ரமலான் நோன்பின் மாண்பு !

நோன்பு !

மனசாட்சியால் விதைத்த

மனங்களின் விரதம் !

கட்டவிழ்ந்த விட்ட மனத்தை

கைப்பிடிக்குள் கொண்டுவரும் நோன்பு !

பசியின் சோகத்தை

பணக்காரர்களுக்கும்

ருசியாய் பரிமாறி

கட்டாயமாக்கிய ரமலான் !

உணவை மட்டும் துறப்பதா நோன்பு ?

ஊனாசை உடம்பாசை

பேராசை பொருளாசை

ஒருசேர ஒத்திவைக்கப்பட்ட மாதம் !

புறம் கோள் பொய் சொல்வதை

புறந்தள்ளிய மாதம் ரமலான் !

அறம் அன்பு நேசமதை

பறை சாற்றிய ரமலான் !

ஈட்டிய செல்வமதில்

இரண்டரை சதவீதம்

ஏழைக்கு விதியாக்கி

ஏற்றத்தாழ்வு நீக்கிய ரமலான் !

வணக்கமும், வழிபாடும்

இரவு பகல் பேதமின்றி

வல்லவன் இறைவனிடம்

வார்த்தளிக்கும் மாதம் !

வஞ்சனை, சூது

வில்லங்கம், விவகாரம்

சொல்லிலே கெடுதல்கள்

அல்லவே விலக்கும் மாதம் !

வான்மறை குர் ஆன்

வழங்கிய மாதம் ! – ரமலான்

நாம் ’வாழ்வது சகோதரமாய்’ என

முழங்கிய மாதம் !!!

பஷீர் முகமது

மஸ்கட்

basheerm@yahoo.com

http://basheermohd.blogspot.com

Leave a Reply