மனைவி கழுத்தை நெரித்துக் கொலை:கணவர், மாமனார், மாமியாருக்கு ஆயுள் தண்டனை

முதுகுளத்தூரில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர், மாமனார், மாமியாருக்கு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மறவர் தெருவைச் சேர்ந்த மலைராஜ், பூமயில் தம்பதியரின் மகன் சிலம்பரசன். இவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் வடபாதி மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் மகள் முத்துப் பிரியாவுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு முத்துப்பிரியாவை கூடுதல் வரதட்சணையாக 10 பவுன் நகையும் ரூ.10 ஆயிரம் ரொக்கமும் வாங்கி வரும்படி சிலம்பரசனின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தினராம்.

முத்துப்பிரியா வாங்கி வராததால் கணவர் சிலம்பரசன், மாமனார் மலைராஜ், மாமியார் பூமயில் ஆகியோர் கழுத்தை நெரித்து கொலை செய்தனராம். பின்னர் வீட்டில் தூக்கிட்டு முத்துப்பிரியா தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி 30.10.2012 அன்று முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அப்போது அந்த புகாரில் உண்மையில்லை என தெரிய வந்ததைத் தொடர்ந்து 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி என்.பிரகாசன், கணவர் சிலம்பரசன், மாமனார் மலைராஜ், மாமியார் பூமயில் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை செலுத்த தவறினால் மூவரும் மேலும் 14 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , , , , ,

Leave a Reply