மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்- இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்

eahmedதிருச்சி: மதவாத சக்திகளுடன் ஒருபோதும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி கூட்டணி அமைக்காது.

தமிழகத்தில் திமுகவுடன் மட்டுமே கூட்டணி வைப்போம் என்று அக்கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான இ. அகமது திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் மற்றும் அரசியல் விழிப்புணர்வு மாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் டிசம்பர் 28ம் தேதி நடைபெற்றது.

 

இதையொட்டி முஸ்லிம் லீக் மாணவரணி (MSF), இளைஞர் அணி (MYL) , தொழிலாளர் அணியினர் (STU) பல்லாயிரக்கணக்கில் பங்கேற்ற “இளம் பிறை பேரணி’ வெஸ்ட்ரி பள்ளி மைதானத்திலிருந்து மாநாடு நடந்த உழவர் சந்தை மைதானம் வரை நடந்தது.

மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 மஹல்லா ஜமா அத்தினர் கெளரவித்து பாராட்டப்பட்டனர்.

மேலும் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேசிய பொதுச் செயலாளரும் முன்னாள் எம்.பியுமான காஜா மொஹைதீன் உள்ளிட்ட தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் அகமது பேசுகையில், மதவாத, இனவாத சக்திகளுடன் நாங்கள் ஒருபோதும் கை குலுக்க மாட்டோம். மதச்சார்பற்ற சக்திகளுடன் மட்டுமே கூட்டணி வைப்போம்.

மறைந்த தலைவர் காயிதே மில்லத்தின் நோக்கங்களை சிறப்புற நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் நாங்கள் செயல்படுகிறோம். இந்திய மண்ணில் எங்களது கட்சி ஆழ வேரூண்றியுள்ள ஒரு அமைப்பாகும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவுடன் எங்களது கூட்டணி தொடர்கிறது. தொடரும் என்றார் அகமது.

 

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 21 தீர்மானங்களில் ஒன்றில், திமுக தலைமையில் தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி கூறப்பட்டிருந்தது.

 

மேலும், அதிமுக அரசின் மக்கள் விரோத, சர்வாதிகார மனப்பான்மைக்கு தமிழகத்தில் உள்ளஅனைத்துக் கட்சிகளும் முடிவு கட்ட வேண்டும். இதற்கு வாக்குகள் சிதறி விடாமல் காக்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

 

முழுமையான மது விலக்கை அமல்படுத்தக் கோரி ஒரு தீர்மானமும், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி இன்னொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

 

மேலும், முஸ்லீம்களுக்கு தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முஸ்லீம் மதத்திற்கு மாறியவர்களையும் பிற்பட்ட வகுப்பினராக அங்கீகரிக்கக் கோரி இன்னொரு தீர்மானம் போடப்பட்டது.

தீர்மானங்கள் விவரம்…

 

நாடாளுமன்றத் தேர்தல் 2014ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பன்முகத் தன்மை கொண்ட இந்திய திருநாட்டில் மதம், மொழி, இனம் மற்றும் கலாச்சார வழியிலான சிறுபான்மை மக்களின் தனித்தன்மைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கூடிய, மாநில உரிமைகளுக்கு மதிப்பும், பொருளாதார துறையில் தன்னிறைவு பெறும் திட்டமிடலும் கொண்ட இந்திய அரசியல் சாசன உரிமைகளை மதித்து காப்பாற்றுகின்ற சமய சார்பற்ற சம தர்ம சமூக நீதி கொள்கைகளை பேணிக்காக்கின்ற ஜனநாயக சக்திகள் வெற்றி பெற்று நாட்டை ஆள வேண்டும் என்பதே தேசிய ஒருமைப்பாட்டில் அக்கறை கொண்ட மக்களின் விருப்பமாகும். இந்த விருப்பத்தை பூர்த்தி செய்ய இந்த மாநாடு உறுதியேற்கிறது.

 

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை அமையும் கூட்டணி 2004 தேர்தலை பிரதிபலிக்கும் வகையில் திமுக தலைமையில் வலுவுள்ளதாக அமைய வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் விருப்பத்தை இந்த மாநாடு வரவேற்கிறது.

 

விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மின்தடை அதனால் தொழில்கள் மூடப்படும் சூழ்நிலை இவைகளுக்கிடையே எதிர்க்கட்சி குரல் வளையையே நசுக்கும் சர்வாதிகார போக்கு என்ற அதிமுக அரசின் ஜனநாயக மக்கள் விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வாக்குகள் சிதறி விடும் சூழலை ஏற்படுத்தி விடாத நிலைப்பாட்டை உருவாக்கிடுமாறு தமிழக கட்சிகளை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

 

மதவெறி பாசிஸ சக்திகளை வீழ்த்துவோம் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு என்ன செய்வோம் என்பதை சொல்வதே அரசியல் கட்சிகளின் மரபு. இதற்கு மாறாக பிரதமர் பதவிக்கு மோடி என்ற முழக்கத்தை பாஜக முன்வைத்துள்ளது. இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட பாஜக தனது பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்துள்ளது. மோடி முதல்வராக உள்ள குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினருக்கான எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. மத்திய அரசு வழங்குகின்ற நிதிகளைப் பெற்று சிறுபான்மையினருக்குக் கிடைக்கச் செய்யாமல் அதனைத் திருப்பி அனுப்பும் செயல்களையும் மோடி செய்து வருகிறார்.

