பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து 

 
போகி  வருது , போகியோடு 
போகட்டும் துன்பமெல்லாம் 
பொங்கல் வருது பொங்கலோடு 
பொங்கட்டும் இன்பமெல்லாம் 
 
தமிழருக்குத் திருநாள் -இது 
தரணி போற்றும் பெருநாள் 
 
உழவருக்குத் திருநாள் -இது 
உவகையூட்டும் பெருநாள் 
  
ஆடியிலே விதை விதைச்சி 
தைமாதம் கதிரறுத்து 
 
வெய்யில் ,மழை  இரண்டாலும் 
விவசாயத்திற்குதவிய   
 
ஆதவனுக்கு நன்றி சொல்ல 
வயக்காட்டில் பொங்கலிட்டு 
 
மாடுகளுக்கு நன்றி சொல்ல 
மாட்டுப்பொங்கல் கொண்டாடி 
 
உறவுகளோடு உறவாட 
காணும்பொங்கல் கொண்டாடி 
   
கரிநாளில்  கறிவிருந்து உண்டு 
களிக்கின்ற  பண்டிகை .
 
துள்ளிக்கிட்டு  ஓடிவரும் 
ஜல்லிக்கட்டுக் காளைகளை 
மல்லுக்கட்டி தானடக்கி 
அள்ளிக்கொள்வார் பரிசுகளை . 
 
மாட்டுப்பொங்கலன்று 
மாற்றுக்  குறையாத 
உலகப்பொதுமறையாம்
உத்தமத் திருக்குறளை 
உலகிற்கு அருளிய 
புலவர்  திருவள்ளுவரை 
போற்றிப்  புகழ்பாடும் 
திருவள்ளுவர் தினம் கொண்டாடி 
தமிழுக்குப் பெருமை சேர்க்கும் 
தமிழ் கூறும் நல்லுலகம் 
அரும்பசி தீர்க்கின்ற 
விவசாய மக்களுக்கும் ,
அறிவுப் பசி தீர்க்கின்ற 
அன்னைத் தமிழுக்கும் ,
ஒருசேர நன்றி சொல்லும்
திருநாள்தான் பொங்கலன்றோ.    
 
உழைப்பின் பெருமையும் 
நன்றிகாட்டும் நற்பண்பும்  
விருந்தோம்பும் நற்செயலும்  
வீரத்தின் பெருமாண்பும் 
தமிழனின் உயர்வென்று 
தரணிக்கு எடுத்துக்காட்டும் 
பன்முகத் திருவிழாவாம் 
பொங்கல்தன்னைப்   போற்றுவோம்.   
 
வாழ்க  தமிழ் , வாழ்க தமிழகம் 
வாழ்க உழவர் , வாழ்க வையகம் .
 
அன்புடன் 
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் 
Tags: , ,

Leave a Reply