முகவரி தேடும் மார்க்கப் பயணம்

 

திருமலர் மீரான்

 

மண்ணுலகின் மார்பிடம்

மக்கா நோக்கி

உலக மக்களின்

உன்னதப் பயணம் !

ஹஜ் யாத்திரை !!

ஹரம் ஷரீபில்

தக்வா நெஞ்சங்கள்

வரம் தேடுகின்ற

வெற்றிப் பயணம் ..!

 

அரபாத் அன்னையின்

அருள் பால் அருந்த

அனைத்து நாட்டு

அருமாந்தப் பிள்ளைகள்

அணிவகுக்கின்றன !

 

மக்கா மதீனா

மணல் தொட்டில்களில்

அயல்நாட்டு சிசுக்கள்

ஆன்மீக மயக்கத்தில்

அயர்ந்து உறங்கும் !

 

வயதான முதியோரும்

வாலிபர் இளைஞர்களும்

வயதையே இழந்து

இன்று பிறந்த

இளம் மழலைகளாக

மர்வா ஸபா

மலைகளுக்கிடையே

தொங்கோட்டம் ஓடி

தம் கோட்டம் தீர்ப்பர் !

 

அஞ்சு வண்ணப் புறாக்கள்

இஹ்ராம் அணிந்து

ஒரே நிறமாகி

ஏகன் எண்ணத்தில்

ஹரம் ஷரீபில்

சரணடைகின்றன !

 

கோடிக்கணக்கான

கந்தல் உள்ளங்கள்

அலசப்பட்டும்

அசுத்தமடையாத

அற்புத ஊற்று ஜம்ஜம் !

அகில உலகிற்கும்

ஏக்கம் தீர்த்திட

ஏற்றுமது ஆகிறது !

 

பல்வேறு நாடுகளின்

பலநிற இன மொழியினர்

கஅபாவை வலம் வரும்

விந்தைச் சுழற்சியில்

வெள்ளையாகின்றனர் !

 

உலக மக்கள்

உழலும் தங்கள்

ஏக்க தாபங்களை

ஜித்தா துறைமுகத்தில்

இறக்கி வைக்கின்றனர் !

இறையருள் பொருளை

அரபாத்திலிருந்து

அள்ளிச் செல்கின்றனர் !

 

ஹஜ் நாட்களில்

ஹரம் ஷரீபு

சொக்க வைக்கும்

சொர்க்கமாவதால்

இப்புனிதப் பயணம்

சொர்க்க யாத்திரைக்கு

ஒத்திகையாகிறது !

 

முகவரியின்றி

முக மதியிழந்து

விசனத்தோடு

வந்த ஜனங்கள்

முக மதியத்தோடு

விசாலமான ஒரு

விலாசம் தேடும்

மார்க்கப் பயணம்

மாபெரும் ஹஜ் பயணம் !

 

கவிஞருடன் பேச : 94950 11317

 

நன்றி :

சமரசம்

1-15 நவம்பர் 2010

Tags: , , ,

Leave a Reply