 

சிறுபான்மையினருக்கான பாரதப் பிரதமரின் 15 அம்சத் திட்டத்திற்கு எதிராக இரு தனி நபர்கள் தொடுத்த வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம், அரசியல் சட்டப்படி இந்தத் திட்டம் நியாயமானதே என்று சொல்லி தள்ளுபடி செய்து விட்டது. இந்த நியாயமான தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு குஜராத் மாநில அரசே மேல் முறையீடு செய்திருக்கிறது. இதன் மூலம் மோடியும், அவரது அரசும் சிறுபான்மை விரோத அரசு என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

 

கிராமம் முன்னேறினால் நாடு முன்னேறும் என்ற தேசப்பிதா மகாத்மா காந்தியின் கூற்றுப்படி கிராம ராஜ்ஜியத்தை மக்கள் கனவு கண்டு கொண்டிருக்கும்போது மோடி அவர்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல கலவரம் பாதித்த உ.பி. க்கு மோடி சென்று ராம ராஜ்ஜியம் அமைப்போம் என்று உணர்ச்சியைத் தூண்டி விடுகிறார். 2002ம் ஆண்டு குஜராத்தின் அலங்கோல மன நிலை அவரை விட்டு மாறவில்லை என்பதையே இது வெளிப்படுத்திக் காட்டுகிறது.

 

எனவே மதவெறி பாசிச சக்திகளை வீழ்த்த இந்த மாநாடு உறுதி ஏற்கிரது. ஆகவே ஜனநாயக சமய சார்பற்ற சமூக நீதியை நிலை நிறுத்தும் திராவிட நெறியின் பாரம்பரியத்தை தொடருமாறு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

 

பூரண மது விலக்கை அமல்படுத்துக அனைத்துத் தீமைகளுக்கும் காரணமான மது ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் இக்காலகட்டத்தில், மதுவை ஒழிப்பதற்குப் பதில் புதிது புதிதாக மதுக் கடைகளைத் திறப்பதும், அக்கடைகளை முக்கிய இடங்களில் அனுமதிப்பதும், இரவு நேரங்களில் கூட ஹோட்டல்களில் பார் திறக்க அனுமதித்திரு்பதும், கட்டுப்பாடற்ற முறையில் மது விற்பனை செய்யப்படுவதும், பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயித்து மது விற்பனையை பெருக்குவதுமான காரியங்களை அரசுத் தரப்பில் தொடர்ந்து செய்து வருவது கண்டிக்கத்தக்கது. இதனால் மாணவர்களும், பெண்களும் கூட மதுவுக்கு அடிமையாவது அதிர்ச்சியளிக்கிறது. எனவே பூரண மது விலக்கை அமல்படுத்தி மக்களைக் காப்பாற்றுமாறு மத்திய, மாநில அரசுகளை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது. அரசியல் சாசனத்தின் 44வது பிரிவை நீக்குக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25ல் மத வழிபாடு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. தான் விரும்பிய மதத்தை ஏற்கவோ, பரப்பவோ இந்திய குடிமக்களுக்கு உரிமை உண்டு. அந்த அடிப்படையில்தான் தனிீயார் சட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன. ஆனால் இந்த சட்டப் பிரிவுக்கு நேர் எதிராக பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர முயற்சிக்கச் சொல்லும் 44வது பிரிவு அமைந்துள்ளது.

இதைக் காரணமாக வைத்தே முஸ்லீம் தனியார் சட்டத்துக்கு எதிரான பரப்புரைகள் செய்யப்படுகின்றன. பொது சிவில் சட்டம் கொண்டு வந்தே தீருவோம் என்று குரல்களும் ஒலிக்கின்றன. அரசியல் சாசன அடிப்படை உரிமைகளுக்கும், மத சுதந்திரத்திற்கும், சமய சார்பற்ற ஜனநாயகம் என்ற தத்துவத்திற்கும் இந்த 44வது பிரிவு எதிராக உள்ளதால் இதை அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து முற்றிலுமாக நீக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துவதோடு, இதற்கு உறுதுணையாக நிற்குமாறு மதச்சா்பற்ற ஜனநாயக சக்திகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

 

மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துக கல்வி வேலைவாய்ப்பில் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்ஸிகள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. சிறுபான்மையில் பெரும்பான்மையாக உள்ள முஸ்லீம்களுக்கு எந்த நன்மையையும் இந்த இட ஒதுக்கீடு ஏற்படுத்தி விடாது என்ற நிலையில் கூட நீதிமன்றங்கள் அதைத் தடுத்து நிறுத்தி விட்டன. ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால், அமைக்கப்பட்டு 2007 மே 22ல் பிரதமரிடம் அளிக்கபப்ட்ட நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணைய பரிந்துரை இன்னமும் அமல்படுத்தப்படாமல் உள்ளது. இந்த ஆணைய பரிந்துரைகளில் மிக முக்கியமானது கல்வி, வேலைவாய்ப்புகளில் சிறுபான்மையினருக்கு 15 சதவீதமும், அதில் 10 சதவீதம் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதே. எனவே இன்னும் காலம் தாழ்த்தாமல் மிஸ்ரா ஆணைய பரிந்துரையை ஏற்று நீதிமன்றங்கள் தடை ஏற்படுத்தாதவாறு சட்ட வழிமுறைகளுடன் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்குமாறு மத்திய அரசை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

 

 

இதுதவிர தென் மாநில நதி நீர் இணைப்பை வலியுறுத்தியும், மூடப்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் மேலும் இரண்டு தீர்மானங்களும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/dmk-is-our-ally-tamil-nadu-iuml-190492.html

Tags: , , ,

Leave a Reply