பெண்ணின் மனதைப் புரிந்த மார்க்கம் !

 

( முபல்லிகா A.O. நஜாத் முனவ்வரா – முதுகுளத்தூர் )

 

ஆதிகாலத்து அரபு நாட்டு மக்களிடம் ஒரு வழமை இருந்து வந்தது. ஒரு கணவன் தனது மனைவியிடம் ………………. “நீ எனக்கு என் தாயின் முதுகைப் போன்றவள்” அல்லது “உன் வயிறு என் தாயின் வயிறு போல” இதுபோன்ற சில சொற்களைக் கூறிவிட்டால் இனிமேல் அந்த மனைவியுடன் அந்தக் கணவர் சேர்ந்து வாழத் தகுதி இழந்தவர். இந்தக் காலத்தில் “தலாக்” செய்வதற்கு இணையான செயல் இது. மனைவியைத் தாய்க்கு உவமையாக வர்ணித்து விட்டால் அந்தத் தம்பதிகள் பிரிந்து விடவேண்டும் என்பது வழமை.

கவ்லா பின்த் தஃலபா (ரலி) என்ற சஹாபிப் பெண்மணி இருந்தார். கணவரும் குழந்தைகளும் இருந்தார்கள். கவ்லா(ரலி) அவர்களின் கணவரும் தனது மனைவியிடம் இதுபோன்ற ஒரு வார்த்தைகளைக் கூறி ஒருமுறை குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார். கவ்லா (ரலி) அவர்கள் இந்த பிரச்சனையால் மனம் நொந்து விட்டார்கள். நாட்டு வழக்கப்படி இனிக் கணவரை விட்டுப் பிரிந்தால் குழந்தைகளின் வாழ்வு என்னாவது என்ற சோகம் அவர்களை வாட்டி வதைத்தது.

தனது குடும்ப நிலைமையைப் பெருமானார் (ஸல்) அவர்களிடம் கூறி மீண்டும் தனது கணவரோடு சேர்ந்து குடும்பம் நடத்திட வழிவகை இருக்கிறதா எனக் கேட்டு வருவோம் என்று புறப்பட்டார்.

மக்காவை விட்டும் மதினா நகருக்கு நபி (ஸல்) ஹிஜ்ரத் செய்த ஐந்தாம் ஆண்டு மதினாவில் நடந்த சம்பவம் இது. இந்தச் செயலின் விளைவு – முடிவு – தீர்ப்பு எதுபற்றியும் இறைமறை வசனம் இறங்கப்படாத காலம் அது.

நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா நாயகி (ரலி) அவர்களின் இல்லத்தில் இருந்தார்கள். தேடிப் பிடித்து கவ்லா (ரலி) அவர்கள் ஆயிஷா நாயகியின் இல்லத்தில் வந்து நபிகளாரைச் சந்தித்தார்கள். நடந்த சம்பவத்தை நபிகளாரிடம் கவ்லா (ரலி) கூறினார்கள். மீண்டும் தமது கணவரோடு சேர்ந்து வாழ இஸ்லாத்தின் சட்டம் என்ன? என்று கேட்டார்கள்.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், கவ்லாவிடம் “நீர் உமது கணவருக்கு இனி ஆகுமானவராக இல்லை என்பதே எனது கருத்து” எனக் கூறினார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்ட கவ்லா (ரலி) துடித்துப் போய்விட்டார்கள். “யாரசூலல்லாஹ் ! இனி என் வாழ்வும் என் குழந்தைகளின் வாழ்வும் பாழாகி விடுமே? எனது குடும்பம் பாழாவதிலிருந்து தடுத்திட வேறு ஏதாவது வழிவகை இருக்கிறதா?” என்று கண்ணீர்விட்டு முறையிட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கும் கவ்லா (ரலி) அவர்களுக்கும் மத்தியில் இது சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் நீண்ட நேரம் நடந்து கொண்டிருந்தது. இது சம்பந்தப்பட்ட உறுதியான இறைவாக்கு எதுவும் இது வரை இறக்கி அருளப்படவில்லையே? இந்தப் பெண்மணியின் சோகத்தை எப்படி நீக்குவது என்று நபி (ஸல்) அவர்களும் கவலையில் ஆழ்ந்திருந்தார்கள். அப்போது தான் இருவரின் கவலையையும் நீக்கும் வண்ணம் திருமறை வசனம் இறங்கியது.

