மத நல்லிணக்கத்திற்கான ஓர் இனிய சந்திப்பு…!

கோவை மாநகரின்  மயிலேரிபாளையத்தில் அமைந்துள்ள நல்லாயன் கிருத்துவக் கல்லூரியில் 13-வது வருடம் பயின்று பட்டம்பெறும் மாணவர்கள் பிற மத வழிபாடுகள் மற்றும் கொள்கைகளை தெரிந்துகொள்வதற்காக அவர்களது வழிபாட்டு தளங்களுக்கு செல்வது வருடந்தோறும் நடைபெறும் நிகழ்வு. இந்த சந்திப்பு நிகழ்ச்சியினை கோவை திவ்யோதயா பல்சமய மையம் ஒவ்வோர் ஆண்டும் ஒருங்கிணைத்து வருகிறது. இந்த வருடமும் இந்தக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்க்குழு கோவை நகரில் உள்ள புகழ் பெற்ற பல்வேறு சமயங்களைச் சேர்ந்த வழிபாட்டுத்தளங்களுக்கு சென்று அதன் நிர்வாகிகள் மற்றும் ஆன்மீகத் தலைவர்களை சந்திக்கும் நிகழ்ச்சி கடந்த நவம்பர் 24, 2017 (வெள்ளி) அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வின் ஒருபகுதியாக கோவை கரும்புக்கடையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நிர்வகித்துவரும் மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளிவாயிலுக்கு இக்குழு மதியம்  வந்தடைந்தது. இக்குழுவில் 13 இறுதியாண்டு மாணவர்களும் நல்லாயன் கிருத்துவக் கல்லூரியின் இரண்டு பேராசிரியர்களும் அங்கம்வகித்தனர். ( Father John Peter, Director Divyodhaya, Father Antony Raj & Father Jerald from Good Shepherd Seminary ) இவர்களை மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளிவாயிலின் நிர்வாகிகள் வரவேற்று அவர்களுக்கு இந்த பள்ளியின் செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.
ஜமாஅத்தின் சார்பில் இஸ்லாத்தின் அடிப்படைகளான ஏகத்துவம், தூதுத்துவம் மற்றும் மறுமைக் கோட்பாடுகள் குறித்தும் அதன் நம்பிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார் ஜமாஅத்தின் கணபதி வட்ட பொறுப்பாளர் ஜனாப். முஹம்மது அலி அவர்கள். இதனைத்தொடர்ந்து மாணவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு ஜனாப். K.S. அப்துல் ரஹ்மான், மஸ்ஜிதுல் இஹ்ஸானின் தலைவர் ஜனாப்.K. அக்பர் அலி, கோவை மாநகர செயலாளர் ஜனாப். M.S. ஷபீர் அலி ஆகியோர் விளக்கமளித்தனர்.
இந்த சந்திப்பினை ஜமாஅத்தின் சார்பாக மக்கள் தொடர்புச் செயலாளர் ஜனாப்.M. அப்துல் ஹக்கீம் அவர்கள் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்தார். இந்த சந்திப்பில் ஜமாஅத்தின் ஊழியர்களும் பங்குகொண்டனர்.
இஸ்லாம் குறித்த தங்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்களை பெற்றதாக வருகைதந்த மாணவர்களும் கல்லூரியின் பேராசிரியர்களும் தெரிவித்தனர். இந்த சந்திப்பு பன்மைச்சமூகத்தில் ஒருவருக்கு மற்றவருடனனா புரிதல்களை மேம்படுத்தி சகோதரத்துவத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதாகவும் அமைந்தது.
இந்த குழுவினருக்கு ஜமாஅத்தின் சார்பாக இஸ்லாமிய நூல்களும் திருக்குர்ஆன் தமிழாக்கமும் வழங்கப்பட்டது.
Tags: ,

Leave a Reply