மூச்சுத் திணறும் தில்லி

அறிவியல் கதிர்

மூச்சுத் திணறும் தில்லி
பேராசிரியர் கே. ராஜு

தில்லி மாநகரம் சுவாசக் கோளாறால் திணறிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான நகரவாசிகளைப் பொறுத்த வரை வாழ்க்கை ஸ்தம்பித்து நிற்கிறது. காற்றின் தரம் மோசமடைந்ததைத் தொடர்ந்து பள்ளிகள் இயங்கவில்லை.. குழந்தைகள் வெளியில் நடமாடுவதற்கும் விளையாடுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.. நுரையீரல்-இதய நோய் உள்ளவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.. உடல் ஆரோக்கியம் உள்ளவர்களே கூட மூச்சுவிட சிரமப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.. வசதியுள்ளவர்கள் காற்றுவடிகட்டிகளை வாங்கிக் கொள்ளலாம். மற்றவர்கள்..? நகரத்தைவிட்டு வெளியேற வாய்ப்புள்ளவர்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வெளியேறுகிறார்கள்..  (இது 2016 நவம்பர் முதல் வார நிலைமை)
தில்லி அரசும் மத்திய அரசும் கொடுக்கும் தீர்வுகள் தற்காலிகமாக நிலைமையைச் சமாளிக்கும் தன்மையைத் தாண்டுவதில்லை. நீண்ட கால நோக்கில் செய்யப்பட வேண்டிய கட்டமைப்புச் சீர்திருத்தங்களையும் அறிவியல் பூர்வமான சிந்தனை, கொள்கைகள், செயல்பாடுகளையும் ஆட்சியாளர்கள் தவிர்த்துவிடுகின்றனர். இதனால் ஏற்பட்ட விளைவுகளையே இன்று மக்கள் சந்திக்கிறார்கள். ஒற்றைப்படை எண்கள் உள்ள வாகனங்கள் ஒரு நாள், இரட்டைப்படை எண்கள் உள்ள வாகனங்கள் மறுநாள் என்ற முடிவு காற்று மண்டல மாசுகளை ஓரளவு குறைக்க உதவியது உண்மைதான். ஆனால் அதையே நிரந்தரத் தீர்வுக்கு இணையாக பலரும் நம்பத்தொடங்கியதுதான் தவறு. ஹெலிகாப்டர்களிலிருந்து தண்ணீர்  தெளிப்பதும் தற்காலிகத் தீர்வே.
காற்றுமண்டல மாசினைக் கட்டுக்குள் கொணர எடுக்கப்பட வேண்டிய மூன்று நடவடிக்கைகள் இதோ :
முதலாவதாக, காற்றுமண்டல மாசினை சற்றே குறைப்பதால் மட்டும் மக்கள் உடல்நலனுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க இயலாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். போக்குவரத்து, ஆற்றல், கழிவுகள், தில்லியின் எல்லைப்புறத்தில் நடக்கும் சில நிகழ்வுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் பற்றிய ஆழமான புரிதலோடு கொள்கைகள் வகுத்து செயல்படுத்தினல் மட்டுமே காற்று மண்டல மாசுகளைக் கணிசமாகக் குறைக்க முடியும். இதற்கு காற்றின் தர நிர்ணயம், பொருளாதார ஆய்வுகள் தொடர்பாக அதிநவீன அணுகுமுறைகளுக்கு மத்திய மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மாறவேண்டும்.
இரண்டாவதாக, காற்றுமண்டல மாசுகளைக் கண்காணித்து, கட்டுப்படுத்தும் அளவுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களின் திறன் உயர்த்தப்பட வேண்டும். இதற்கு தொழில்நுட்பப் பயிற்சி பெற்ற வல்லுநர்களின் துணை தேவை.
மூன்றாவதாக, புதுமையான தீர்வுகளை நோக்கி தொழில்நுட்ப ஆற்றலைக் கட்டவிழ்த்துவிட வேண்டும்.
உதாரணமாக, தில்லியின் எல்லைப்புற மாநிலங்களான பஞ்சாப், ஹரியானாவில் பயிர்களை எரிப்பது, ஃபரிதாபாத், காசியாபாத்  போன்ற இடங்களில் உருவாகும் ஆலைக்கழிவுகள் இவற்றின் காரணமாக காற்று மாசுபடுவதைக் கணக்கில் எடுத்து தீர்வுகளைக் கண்டுபிடிக்க வேண்டும். பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் நெல் அறுவடை முடிந்தபிறகு வயல்களில் மிஞ்சும் அடித்தாள்களை எரிப்பது (stubble burning) வழக்கம். நவம்பரில் வயல்களை கோதுமை விதைப்புக்கு தயார் செய்திடவே இந்த நடைமுறை கையாளப்படுகிறது. ஆனால் இதன் காரணமாக தில்லியின் காற்று மண்டலம் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர்-நவம்பரில் மாசுபடுகிறது. விவசாயிகள் வேறு ஆக்கபூர்வமான வழிகளில் வைக்கோலைப் பயன்படுத்தாமல், எரிப்பது ஏன் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அரிசிக்கு நல்ல விலை கிடைப்பதாலேயே பாரம்பரியமாக கோதுமையை மட்டுமே விளைவித்துக் கொண்டிருந்த பஞ்சாப்-ஹரியானா விவசாயிகள் நெல்லையும் கோதுமையையும் மாற்றி மாற்றிப் பயிரிடுவது என்ற நடைமுறைக்கு மாறினார்கள். கோதுமை அறுவடை முடிந்ததும் மிஞ்சும் அடித்தாள்கள் விலங்குகளுக்குத் தீவனமாகப் பயன்படுவதால் விவசாயிகள் அவற்றை எரிப்பதில்லை.  நெல் வைக்கோலில் சிலிக்கா அதிகமாக இருப்பதால் விலங்குகள் அதை விரும்புவதில்லை. வேறு வகையிலும் அதைப் பயன்படுத்த முடியாததால் விவசாயிகள் எரித்து அழித்துவிடுகின்றனர். வைக்கோலை உயிரி எரிபொருளாகப் பயன்படுத்தி மின் உற்பத்திக்குப் பயன்படுத்த முடியும். நெல் வைக்கோலைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்தால் அந்த மாநிலங்களில் உள்ள மின்பற்றாக் குறையையும் ஓரளவுக்கு சமாளிக்க முடியும். எனவே இப்படி ஒரு வழிமுறை இருப்பதை விவசாயிகளுக்குப் புரிய வைத்து மின்ஆலைகளை அமைத்துக் கொடுத்தால் வைக்கோலை எரிக்கும் பழக்கத்திலிருந்து அவர்களை மீட்க முடியும். காற்று மண்டலம் மாசுபடுவதிலிருந்து தில்லி மக்களை பெருமளவு காப்பாற்றவும் முடியும்.
ஆட்சியாளர்கள் செவிசாய்ப்பார்களா?
( உதவிய கட்டுரைகள் : 2016 நவம்பர் 8, 10 தேதிகளில் தி ஹிண்டு நாளிதழில் ஹேம் தோலாக்கியா, ஏழுமலை கண்ணன் எழுதிய கட்டுரைகள்)

Tags: ,

Leave a Reply