புளூட்டோ பதவியிறக்கப்பட்டது ஏன்?

புளூட்டோ பதவியிறக்கப்பட்டது ஏன்?

சூரியனுக்கு 9 கிரகங்கள் (புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் மற்றும் புளூட்டோ) உண்டு எனப் படித்திருக்கிறோம். வரைபடங்களில் பார்த்திருக்கிறோம். இந்த நிலை 2006 ஆகஸ்ட் 24 வரைதான்.

இன்று பள்ளித் தேர்வில் சூரியனுக்கு எத்தனை கிரகங்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டால், எட்டு என்று பதில் எழுதினால்தான் அது சரியான விடை.

திடீரென்று ஒரு கிரகம் காணாமல் போனது எப்படி? காணாமல் போகவில்லை. 9-வது கிரகமான புளூட்டோ தற்போது “கிரகம்” என்ற அந்தஸ்திலிருந்து கீழிறக்கப்பட்டு, “குட்டிக்கிரகங்கள் (dwarf planets)” வரிசையில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

1930 பிப்ரவரி 18 அன்று க்ளைட் டோம்பாக் என்ற 22 வயது இளைஞரால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் புளூட்டோ. 2006 ஆகஸ்ட் 24 அன்று செக் குடியரசுத் தலைநகரான பிராக் நகரில் கூடியிருந்த சர்வதேச வானியல் சங்கத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் “புளூட்டோ இனி கிரகம் அல்ல ; குட்டிக்கிரகமே” என்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். 76 ஆண்டுகளாக அனுபவித்து வந்த கிரகம் என்ற உரிமையை புளூட்டோ அன்று இழந்தது. பல பத்தாண்டுகளாக பாடப்புத்தகங்களில் சொல்லப்பட்டு வந்த விஷயத்தை மாற்றி எழுத வேண்டிய நிலையை இம்முடிவு ஏற்படுத்தியிருக்கிறது.

காரணம்?

புளூட்டோவைப் பற்றி முன்னர் தெரியாத தகவல் எதையும் விஞ்ஞானிகள் புதிதாகக் கண்டுபிடித்துவிடவில்லை. ஆனால் கிரகம் என்பதற்கான இலக்கணத்தை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தை வானியல் சங்க விஞ்ஞானிகள் கூட்டம் நடத்திய 2006க்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட ஸெனா (Xena) என்ற குட்டிக்கிரகம் ஏற்படுத்தி விட்டது. புளூட்டோவுக்கு வில்லனாக முளைத்த இந்த ஸெனாவும் மற்ற கிரகங்களைப் போல சூரியனைச் சுற்றி வரக் கூடியது ; கிட்டத்தட்ட கோள வடிவம் கொண்டது;

ஆனால் ஸெனாவின் எடை புளூட்டோவின் எடையை விட சற்றே கூடுதலானது. ஸெனா கிரகமா இல்லையா என்ற விவாதம் வந்தபோது, “ஸெனாவை விட எடை குறைவான புளூட்டோவிற்கு கிரகம் என்ற அந்தது உண்டு எனில், ஸெனாவுக்கு அந்த அந்ததை எப்படி மறுக்க முடியும்?” என்ற கேள்வி வானியல் அறிஞர்களிடையே எழுந்தது. ஒன்று ஸெனாவையும் கிரகமாக ஏற்கவேண்டும் அல்லது புளூட்டோ, ஸெனா இரண்டுமே கிரகங்கள் அல்ல என்று அறிவிக்க வேண்டும் என்ற நிலைமை தோன்றியது. அது மட்டுமல்ல, நெப்டியூனுக்கு அப்பால் உள்ள குய்பர் பகுதியில் (Kuiper Belt) புளூட்டோ, ஸெனா இருப்பது போல இன்னும் பல குட்டிக் கிரகங்கள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. புளூட்டோவையும் ஸெனாவையும் கிரகங்கள் என்று ஏற்றுக் கொண்டால், சாரோன், செரஸ் போன்ற பல குட்டிக்கிரகங்களை கிரகம் என்று அங்கீகரிக்க வேண்டியிருக்கும். பின்னர் கண்டுபிடிக்கப்படும் குட்டிக்கிரகங்கள் கூட இந்த அந்தஸ்தைக் கோரக்கூடும் என்ற நிச்சயமற்ற நிலை தோன்றியது.

புதியவரையறை

இந்த நிச்சயமற்ற நிலைதான் “கிரகம்” பற்றிய விளக்கத்தைத் தெளிவாக வரையறுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. வானியல் சங்க விஞ்ஞானிகள் கிரகம் என்ற தேர்வில் ஒரு பொருள் தேற வேண்டுமானால் அதற்கு மூன்று நிபந்தனைகளை விதித்தனர்.

