யாதுமாகிய அவள்.

யாதுமாகிய அவள்.. (கவிதை) வித்யாசாகர்!

 

1
சிக்னலில் நிற்கும்
அவசரத்திலும்
மனசு தனித்து நிற்கிறது
அவளிடம்..
—————————————————————-

2
பூவா
தலையா
போட்டுப்பார்கிறேன்
இரண்டிலுமே
அவள் முகம்தான் தெரிகிறது..
—————————————————————-

3
மல்லிகைப்பூ தான்
விற்கிறார்கள் தெருவில்
ஆனால் ஏனோ எனக்கு
அவள் வாசமே வருகிறது..
—————————————————————-

4
மையிட்டால் அழகாமே
இட்டாலும்
இடாவிட்டாலும் எனக்கு
அவள்மட்டுமே
அழகு..
—————————————————————-

5
குச்சி ஆட்டம்
ஆடும் குழந்தைகளைப் போலவே
மனதிற்குள்
அவள்தான் ஆடுகிறாள்..
—————————————————————-

6
பணி பொழிகிறது
மழை சோவெனப் பெய்கிறது
நானென்னமோ
அவள் நினைவில் மட்டுமே
நனைகிறேன்..
—————————————————————-

7
காற்றும் காற்றும்
மோதாமல்
கலந்துக்கொள்வதைப் போலவே
கலந்துவிடுகிறது
மனசு அவளிடம்..
—————————————————————-

8
இட்லி சாப்பிட்டாலும்
உப்புமா சாப்பிட்டாலும்
மனசு
அவளைத்தான்
அசை போடுகிறது..
—————————————————————-

9
பாட்டு கேட்கையில்
ஊரை நினைத்துக் கொள்வதைப்
போலத்தான்
அவளையும் நினைத்துக்கொள்கிறேன்
கொஞ்சநேரத்தில் ஊர் மறந்துவிடுகிறது
அவளை மறக்கவே முடிவதில்லை..
—————————————————————-

10
வாட்சப் திறக்கிறேன்
உள்ளே அவள்
வைபரைப் பார்க்கிறேன்
உள்ளே அவள்
பேஸ்புக் திறக்கிறேன்
அங்கும் அவளே இருக்கிறாள்

கைப்பேசியையே நிறுத்திவிடுகிறேன்
கண்ணுக்குள் வந்துநிற்கிறாள்

கண்களை மூடிக்கொள்கிறேன்
கனவுக்குள் வருகிறாள்

என்னசெய்வது அவளை ?

வேறென்னச் செய்வது
வெறுமனே நினைத்துக்கொள்கிறேன்
உள்ளே அப்படி இனிக்கிறாள்.. அவள்!!
——————————————————————–
வித்யாசாகர்

Tags: , ,

Leave a Reply