மழையின் பிழையா ? மனிதனின் பிழையா ?

மழையின் பிழையா ? மனிதனின் பிழையா ?
 
 
மழை பெறுவதற்காக  மனிதன் 
வளர்த்த மரங்களை  மழையே சாய்த்ததுவே .
மழை  பெறத்தான் வளர்க்கிறோம் 
என்பதறியா மழையை என்னென்பேன்.
 
வள்ளல் போல் கொட்டிய வானத்து மழையால் 
வெள்ளம் பெருகியோடி  வீடுகளில் புகுந்தது 
பள்ளம்  பெருகி சாலை பல்லிளித்தது 
உள்ளம் உறுத்தாது , ஊழல்தனைச் செய்து    
கள்ளர் அமைத்த சாலை காணாமல் போனது . 
வீடு வாங்கியவர்கள்  கடனில் மூழ்கினர் 
வீடுகள்  எல்லாம் வெள்ளத்தில் மூழ்கின . 
 
மணற்  கொள்ளைக்  கயவர்களால் ஆறுகளில் நீர் நில்லாது ,
தூர் வாராத் துரோகிகளால்  நீர்நிலைகள் நிரம்பாது 
ஆக்கிரமிக்கும் அயோக்கியர்களால் நீர் வழிகள் அடைபட்டு 
அரசியல் செய்வோரின் சுயநலத்தாலும் 
அரசு இயந்திரங்களின் மெத்தனத்தாலும் 
மதியற்றுத் துணைபோகும் மக்கள் கூட்டத்தாலும் 
அளவற்றுப் பெய்த மழை நீர் அத்தனையும் 
களவுற்றுப் போனதுபோல் கடலில் கலந்ததுவே. 
 
திட்டங்களுக்குக் குறைவில்லை – செயல்படுத்த 
தீட்டுபவர்களுக்கு மனமில்லை , 
சட்டங்களுக்கும் குறைவில்லை –  நீதி மன்ற
சாடல்களுக்கும் குறைவில்லை 
சட்டை செய்யாது இவற்றையெல்லாம் -தம் 
சட்டைப்பை நிரப்பவே சதி செய்வார் .  
கூவத்தை சீரமைக்க  கோடிகளைக் கொட்டுவார்.
அவற்றில் சில கோடிகளை  அவரவர் சுருட்டுவார் 
பாவத்தில் சேர்த்த பணம் பயனற்றுப் போகுமென்ற 
சாபத்தை அறியாத  சாக்கடை  மனத்தினர் .
 
தண்ணீருக்கிங்கே பஞ்சமில்லை – அதை 
சேமித்துவைக்க வழி செய்ய நெஞ்சமில்லை .
அண்டை மாநிலங்கள்  நீர்ப் பங்கு தர வேண்டி 
சண்டை போட்டு  சாகசங்கள் செய்திடுவார் . 
 
வெள்ளம் வந்துவிட்டால் , வெள்ள  நிவாரணம் 
பஞ்சம் வந்து விட்டால்,  பஞ்ச நிவாரணம் 
பங்கு போட்டுக்கொள்வார் இந்த நிவாரணம்
பாதிக்கப் பட்டவர்  நிலையோ நிர்வாணம் .
 
மக்கள் நலத்தை நினையாத மாக்கள் – இந்த 
மாக்கள்  சுயநலத்தை அறியாத மக்(கு)கள் 
என்று ஒழியும் இந்தப் பண நாயகம் 
என்று தழைக்கும் உண்மை ஜன நாயகம் .
 
 
பேருந்து செல்லும் சாலைகளில் 
நீருந்து  செல்லும் நிலை மாறுமா ?
வேரூன்றி விட்ட  ஊழல்  
வேரோடு சாயுமா ?
விளைச்சல் நிலங்களெல்லாம் 
வீடுகளாய் மாறுவதால் 
விளையும் தீமையும் 
விளைவும் விளங்குமா . 
 
எலும்புத்துண்டுக்கு ஆசைப்பட்டால்  
ஏமாற்றப் படுவோம் என்றும் 
கரும்பை அவர் சுவைத்து 
சக்கையைத் தான் நமக்களிப்பார் என்றும் 
உணரும் நாளே  நமக்கு 
கொணரும் நன்மைகளை .
 
இயற்கையின் சீற்றத்தைத்  தடுக்க
இயலாதென்பது  யதார்த்தம்- அதன் 
தாக்கத்தைக் குறைக்க நம்மால் முடியுமென்று 
ஆக்கபூர்வமாய் சிந்திக்கும் ஆட்சியாளர்களே தேவை. 
அரசுக்கும் உணர்த்துவோம் – ஓட்டால் .
அரசியலார்க்கும் உணர்த்துவோம். 
சிந்திப்போம் ! செயல்படுவோம் ! பலனடைவோம். 
 
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் .
.    
Tags: ,

Leave a Reply