மெட்ரோ ரயிலை நவம்பர் மாதம் இயக்க திட்டம்

 

  • கோயம்பேடு மேம்பாலத்திலிருந்து வியாழக்கிழமை சோதனைக்காக இயக்கப்பட்ட மெட்ரோ ரயில்.
    கோயம்பேடு மேம்பாலத்திலிருந்து வியாழக்கிழமை சோதனைக்காக இயக்கப்பட்ட மெட்ரோ ரயில்.

கோயம்பேடு – பரங்கிமலை இடையே நவம்பர் மாதத்திலிருந்து மெட்ரோ ரயிலை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 24 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப் பாதையிலும், 21 கிலோ மீட்டர் உயர்மட்டப் பாதையிலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது.

முதல் கட்டமாக, கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலை வரை 11 கி.மீ. தூரம் மேம்பாலத்தில் இந்தாண்டு இறுதிக்குள் ரயிலை இயக்கத் திட்டமிட்டு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

இந்த வழித்தடத்தில் கோயம்பேடு, கோயம்பேடு பேருந்து நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர், சிட்கோ, ஆலந்தூர், பரங்கிமலை ஆகிய 8 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளம் அமைக்கும் பணி பெரும்பகுதி முடிந்து கட்டுமானப் பணிகளும் நிறைவுபெற்றுள்ளன.

இந்நிலையில், இந்தப் பணியை மேற்கொண்டிருந்த ஒரு தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை பல்வேறு காரணங்களுக்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் ரத்து செய்தது.

இதன் காரணமாக கடந்த 3 மாதங்களாக மெட்ரோ ரயில் நிலையக் கட்டுமானப் பணிகள் நடைபெறாமல் முடக்கப்பட்டன. இதன் காரணமாக மெட்ரோ ரயிலை இந்தாண்டுக்குள் இயக்க முடியாது என கூறப்பட்டது.

ஆனால் இப்போது மூன்று கட்டுமான நிறுவனங்களுக்கு, தேங்கியிருக்கும் மெட்ரோ ரயில் நிலையக் கட்டுமானப் பணியை மேற்கொள்ள நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதனால் திட்டமிட்டபடி பணிகள் முடிந்து கோயம்பேடு – பரங்கிமலை இடையே நவம்பர் மாதம் மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே ஆந்திர மாநிலம் தடாவில் இருந்து மூன்றாவது ரயில் சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனைக்கு வந்தடைந்தது. மேலும் 30 ரயில்கள் தடாவில் இருந்து இந்தாண்டு இறுதிக்குள் சென்னை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: , , , ,

Leave a Reply