மிதக்கும் ஆட்டோ – புதியதொரு புரட்சிப் போக்குவரத்து

அறிவியல் அதிசயங்கள்

K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.phil.

மிதக்கும் ஆட்டோ – புதியதொரு புரட்சிப் போக்குவரத்து

 

“பிரசவத்துக்கு இலவசம்” இது அநேக ஆட்டோக்களில் எழுதப் பட்டிருக்கும் வாசகம். ஆட்டோவில் ஏறிய கர்ப்பிணி தாய்மார்கள் அதன் அசுர குலுக்கலில் ஆட்டோவிலேயே பிள்ளையைப் பெற்றுக் கொண்ட சம்பவங்கள் ஏராளம். அதனால் இனி ‘பிரசவத்துக்கு இலவசம்’ என்பதைக் கூட ‘பிரசவமே இலவசம்’ என மாற்றி எழுதுதல் பொருத்தமாக இருக்கும்.

மேலும், பல்கிப் பெருகிப் போன இரு சக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களால் சாலை விபத்துக்களும், போக்குவரத்து நெரிசல்களும் அதிகரித்து விட்டன. நகரங்களில் வேலை பார்ப்போர் பத்து மணி அலுவலகத்திற்கு எட்டு மணிக்கே புறப்பட்டால் தான் போய் சேர முடியும். அதுவும் மூக்கையும், வாயையும் மூடிக் கொண்டுதான் பயணிக்க முடியும். அவ்வளவு நச்சுப்புகை காற்றில் கலக்கிறது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது வந்துள்ள புதிய கண்டுபிடிப்பே “மிதக்கும் ஆட்டோ” கலிபோர்னியாவின் ‘யுனிமாடல் சிஸ்டம்ஸ்” எனும் நிறுவனம் “ஸ்கைபாட்” எனப்படும் மிதக்கும் ஆட்டோக்களைக் கண்டுபிடித்துள்ளது. இனி வருங்காலத்தில் மக்களால் அதிகம் விரும்பப்படும் போக்குவரத்தாக இது அமையும் என இந்நிறுவனம் நம்பிக்கையுடன் கூறுகிறது.

தரையிலிருந்து சில மீட்டர் உயரத்தில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் காந்தங்களால் செயல்படும் தண்டவாளங்கள் நகருக்குள் வளைந்து நெளிந்து செல்லும் இத்தண்டவாளங்களில் வரிசையாக ஆட்டோக்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. பயணிகள் ஏறுவதற்கு வசதியாக ஆங்காங்கே படிக்கட்டுகள் அமைக்கப் பட்டிருக்கின்றன.

இதில் பயணம் செய்ய விரும்பும் நபர், படிக்கட்டில் ஏறி மிதக்கும் ஆட்டோவுக்குள் அமர வேண்டும். பின்னர் செல்ல வேண்டிய இடத்தை கம்ப்யூட்டரில் டைப் செய்தால் போதும். மிதக்கும் ஆட்டோ அலுங்காமல் குலுங்காமல் சொகுசாகச் செல்ல வேண்டிய இடத்திற்கு அவரைப் பாதுகாப்பாக கொண்டு போய் சேர்த்து விடும். இந்த ஆட்டோவின் வேகம் மணிக்கு 150 மீட்டர். அதிகபட்சமாக மூன்று நபர்கள் இதில் பயணிக்க முடியும்.

மிதக்கும் ஆட்டோக்கள் அனைத்தும் கணிப்பொறியின் கட்டுப்பாட்டில் இயங்குவதால் டிராபிக் ஜாம் எனும் தொல்லை இல்லவே இல்லை. மேலும் சாலையிலிருந்து சில அடி உயரம் மேலே தண்டவாளத்தில் தொங்கிச் செல்வதால் சிக்னலுக்காக முடங்கிக் கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. காந்தங்களால் இவை இயக்கப்படுவதால் பெட்ரோல், டீசல் தேவையில்லை. அதனால் நச்சுப் புகையை வெளியிட்டுச் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதும் இல்லை.

யுனிமாடல் சிஸ்டம்ஸின் இப்புதிய மிதக்கும் ஆட்டோக்களால் இரு சக்கர மற்றும் மகிழ்வூர்திகளின் போக்குவரத்து குறைந்து சாலைகள் நெரிசலின்றி காணப்படும். விமான நிலையங்களிலும் பரபரப்பான நகரங்களிலும் இவற்றை அறிமுகம் செய்ய இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

“பழையன கழிந்து புதியன புகும்” வரிசையில் பைக், ஆட்டோக்களுக்கு பை, பை சொல்லும் காலம் வந்து விட்டது. அடுத்த அதிசயத்தில் சந்திப்போம்.

 

நன்றி :

முகவை முரசு

மார்ச் 11-17, 2011

Tags: , ,

Leave a Reply