண்ணும் மையத்தின் முன்பாக இருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். இத்தேர்தலில் திமுக, பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும், சுயேச்சை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply