மாற்றுத் திறனாளிகளுக்கோர் வரப்பிரசாதம்

K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.Phil.,

 

நம் நாட்டின் அரசியல் விழாக்களில் மாற்றுத் திறனாளிக்கு இலவச மூன்று சக்கர சைக்கிள் வண்டி வழங்கப்படுவதைப் பார்த்திருக்கிறோம். கைகளால் பெடலைச் சுழற்றி அந்த சைக்கிள் வண்டியை இயக்க முடியும். சரி ! கைகளும் செயலிழந்தவர்கள் என்ன செய்ய முடியும் ? மற்றவரின் உதவியோடு சக்கர நாற்காலியில் அமர்ந்து செல்ல முடியும். அந்தளவுக்கு வசதி இல்லாதவர் வீட்டில் படுத்த படுக்கையாக உடலும் மனமும் ஊனப்பட்டு, படுக்கைப் புண்களோடு போராடி வாழ்வைக் கழிக்க வேண்டிய அவல நிலையைப் பார்க்கிறோம்.

கை கால் செயலிழந்து படுத்த படுக்கையாக வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாக மலர்ந்துள்ளது ஒரு புதிய கண்டுபிடிப்பு. போக வேண்டிய இடத்தை மனதால் நினைத்தால் போதும். அந்த இடத்திற்கு தானாகவே இயங்கி சென்று விடும். சக்கர நாற்காலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது… “மைண்ட் கண்ட்ரோல்ட் வீல்சேர்” என்றழைக்கப்படும் மனதால் கட்டுப்படுத்தப்படும் சக்கர நாற்காலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

செல்லுமிடத்தை மனதால் நினைத்தவுடனே கொண்டு சென்றிடும் இம்மாயாஜால நாற்காலியை ஸ்பானிஷ் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த சக்கர நாற்காலியில் சுற்றுப்புறத்தை 3 டி படமாக பதிவு செய்யும் லேசர் ஸ்கேனர் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட காட்சி, நாற்காலியில் அமர்ந்திருப்பவரின் முன்புறம் பொருத்தப்பட்டுள்ள சிறிய திரையில் காட்டப்படும். நாற்காலியில் அமர்ந்திருக்கும் மாற்றுத் திறனாளி தான் செல்ல வேண்டிய இடத்தை அத்திரையில் உற்று நோக்கினால் போதும். நாற்காலி தானாக இயங்கி அவர் பார்த்த இடத்திற்கு சென்று விடும்.

மாற்றுத் திறனாளியின் தலையில் கருவயோடு இணைந்த “ஸ்கல்கேப்” எனும் தொப்பி பொருத்தப்பட்டிருக்கும் அதன் மூலமாக அவர் செல்ல நினைக்கும் இடத்தை கருவி அறிந்து கொள்ள முடியும்.

இக்கருவியைத் தயாரித்த ஸ்பெயின் நாட்டின் சரகோஸா பல்கலைக் கழகத்தின் புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர் சேவியர் மின்குவெஸ் மாற்றுத் திறனாளிகள் இந்நாற்காலியைப் பயன்படுத்த பழகுவதற்கு 45 நிமிடங்கள் போதுமானது என்று கூறுகிறார்.

நினைத்த மாத்திரத்தில் நகர்ந்து செல்லும் இம்மாயாஜால நாற்காலி விற்பனைக்கு கொண்டு வர இன்னும் சில மாதம் ஆகலாம் என்றும் அவர் கூறுகிறார்.

கையில் கம்பு ஊன்றியும், சக்கர வண்டியுடன் போராடிக் கொண்டிருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த புதிய கண்டுபிடிப்பு நிச்சயமாக ஒரு வரப்பிரசாதம் தான். அவர்கள் வாழ்வில் ஒரு புதிய மறுமலர்ச்சியாக இக்கண்டுபிடிப்பு அமையப்போவது நிச்சயம்.

 

நன்றி : முகவை முரசு   மார்ச் 25 – 31, 2011

Tags: 

Leave a Reply