புதிய இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வடிவங்கள்

புதிய இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வடிவங்கள்

மணவை முஸ்தபா

தமிழகத்தில் காலூன்றிய சமயங்கள் அனைத்தும் தமிழை, தமிழ் இலக்கியங்களை வளர்த்த பெருமையைப் பெற்றுள்ளன. இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களும் தமிழில் வழங்கிய இலக்கிய வகைகளில் வடிவங்களில் இலக்கியங்களை உருவாக்கத் தவறவில்லை. காப்பியம் முதல் குறள் வரை பாடித்தீர்த்தனர்.

அதோடு முஸ்லிம் தமிழ்ப் புலவர்களின் பங்களிப்பு நின்று விடவில்லை. புதிய புதிய இலக்கிய வடிவங்களைத் தமிழில் உருவாக்கிய பெருமையும் அவர்களுக்கு உண்டு. மஸ்அலா, கிஸ்ஸா, முனாஜாத்து எனும் மூவகை வடிவங்களை அரபியிலிருந்தும், நாமா எனும் வடிவத்தை பாரசீகத்தில் இருந்தும் தமிழ் இலக்கியத்திற்கு இறக்குமதி செய்தனர். படைப்போர், தொண்டி நாடகம், திருமண வாழ்த்து எனும் மூன்று புதிய இலக்கிய வடிவங்களைத் தமிழுக்கென்றே உருவாக்கிய பெருஞ்சிறப்பு இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களுக்கு உண்டு. இது போல பிற மொழிகளில் நிகழ்ந்துள்ளதா என்பது ஆராய்ச்சிக்குரியது.

இந்த ஏழு இலக்கிய வடிவங்கள் தான் தமிழுக்குப் புதியதேயன்றி, அவற்றில் கையாளப்பட்ட யாப்பு முறைகள் மரபு வழிப்பட்டவை. இவையனைத்துமே இஸ்லாமியக் கொள்கை, கோட்பாடுகள், இஸ்லாமியப் பெரியோர்களின் வாழ்க்கை வரலாறுகள், பெருமானார் உட்பட இறைத்தூதர்களின் வாழ்வையும், வாக்கையும் உணர்த்துவனவாகும்.

இவற்றுள் நொண்டி நாடகம் சமுதாயத்தில் காணும் தவறுகளையும் அவற்றிற்கான காரண, காரியங்களை நகைச்சுவையோடு நையாண்டி செய்து, சமுதாயக் கோணல்களை உணரச் செய்து திருத்தும் சமூக சீர்திருத்த நோக்குடையதாகும்.

தமிழ்க் காப்பிய வரலாற்றில் இருபதுக்கும் மேற்பட்ட காப்பியங்களைப் படைத்த பெருமை இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களுக்கு உண்டு. அதே போன்று புலவர் நாயகம் சேனாப் புலவர் நான்கு காப்பியங்களை ஒரு சேரப் படைத்தளித்த பெருமைக்குரியவராவார்.

நவீனப் படைப்பிலக்கியங்களில் இரண்டாவது நாவல் ‘அசன்பே சரித்திரம்’ எழுதியவர் இலங்கையைச் சேர்ந்த சித்தி லெப்பை எனும் முஸ்லிம் எழுத்தாளராவார். வரலாற்று நாவல் உருவாக்கத்துக்கு அடிப்படை அமைத்துத் தந்த புதினப் படைப்பாகும்.

(தமிழர் வாழ்வில் இஸ்லாத்தின் தாக்கம் எனும் கட்டுரையிலிருந்து)

 

Tags: , , ,

Leave a Reply