முதுகுளத்தூர் அருகே 3 மகள்களை எரித்துக்கொன்று தாயும் தற்கொலை

முதுகுளத்தூர் அருகே 3 மகள்களை எரித்துக்கொன்று தாயும் தற்கொலை

ராமநாதபுரம், செப். 22–

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள காரைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 43). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ராமர் (38). இவர்களுக்கு செல்வி (18), பிரியா (16), பானு (10) ஆகிய 3 மகள்கள் இருந்தனர். செல்வி 12–ம் வகுப்பும், பிரியா 10–ம் வகுப்பும், பானு 5–ம் வகுப்பும் படித்து வந்தனர்.

குடிப்பழக்கம் உடைய முருகேசன் தினமும் குடித்து விட்டு வந்து ராமரிடம் தகராறு செய்வாராம். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராமர் தனது மகள்களுடன் தீக்குளித்து தற்கொலை செய்ய தீர்மானித்தார்.

அதன்படி தனது 3 மகள்களுடன் அருகில் உள்ள கிழவனேரி ஊரணி கரைக்குச் சென்றுள்ளார். அங்கு வைத்து தன் மீதும், தனது 3 மகள்கள் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் பிரியாவும், பானுவும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாயினர். ராமரும், பிரியாவும் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

அந்த வழியாக சென்றவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு உடனடியாக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் வழியிலேயே செல்வியும் பரிதாபமாக இறந்தார்.

மகள்களை எரித்துக் கொன்ற தாயார் ராமர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரும் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து இளஞ்செம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags: , , , ,

Leave a Reply