1) அது சூரிய குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும் ; அதாவது சூரியனைச் சுற்றிவர வேண்டும்.

2) கோள வடிவத்தில் அல்லது கிட்டத்தட்ட கோள வடிவத்தில் இருக்க வேண்டும். (ஒரு குறிப்பிட்ட அளவு எடையும் ஈர்ப்பு சக்தியும் சேர்ந்தால்தான் சூரியனைச் சுற்றிவரக் கூடிய பொருளுக்கு இந்த கோள வடிவம் கிட்டும்).

3) அது சுற்றிவரும் பாதையில் இன்னொரு கிரகத்தின் பாதை குறுக்கிடக் கூடாது.

முதல் இரண்டு நிபந்தனைகளில் புளூட்டோ தேறிவிடுகிறது. ஆனால் அதனுடைய நீள்வட்டப் பாதை நெப்டியூன் பாதையுடன் குறுக்கிடுகிறது. எனவே, புளூட்டோவை இனி குட்டிக்கிரகம் என்ற வரிசையில் சேர்த்துவிடலாம் என்று வானியல் அறிஞர்கள் முடிவுசெய்துள்ளனர்.

இத்தனை ஆண்டுகளாக புளூட்டோவை கிரகம் என்று சொல்லி வந்திருக்கிறோம். அதை தற்போது மாற்றுவானேன் என்று உணர்வுபூர்வமாகப் பிரச்சனையைப் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அறிவியலில் உணர்வுபூர்வமானது என்று எதுவும் இல்லை. ஆதாரங்கள், தகவல்கள், பரிசோதனைகள், நிரூபணங்கள் என்ற அம்சங்களே அறிவியலின் அடிப்படைகள். இத்தனை ஆண்டுகளாக இருந்த நம்பிக்கை அல்லது பழக்கம்-எனவே அதை மாற்றக் கூடாது என்ற வாதம் ஜாதி, மத விஷயங்களில் பிரிக்க முடியாதபடி இருக்கிறது. அறிவியல் எப்போதுமே தன்னை ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை. எதையும் வறட்டுப் பிடிவாதமாகப் பிடித்துத் தொங்குவதில்லை.

இதற்குப் பல உதாரணங்களைத் தர முடியும். 16-ஆம் நூற்றாண்டு வரை சூரியன் பூமியைச் சுற்றி வருவதாகவே அறிவியலாளர்கள் உட்பட நம்பி வந்தனர். பின்னர் கோபர்னிக்கஸ் தன்னுடைய கண்டுபிடிப்புகளை வெளியிட்டபிறகு, பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது, பூமியும் ஒரு கிரகமே என்ற உண்மைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. (ஆனால் இந்த உண்மையை ஏற்க வைக்க அந்தக் கால விஞ்ஞானிகள் தங்களுடைய உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டியிருந்தது என்பது தனிக் கதை).

நம் நாட்டிலும் சூரியனை பூமியைச் சுற்றிவரக் கூடிய கிரகம் என்று நினைத்ததால்தான் சூரியனுக்கு ஜாதகக் கட்டங்களில் இடம் கிடைத்தது. பூமி ஒரு கிரகம் எனத் தெரியாத காரணத்தால் பூமிக்கு அங்கு இடம் கொடுக்கப்படவில்லை. யுரேனஸ், நெப்டியூன் என்ற கிரகங்கள் இருந்ததே தெரியாததால் அவைகளுக்கும் ஜாதகக் கட்டங்களில் இடம் கொடுக்கப்படவில்லை. ஒரு வித்தியாசம் என்னவெனில், பின்னர் உண்மைகள் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு அவற்றை அறிவியல் ஏற்கிறது. ஜாதகக்காரர்கள் ஏற்பதில்லை. அறிவியல் கருத்து வேறுபாடுகளை வரவேற்கிறது. ஆனால் பரிசோதனைகளில் மீண்டும் மீண்டும் தன்னை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துக் கொள்ளக் கூடிய கோட்பாடே ஏற்றுக் கொள்ளப்படும். பின்னர் ஒரு வேளை அது தவறு என நிரூபிக்கப்பட்டால் அறிவியல் கௌரவம் பார்ப்பதில்லை. புதிய தகவலை ஏற்றுக் கொள்கிறது.

மக்களும் அறிவியல் பார்வையைப் பெற வேண்டும் என்று நாம் சொல்வது இந்தக் கோணத்தில்தான். திறந்த மனத்தோடு புதிய தகவல்களை ஏற்கும் மனவளம் உள்ள சமூகமே முன்னேறிச் செல்லும். இல்லையெனில் தேங்கிய குட்டையாகி விடும்.

2006-ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை..

Tags: 

Leave a Reply