ராமநாதபுரத்தில் தேர்தல் புகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி எண்: ஆட்சியர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் 1800 425 7038 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் எஸ்.நடராஜன் புதன்கிழமை தெரிவித்தார்.

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை பயணிகள், பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை ஆட்சியர் வழங்கினார். அந்த துண்டுப் பிரசுரத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை 1800 425 7038 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதையும் மக்களிடம் அவர் எடுத்துக் கூறி விளக்கினார்.

பின்னர் இண்டேன் சமையல் எரிவாயுக் கிடங்கில் இருந்த சமையல் எரிவாயு உருளைகளில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த ஸ்டிக்கர்களை அவர் ஒட்டினார்.

பின்னர் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் எதிர்புறம் உள்ள அறிஞர் அண்ணா நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களிடம் அவசியம் வாக்களிப்போம் என்ற உறுதிமொழிப்படிவத்தில் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வருவதற்கான விண்ணப்ப படிவங்களையும் ஆட்சியர் வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலை விட இத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்டும் முயற்சியில் தொடர்ந்து பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வுப் பணிகள் செய்யப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

அப்போது ஆட்சியருடன் ராமநாதபுரம் கோட்டாட்சியர் ராம்.பிரதீபன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜசேகரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சேக்முகம்மது, ராமநாதபுரம் வட்டாட்சியர் மாரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags: , , , , ,

Leave a Reply