புனித ஹஜ்

அறிவோம் இஸ்லாம்
பாத்திமா மைந்தன்
19       புனித ஹஜ்
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் இறுதிக் கடமை ‘ஹஜ்’ பயணமாகும். வசதி படைத்தவர்கள் தனது வாழ்நாளில் ஒருமுறையேனும் மக்காவில் உள்ள கஅபா ஆலயத்திற்குச் சென்று அந்தப் புனிதக் கடமையை இனிதே நிறைவேற்ற வேண்டும்.
”அந்த ஆலயத்திற்குச் சென்று வர மக்களில் எவர்கள் சக்தி பெற்றவர்களோ, அவர்கள் ஹஜ் செய்வதானது, அல்லாஹ்வுக்காக ஆற்ற வேண்டிய கடமையாகும். ஆனால் யாரேனும் இந்தக் கட்டளையை செயல்படுத்த மறுத்தால் (அவர் தெரிந்து கொள்ளட்டும்) உலகத்தார் அனைவரை விட்டும், நிச்சயம் அல்லாஹ் தேவையற்றவனாக இருக்கின்றான்” (3:97) என்று திருமறையில்  இறைவன் கூறுகின்றான்.
இதனால் ஹஜ் செய்வதை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது. இந்த ஆண்டு போகலாம்; அல்லது அடுத்த ஆண்டு செல்லலாம் என்று இந்தப் புனிதக் கடமையை எந்தக் காரணத்தைக் கொண்டும் தள்ளிப் போடக் கூடாது.
ஹஜ் செய்ய சக்தி பெற்றவர் அதனை விரைவாக நிறைவேற்றுவது கடமை என்பதை இறைவனின் கட்டளைகளும், நபிகளாரின் மொழிகளும் உணர்த்துகின்றன.
”எவர் ஹஜ் செய்ய நாடுகிறாரோ, அவர் (தாமதம் செய்யாமல்) ஹஜ் செய்வதில் முனைப்பாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர் நோய்வாய்ப்பட்டு விடலாம். அல்லது அவரது ஒட்டகமும் பயணப்பொருளும் காணாமல் போகலாம். மேலும் வேறு ஏதேனும் தேவைகள் உருவாகி ஹஜ் செய்யாத நிலைக்கு அவரைத் தள்ளி விடலாம்” என்று  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஹஜ் பயணம் என்பது இறை இல்லத்தைத் தரிசிக்கவும், இறையருளைப் பெறவும் மேற்கொள்ளும் புனிதப் பயணமாகும். மற்ற உலக நோக்கங்களுக்கு இதில் இடம் தரக் கூடாது.
ஹஜ் கடமையாவதற்குப் பின் வரும் நிபந்தனைகள் அவசியம்.
1. முஸ்லிமாக இருக்க வேண்டும்.
2. பருவ வயதை அடைந்திருக்க வேண்டும்.
3. நல்ல மனநிலையுடன் இருக்க வேண்டும்.
4. சுதந்திரமானவராக இருக்க வேண்டும்.
5. உடல் பலம், மன பலம், பண பலம் உடையவராக இருக்க வேண்டும்.
ஹஜ்ஜை நிறைவேற்ற புறப்படுபவர் தன் குடும்பத்தார் மற்றும் உறவினர்களை அழைத்து இறையச்சத்துடன் நடந்து கொள்ளுமாறு உபதேசம் செய்வது விரும்பத்தக்க செயலாகும்.
இறையச்சம் என்பது இறைவனின் கட்டளைப்படி செயல்படுவதும், அவன் தடுத்தவைகளை விட்டு விலகிக் கொள்வதும் ஆகும்.
ஹஜ் பயணம் செல்லும்போது வழித்துணை சாதனங்கள் தேவைப்படும். அதையெல்லாம் மறக்காமல் கொண்டு செல்ல வேண்டும். ஆனால் கொண்டு செல்லும் வழித்துணை சாதனங்களில் மிகச் சிறந்தது, இறையச்சம் தான்.
”நீங்கள் (ஹஜ்ஜுக்காக) வழித்துணை சாதனங்களைக் கொண்டு செல்லுங்கள். உண்மையாதெனில், வழித்துணை சாதனங்களில் எல்லாம் மிக மேலானது, இறையச்சம்தான்” (2:197) என்று திருமறையில் இறைவன் கூறுகின்றான்.
மனித உயிர், மானம் ஆகியவற்றில் அநீதி இழைத்திருந்தால், ஹஜ் பயணம் செல்வதற்கு முன்பு, உரியவர்களிடம் அதற்காக சமாதானம் செய்து கொள்ள வேண்டும். பொருள் போன்றவற்றில் உரிமை மீறி இருந்தால், அதை மீட்டுக் கொடுப்பதும் அல்லது பொறுத்துக் கொள்ள வேண்டிக் கொள்வதும் அவசியமாகும்.
இந்தப் புனிதக் கடமையை நிறைவேற்ற கடனோடும் போகக்கூடாது; கடன் வாங்கியும் போகக்கூடாது.
”ஹஜ் செய்யாத ஒருவர் ஹஜ்ஜுக்காக கடன் வாங்கலாமா?Ó என்று நபிகளாரிடம் கேட்டபோது, அவர்கள் ”கூடாது” என்று பதில் அளித்தார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ப் (ரலி)
ஹஜ் காலத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட எல்லையில் ஹஜ் செய்வதற்காக உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். ஹஜ் பயணிகள் அணிய வேண்டிய எளிய ஆடையை அணிந்து, ‘இஹ்ராம்’ என்னும் கட்டுப்பாட்டை ஏற்று, ஹஜ்ஜை தொடங்க வேண்டும். ”உன் அழைப்பை ஏற்றேன், இறைவா! உன் அழைப்பை ஏற்றேன். உனக்கு இணை துணை யாரும் இல்லை. திண்ணமாக அனைத்துப் புகழும், அருளும் உனக்குரியவைதான். ஆட்சியதிகாரமும் உனக்குரியதே” என்ற  முழக்கத்தை (தல்பியா) மொழிய வேண்டும்.
(தொடரும்)
தல்பியா
‘தல்பியா’ என்ற சொல்லுக்கு முன்னோக்குதல், நாடிச் செல்லல், பரிவு காட்டல், தூய அன்பு, தாங்குதல் போன்ற பல அர்த்தங்கள் அகராதியில் காணப்படுகின்றன. இஸ்லாமிய வழக்கில் ‘தல்பியா’ என்பது ஹஜ் அல்லது உம்ராவின் போது புனிதப்  பயணிகள் இறைவனைப் போற்றும் ஓர் முழக்கமாகும்.
”லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் லா ஷரீக லக லப்பைக்” என்று தொடங்கும் இந்த முழக்கத்திற்கு, ”உன் அழைப்பை ஏற்றேன், இறைவா; உன் அழைப்பை ஏற்றேன்” என்பது பொருளாகும்.
இந்த முழக்கத்தை இஹ்ராம் கட்டியதில் இருந்து, துல்ஹஜ் பத்தாம் நாள் கல்லெறியத் தொடங்கும் வரை கூறுவார்கள்.
மேட்டில் ஏறும்போதும் பள்ளத்தில் இறங்கும் போதும், பயணிகளைச் சந்திக்கும்போதும், பகலிலும், இரவிலும் ‘தல்பியா’ கூறுவது விரும்பத்தக்கதாகும்.
Tags: 

Leave a Reply