“தன்னுடைய கணவர் விஷயத்தில் உம்மிடம் விவாதித்துக் கொண்டும், அல்லாஹ் இடத்தில் முறையிட்டுக் கொண்டும் இருக்கிற பெண்ணின் சொல்லை நிச்சயமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான். உங்கள் இருவரின் உரையாடலையும் அல்லாஹ் கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் கேட்பவனும் பார்ப்பவனுமாக இருக்கிறான். உங்களில் யார் தன்னுடைய மனைவியரை “ளிஹார்” செய்கிறார்களோ அவர்களின் மனைவியர் அவர்களுக்கு அன்னையாகி விட மாட்டார்கள். அவர்களைப் பெற்று எடுத்தவர்கள் தான் அவர்களுக்கு அன்னை ஆவார்கள்….”

சூரத்துல் முஜாதலாவின் ஆரம்பமே இந்த வசனங்களில் இருந்தே துவங்குகிறது. தாரத்தைத் தாயோடு ஒப்பிட்டுக் கூறி மனைவியை விவாக பந்தத்திலிருந்து நீக்கி விடும் செயலுக்கே “ளிஹார்” என்று சொல்லப்படும். இப்படி “ளிஹார்” செய்து விட்டவர்கள் சாதாரணமாகத் தன் மனைவியிடம் இணைந்துவிட முடியாது. பெண்மையின் தன்மையையும் – மென்மையையும் சீண்டி விளையாடும் செயலாக இது ஆகிவிடக் கூடாது என்று தண்டனை ஒன்றையும் தருகிறது ஷரீஅத். “ளிஹார்” செய்த கணவன் தன் மனைவியைச் சேர்த்து வாழுமுன் தொடராக அறுபது நோன்புகள் நோற்க வேண்டும் அல்லது அறுபது ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இதுவே தண்டனை !

பெண்ணோடு சேர்ந்து வாழும் வாழ்வை விளையாட்டாக எண்ணி வாழும் பொழுதுபோக்கான ஆண்களுக்கு ஒரு சூடு கொடுத்து வைக்க வேண்டும் என்பதே தூய இஸ்லாத்தின் நோக்கம் ஆகும். அதற்காகவே இத்தண்டனை.

கணவரின் நாகரீகம் அற்ற செயலால் எத்தனை பெண்கள் இடிவிழுந்து போகிறார்கள்? ஆண்களின் விளையாட்டான பேச்சால் சொல்லால் செயலால் எத்தனை குடும்பங்கள் பாழாகி விடுகின்றன? மூர்க்கத் தனமான ஆண்மைக்கு மென்மையான பெண்மை பாழாகி விடுவதுதான் உலகின் நியதியா? இல்லை ! ஆணும் பெண்ணும் சரிசமத்துவம் உள்ள தூய ஜீவன்கள். அவர்கள் தொட்ட வாழ்வு தொடர்ந்து வரவேண்டும் என்பதுதான் இஸ்லாத்தின் எண்ணமும் கூட !

பாழடைந்து கிடந்த பெண்குலத்தின் இழிநிலைகளை எல்லாம் பளிங்கு போல் பளபளக்க வைத்தது ஷரீஅத்தின் சட்ட திட்டங்கள் மட்டுமே ! மவ்டீகத்தால் மூடத்தனத்தால் ஆணகங்காரத்தால் தெய்வீகத்தின் பெயரால் பாழ்படுத்தப்பட்ட பெண்மையை உலகின் உச்சாணிக் கொப்பில் உட்கார வைத்து அன்னையாய் துணைவியாய் – சகோதரியாய் – பிள்ளையாய் எந்த முனையில் நோக்கிலும் கண்ணிய வடிவமாய்க் காணுகின்ற பாக்கியத்தைப் பெற்றுத் தந்தது இஸ்லாம் ஒன்று தான் !

