புண்ணியத் தளிர்வுகள் !

புண்ணியத் தளிர்வுகள் !

கம்பம் ஹாருன் ரஷீத்

 

தீன்வழிப் பசுமைகளாய்

தியாக வரலாற்றினில்

தியானித்துப் பயணித்திட

பிறவியின் பயன்பாடு

முறையோடு பூர்த்தியாகி

மறுமையின் வாழ்விதழை

மணங்கமழச் செய்கிறது !

 

இரத்த ஓட்டத்தினுள்

ஸம்ஸம்மின் குளிர்ந்த தூய்மை

இணைந்து நனைந்துருகி

இதயத்தைக் கழுவிடும்போது,

கல்பின் களங்கங்கள்

கண்ணீரில் கரைந்திருக்க

அன்றுதான் பிறந்திட்ட

புனர்ஜென்மப் பூம்படிவு,

குற்றங்குறைகளெல்லாம்

அற்றுப் போகும்படி

அர்ப்பணிப்பை அழகுபடுத்துகிறது !

 

சொந்த பந்த ஏழ்மைகளோடு

சிந்துகின்ற அரவணைப்பு

பந்த பாச உணர்வுகளுக்குள்

பகிர்ந்தளிக்கும் குர்பானியாய்

பண்பட்ட தியாகத்தினைப்

பக்குவமாய்ப் புரியவைத்து

மனிதத்தைப் புனிதமாக்கிய

கண்ணியமிக்க ஹாஜிகளைக்

கண்குளிரத் தருகிறது!

 

உயிரற்ற பயணத்தினுள்

உணர்விழக்கும் முன்பாக

உயிரினும் மேலான

உயரியதோர் பயணத்தில்

பங்கெடுக்கும் பாக்கியங்கள்

பிறவியின் பெருஞ்சுமையைக்

கரைந்துருகச் செய்கிறது !

 

இதயத்தினில் நிய்யத்திடும்

இருள்நீங்கும் புத்தொளியாய்

இறையருளின் நாட்டங்கள்

கஅபாவின் சந்தித்தலைக்

கண்ணீர்ப் பிராவகங்களோடு

மெய்சிலிர்க்கச் செய்கிறது !

 

ஐம்பெரும் கடமைகளில்

ஐக்கியம் கொண்டிருந்து

ஐயத்தோடு துடிதுடிக்கும்

ஆத்மத்தின் இறையச்சம்

இம்மையில் பொறுமைபூத்து

மறுமையில் அமைதி காத்து

மட்டற்ற மகிழ்ச்சியோடு

மகத்தான சுவனத்தினுள்

மெளனமாய் நுழைகிறது !

 

உலகளாவிய உள்ளங்கள்

ஒன்றிணைந்த இல்லத்தினில்

தீன்நெறியின் பற்றுதலாய்

நன்றி சொல்லிச் சுற்றுகின்ற

கண்கொள்ளாத தேடலினில்

ஹஜ் பெருநாள் மிளிர்கிறது !

 

நன்றி :

இனிய திசைகள்

செப்டம்பர் 2014

Tags: ,

Leave a Reply