மாவட்ட அரசு நிர்வாகத்தின் குறட்டையால்….கல்லூரி மாணவனை இழந்து விட்டோம்!

மாவட்ட அரசு நிர்வாகத்தின் குறட்டையால்….கல்லூரி மாணவனை இழந்து விட்டோம்!
முன்னாள் கவுன்சிலர் கீழை ஜஹாங்கீர் அரூஸி குற்றச்சாட்டு.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மக்களின் உயிரை பாதுகாக்கும் சூழல் இன்றி இருப்பது பெரும் அதிர்ச்சிக்குரியதாகும்.
கீழக்கரை தாலுகாவின் அரசு மருத்துவமனைக்கு இடம் கொடுத்ததும்,கட்டிடம் கட்டி கொடுத்ததும் கீழக்கரை வாழ் வள்ளல் பெருமக்களாகும்.
ஏழை எளிய மக்கள் பயனடைவார்கள் என நினைத்த அந்த கொடையாளர்கள் தற்போது மாவட்ட நிர்வாகத்தின் அழிச்சாட்டியம் கண்டு வேதனைப்படுகின்றனர்.
கடந்த 15ந்தேதி இதம்பாடலை சேர்ந்த பொறியியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவர் முகம்மது இர்ஃபான்(வயது)பாம்பு கடித்து உடனடியாக ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் அங்கே இரவு நேர மருத்துவர் இல்லை என்று திருப்பி விடப்பட்டுள்ளார்.
சிறிதும் தாமதிக்காமல் 9 கிலோ மீட்டர் அருகில் உள்ள கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் கீழக்கரையிலும் இரவு நேர மருத்துவர் இல்லையென்று இராமநாதபுரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இரவு 10.40 மணிக்கு பாம்பு கடித்து 10.50க்கு ஏர்வாடி கொண்டு சென்று 11.05க்கு கீழக்கரை கொண்டு சென்று பின்னர் 12.00மணிக்கு இராமநாதபுரம் கொண்டு செல்லப்பட்டு அதற்குள் பாம்பின் விஷம் உடல் முழுவதும் பரவி அதிகாலை 3.30மணிக்கு மாணவர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியாகும்.
மக்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுப்பதும்,அதனை சரிவர கண்காணிப்பதும் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகத்தின் கடமையாகும்.இதம்பாடலில் இருந்து திருப்புல்லாணி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட கிராமங்களை சூழ்ந்திருக்கும் கீழக்கரை தாலுகாவின் அரசு மருத்துவமனையிலேயே இரவு நேர மருத்துவர் இல்லையென்றால்…அந்த பகுதி மக்களின் உயிருக்கு என்ன உத்தரவாதம்?
பலமுறை கீழக்கரையை சேர்ந்த பல்வேறு சமூக அமைப்புகளும்,எஸ்டிபிஐ,திமுக,காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளும் இந்த அவல நிலையை மாவட்ட நிர்வாகத்தின் பார்வைக்கு கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கையையும் எடுக்காததால்,இன்று ஒரு கல்லூரி மாணவனை இழந்து விட்டோம்.
மாவட்ட அரசு நிர்வாகத்தின் குறட்டையால்…உயிரிழந்த மாணவனின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கிட மாநில அரசு நடவடிக்கை எடுப்பதோடு,மாணவனின் உயிரிழப்புக்கு காரணமான அக்கறையின்றி பணி புரிந்த மாவட்ட அரசு சுகாதார துறை அதிகாரிகளின் மீது துறை ரீதியிலான கடும் நடவடிக்கையும் எடுத்திட வேண்டுகிறேன்.
இவ்வாறு முன்னாள் கவுன்சிலர் கீழை ஜஹாங்கீர் அரூஸி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Tags: 

Leave a Reply