மலைபோல் வளர்ந்து நின்ற மடமைகளை மண் புழுதிகளாகப் பறக்கவிட்டு சட்டத்தால் திட்டத்தால் குடும்ப வாழ்வால் பெண் குலத்தைப் பெருமைப் படவைத்தது இஸ்லாம் ஒன்று தான். இஸ்லாம் பெண்களுக்கு அளித்திருக்கும் பெருமைக்குரிய தகுதிகளை இன்று பன்னாட்டு அரசியல்கள் சட்டமாக்கித் தனக்குப் பெருமை சேர்த்துக் கொண்டு நிற்கின்றன.

பெண்மையின் தன்மைகளை உணர்ந்து நடப்பதற்கு இஸ்லாத்தைப் போல ஒரு இணைக் கொள்கையை இந்த உலகில் எவரும் கொண்டு வர இயலாது. இஸ்லாம் பெண்களுக்கு அளித்திருக்கும் உரிமைகளையும் சலுகைகளையும் எடைபோட்டுப் பார்க்க முடியாதவர்கள்தான் இஸ்லாத்தையும் பெண் குலத்தையும் பிரித்துப் பார்க்கிறார்கள்.

பெண்களின் உடை அலங்காரம், நடை அலங்காரம் – சிகை அலங்காரம் – நகை அலங்காரம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறியது போல யாரும் இலக்கணம் வடித்துக் கூறியது இல்லை. அனைத்தும் பட்டை தீட்டப்பட்ட சட்ட திட்டங்கள் !

ஒவ்வொரு நிலையிலும் பெண்ணினத்தின் ஆழ் மனதைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து அவளை உயர் நிலைப்படுத்துவதில் உற்சாகமாக நிற்பது உலகில் இஸ்லாம் ஒன்று தான்.

கல்வி அறியாக்காலத்தில் தான் பெண்மை அடிமைப் பட்டுக் கிடந்ததை வரலாறு கூறுகிறது. இன்று என்ன இல்லாமல் இருக்கிறது? கண் மூடி விழிக்குமுன் மண்ணை விட்டும் விண்ணுக்குச் சென்று சேர்ந்து விடும் காலமிது.

இன்றும் நூற்றுக்கு நூறு பெண் குலம் எங்கே பெருமையுடன் வாழுகிறது? முழுக்க முழுக்க இஸ்லாம் வாழும் இஸ்லாமியக் குடும்பங்களில் தான் பெண்மக்கள் குதூகலமாகவும், மகிழ்வாகவும், மன நிறைவாகவும், பரிபூரணச் சுதந்திரத்துடனும் வாழ்கிறார்கள். இது கண்டெடுக்கப்பட்ட உண்மை !

எங்கே இஸ்லாம் வாழுகிறதோ அங்கே பெண்கள் மகிழ்வோடு வாழுகிறார்கள் ! எங்கே இஸ்லாமியச் சட்டம் வாழுகிறதோ அங்கே பெண்கள் எல்லாச் சுதந்திரமும் பெற்று வாழுகிறார்கள் ! எங்கே இஸ்லாம் அரசியலிலும் அரசாங்கத்திலும் வாழுகிறதோ அங்கே பெண்கள் ஆண்களைவிட அதிக அதிக நிம்மதியாக வாழுகிறார்கள் ! ஏன் தெரியுமா? பெண்ணின் மனதைப் புரிந்த மார்க்கம் இஸ்லாம் ஒன்றுதான்.

 

Tags: , ,

Leave a Reply