முத்தலாக் தடை மசோதாவிற்கு எதிராக குவைத்தில் கண்டனப் பொதுக்கூட்டம்

k1முத்தலாக் தடை மசோதாவிற்கு எதிராக குவைத்தில் கண்டனப் பொதுக்கூட்டம்

இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தை பெண்கள் பாதுகாப்பு மசோதா என்னும் பெயரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் தடை சட்டத்திற்கு நாடு முழுவதும் தமிழக இஸ்லாமியர்களின் வழிகாட்டிகளான ஆலிம்களின் பேரமைப்பான தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அழைப்பை ஏற்று இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலட்சக்கணக்கான மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்

இதன் ஒரு பகுதியாக குவைத்தில் முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அங்கீகாரம் பெற்ற குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் பங்கேற்ற கண்டனப் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு ஃகைத்தான் பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு மத்திய அரசு கொண்டு வந்த முத்தலாக் தடை சட்டத்தை அமுல்படுத்த கூடாது என்றும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த தடை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தினர்.

இந்திய இறையாண்மையைக் காக்க, வேற்றுமையில் ஒற்றுமையைப் பேண, அநீதிக்கான எதிர்ப்பை பதிவு செய்ய, தேசம் காப்போம்! நேசம் வளர்ப்போம்!! என்ற முழக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்திற்கு, சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ எஸ்.ஏ.கே. முஹம்மது இப்ராஹீம் நூரானீ காஷிஃபி தலைமை வகித்தார். ஜமாஅத்துல் உலமா குழு துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம். முஹம்மது முஸ்தஃபா கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ தொகுப்புரை வழங்கினார்.

கூட்டத்தில், இந்திய தேசிய லீக் கட்சி குவைத் மண்டலத் தலைவர் நூ. முஜீபுர் ரஹ்மான், உவைஸி மக்கள் நலப் பேரவை குவைத் மண்டலத் தலைவர் முகவை அப்பாஸ், நாம் தமிழர் கட்சி மீரான் கனி, விடுதலை சிறுத்தைகள் கட்சி குவைத் மண்டல முதன்மை அமைப்புச் செயலாளர் க.மீ. அன்பரசன், சமூக ஆர்வலர் வல்லம் முஹம்மது அப்பாஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ நிறையுரையாற்றினார். சங்கத்தின் இணைப் பொருளாளர் எச். முஹம்மது நாஸர் நன்றி கூறினார்.

கூட்டத்தில் குவைத் வாழ் அனைத்து தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், பெண்கள் உட்பட 350க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘முத்தலாக்’ தடை சட்ட மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தினர்.

இந்தக் கூட்டத்தில், “மத்திய அரசு கொண்டுவந்துள்ள முத்தலாக் தடை சட்ட மசோதாவை வன்மையாக கண்டிப்பது, இஸ்லாமியர்களிடம் கலந்து ஆலோசனை செய்யவேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மீறி இந்த சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். எனவே, மத்திய அரசு முத்தலாக் தடை சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும், பாராளுமன்ற மரபுகளுக்கு எதிராக அவசர கதியில் கொண்டுவந்துள்ள முத்தலாக் தடை மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க கூடாது, மத்திய அரசு இந்திய நாட்டின் இறையாண்மையை கேள்விகுறியாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு எதிர்க்க வேண்டும், அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளின்படி ஒவ்வொரு சமூகத்திற்கும் திருமணம், விவாகரத்து, சொத்துரிமை போன்றவைக்கு தனியான சட்டங்கள் உண்டு. இவற்றில் தலையிடுவதன் மூலம் மத்திய அரசு தன்னுடைய ஒற்றை கலாசார திட்டத்தை திணிக்க முயற்சிப்பதை கண்டிப்பது” உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஜும்ஆ சிறப்புரையாக மத்திய அரசு கொண்டு வருகின்ற சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைளுக்கு சமுதாயம் எப்படி எதிர்வினையாற்றுவது என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏறக்குறைய 850க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

k2

Tags: , ,

Leave a Reply