ரமலான் உயர்ந்த மாதம் மட்டுமல்ல உயர மாதம் !

 

’தமிழ் மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ்

இளையான்குடி

செல் : 9976372229

 

புண்ணிய மாதமான ரமலானைப் பற்றி திருக்குர்ஆன் அதிகமாகவே… உயர்த்திச் சொல்கிறது அப்படியென்ன சிறப்பு என்கிறீர்களா…?

இதோ … !

எதன் வசமோ இருந்த நம் புலன்கள். ரமலானில் தான் நம் வசமாகிறது. எதையோ நிரப்பி வைத்திருந்த கல்பில் (மனதில்) இறை நினைவுகளே… நிரப்பபடுகின்றன. மற்றவை தேவையற்றவையாய்… வெளியேற்றப்படுகின்றன !

எதையோ நேசித்த வாசித்த கண்கள், ரமலானில்… திருமறையை மாத்திரம் வாசிக்கிறது, நேசிக்கிறது.

புன்னகையை தொலைத்த ஏழை வீதிகளுக்கு ஜக்காத்தும் ஸதக்காவும் கை கோர்த்துக் கொண்டு வசந்தங்களை அவர்களுக்கு கொண்டு போய் சேர்க்கிறது !

இதுவெல்லாம்,

இதுவெல்லாம் ஈர ரமலானின்

வருகையினால் தானே…!

பள்ளி வாசல்களில் தொழுவோர் எண்ணிக்கையின் வரிசைகள் நீளமாகிறது. நெருக்கமாகிறது. வழக்கமான வஃதுகளைவிட தராவீஹ் தொழுகைக்கும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

ஸலாம்கள் ததும்பி வழிய …அங்கே

சகோதரத்துவம் சங்கையாகிறது !

இந்தக் கூட்டத்தோடு கூட்டமாக தாமும் நுழைந்துவிட ஷைத்தான் இடம் பார்க்கிறான். பாவம் அவனால்… முடியவில்லை.

மூமின்களின் மத்தியில் அவன் ‘சடுகுடு; எடுபடவில்லை !

வந்து போகும் மாதங்களுக்கிடையே ரமலான் ஒன்றே எல்லோருக்கும் புன்னகையை தந்து போகிறது !

இபாதத்தில் நம்மை இணைத்துப் போகிறது !

இறையச்ச மின்னலில் நம் ஈமானைச் சரிபார்த்துக் கொள்ள எச்சரித்துவிட்டுப் போகிறது !

எந்தப்பூவும் தராத வாசனையை, நோன்பில், நோன்பாளிகள் நுகர்கிறார்களே… ! அது அழகிய … ரமலானில் தானே …!

நம் அருமை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்பித்த அமல்களையெல்லாம் அவர்கள் கற்பித்தபடியே அமல் செய்ய ரமலான் கற்பித்துவிட்டுப் போகிறது !

இன்னொரு தனிச்சிறப்பு …!

என்ன தெரியுமா?

ரமலானில் வரும் ஒரு லைலத்துல் கத்ர் இரவுதானே… உலகம் கண் விழிக்க … வெளிச்சம் தந்தது !

இதுவெல்லாம்

இதுவெல்லாம் ஈகை ரமலானின்

வருகையினால் … தானே !

அன்றென்ன …?

ஹீராகுகை. ஜிப்ரில் (அலை) அவர்களை வரவேற்க … வானவில்லை அழைத்திருந்தது !

அன்று ஹீரா மலைக்குகை

‘மறை’ முகம் இறங்கிய … துறைமுகமானது !

முகம்மதாய் இருந்த நம் அகமது அவர்கள் நபியெனும் ‘ஸனது’ பெற்றார்கள்.!

ஆம்,

கற்குகை ஹீரா …அன்று தான்

கல்லூரியானது !

அன்று ரமலான் பிறை 17

பத்ருப்போர்.

முஸ்லீம்கள் சந்திக்கும் முதல் போர். அதுவும் நோன்போடு ! அது தான் நோன்பு கடமையாக்கப்பட்ட முதல் ரமலான் நோன்பு, அந்தப் போரில், தந்தை ஓரணி, மகன் எதிரணி ! மாமன் ஓரணி, மருமகன் எதிரணி ! இப்படி இமையும் விழியுமாய் இருந்த உறவுகள், தீனுக்காய்.. வாள் தூக்கி நின்றனர்.

மறுபுறம், அசத்தியம், சத்தியத்தை வீழ்த்தி விடலாம் என்ற இறுமாப்போடு … நின்றது !

முடிந்ததா …? முடியவில்லை.!

முன்னூற்றி பதிமூன்று ஆயிரத்தை முறியடித்த … கண் கொள்ளா அதிசயம் அங்கே நடந்தது ! ஆம். வல்ல அல்லாஹ் (ஜல்) முஸ்லீம்களுக்கே வெற்றியை பரிசாக்கினான்.

அங்கே … பொய்யின் முகவரிகள் பொசுங்கிப்போயின. வாய்மையே வெல்லும் என்ற வாசகம் ஹயாத்தாக்கப்பட்டது.

இதுவெல்லாம்

இதுவெல்லாம் நிகழ்ந்தது

இனிய ரமலான் தானே …!

ஆக ரமலான் வெறும் மாதம் மட்டுமல்ல; சலவை மாதம் சங்கைக்குரிய மாதம் !

ஒரு பத்தியமாதம்.. நம்மைப் பக்குவப்படுத்தும் மாதம் !

மறுமையிலும் .. நாம் உவகைபெற நல்ல அமல்களால் நம்மை உயர்த்தும் மாதம் ! உயர மாதம் !

Tags: 

Leave a Reply