மறக்கப்பட வேண்டியவர்களா வலிமார்களும்,ஷுஹதாக்களும்?

மறக்கப்பட வேண்டியவர்களா வலிமார்களும்,ஷுஹதாக்களும்?
                                      (கீழை ஜஹாங்கீர் அரூஸி)
மகான்களும்,ஷுஹதாக்களும் மறைந்து வாழும் அடக்கஸ்தலங்களே தர்ஹாக்கள் என்று வழக்கு சொல்லில் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இத்தகைய நல்லோர்களின் அடக்கஸ்தலங்களுக்கு செல்வது ஷிர்க் என்று மூச்சு விடாமல் சொல்லி திரியும் போலி தவ்ஹீதுவாதிகளுக்கு உண்மையான ஏகத்துவம் தெரிந்திருந்தால்….இப்படி புலம்புவதை தவிர்த்திருப்பர்.
இஸ்லாமிய வரலாற்றில் சிறப்பான இடம் வகிக்கும் சஹாபிகளும் ஷுஹதாக்களும் அரபு நாடுகளிலிருந்து தமிழகம் வந்தது வெறுமனே வணிக நோக்கத்தில் மட்டுமல்ல,ஏகத்துவ நோக்கமும் சேர்ந்தே தான் இருந்துள்ளது.
அரபிகளின் வருகை தான் இந்தியா,இலங்கை,மலேசியா,சீனம்,இந்தோனேஷியா,ஜப்பான்,புருணை,போர்னியா,பிஜி,பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இன்றும் முஸ்லிம்களாக மக்கள் வாழ்வதற்கு பெரிதும் காரணமாகும்.
மேற்கூறப்பட்டுள்ள நாடுகளின் காடுகளிலும்,மலைகளிலும்,கடலோரங்களிலும் உள்ள நூற்றுக்கணக்கான அரேபிய இறைநேசர்களின் அடக்கஸ்தலங்கள் இன்றும் ஆதாரங்களாய் உள்ளன.
மஹ்மூது பந்தர் என்னும் பரங்கிபேட்டையில் அடங்கி இருக்கும் நபித்தோழர் உக்காசா(ரலி),ஷஹீது பந்தர் என்னும் கோவளத்தில் அடங்கியிருக்கும் தமீமுல் அன்சாரி(ரலி)ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாகும்.
சகாபிகளை தொடர்ந்து வலிமார்கள்,சூபிகள்,தர்வேஷ்கள்,மஜ்தூபிகள்,மஸ்தான்கள் என ஏகத்துவ பணிக்காக துருக்கி,பெர்ஸியா,அரேபியா போன்ற நாடுகளிலிருந்து குறிப்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வந்து சேர்ந்தனர்.
கோவளத்தில் இருந்து குளச்சல் வரை இந்த ஏகத்துவவாதிகளின் அடக்கஸ்தலங்களை காணலாம்.ஈராக் நாட்டை சேர்ந்த கர்ஸிம்(வலி)அவர்கள் ஹிஜ்ரி நான்காம் ஆண்டு தமிழகம் வந்தவர்கள். கோட்டாறில் அடங்கியுள்ளனர்.
அதே போல அப்துல் ரஹ்மான்(வலி)அவர்கள் ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு தமிழகம் வந்து நெல்லை கோதரிஸா மலையில் அடங்கியுள்ளனர்.
இவர்கள் நபி(ஸல்)அவர்களின் காலத்திலேயே ஏகத்துவ பணிக்காக தமிழகம் வந்த முதல் அணியாகும்.
திருச்சி – நத்தர்ஷா பாபா,மதுரை – அலியார்ஷா,அனுமந்தகுடி – சையது முகம்மது புகாரி,தேவிபட்டினம் – சையது அகமது,ஏர்வாடி – ஷஹீது சுல்தான் சையது இப்றாகீம்(ரலி)போன்ற இந்த மகான்கள் பனிரெண்டாம் நூற்றாண்டு வரை ஏகத்துவ பிரச்சாரத்திற்காக தமிழகம் வருகை தந்து தங்களை தமிழக மண்ணிற்குள் விதைத்து கொண்டவர்கள்.
அவர்கள் விட்டு சென்ற பணிகள் தான் இன்றும் கூட நாடு முழுவதும் தொடர்கின்றன.இத்தகைய மாபெரும் தவ்ஹீது போராளிகளை இன்றைய போலி தவ்ஹீது கூட்டம் சிறுமை படுத்த நினைத்து சமுதாயத்திற்குள் பல்வேறு குழப்பங்களை உண்டாக்கி வருகின்றனர்.
வரலாற்றை நினைவு படுத்தினால் மட்டுமே நாமும் வரலாறாக முடியும்?அதனால் தான் மகான்களையும்,வலிமார்களையும் அவர்களின் அடக்கஸ்தலங்கள் சென்று நினைவு கூர்ந்து வருகிறோம்.
அந்த சூழலில் நமக்கு ஏற்படும் உணர்வு அவர்களின் கடினமான ஏகத்துவ பணிகள் குறித்த வரலாறே.இந்த மகான்களை போன்று இன்று தமிழகத்தில் எந்த ஏகத்துவவாதியும் கஷ்டப்பட்டிருக்க மாட்டார்கள்.
ஏ.சி அறை இல்லாமல் ஏகத்துவம் சொல்ல முடியாது என்று கூறும் மனிதன் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் கரடு,முரடான பகுதிகளுக்கும் கால் நடையாகவே சென்று ஏகத்துவ பிரச்சாரம் செய்த வலிமார்களை குறை கூற என்ன அருகதை உள்ளது?
ஜியாரத் ஷிர்க் என்று கூறி இறைநேசர்களை மறக்கும் சமூகம் உண்மையான ஏகத்துவ வரலாற்றையும் சேர்த்தே மறந்து வருகிறது என்பதே நிதர்சனம்.
வரலாற்று குறிப்புகள் உதவி:முஸ்லிம்களும் தமிழகமும் என்ற முகவை இலக்கிய எழுத்தாளர் எஸ்.எம்.கமால் அவர்கள் எழுதிய நூலாகும்.
Tags: ,

Leave a Reply