பிளாஸ்டிக்

அறிவியல் அதிசயங்கள்

K.A. ஹிதாயத்துல்லா  M.A.,B.Ed.,M.Phil.,

 

உலகெங்கும் கண்டுபிடிக்கப்படும் அறிவியல் படைப்புக்களை தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம்.

பழைய பிளாஸ்டிக் பயனுள்ள எரிபொருளாக மாறும் அதிசயம்

எங்கெங்கு காணினும் சக்தியடா என்று பாடிய பாரதியார் தற்போது இருந்திருந்தால் எங்கெங்கு காணினும் பிளாஸ்டிக்கடா என்று பாடியிருப்பார். அந்தளவுக்கு பிளாஸ்டிக் பொருள்கள் நம் வாழ்வோடு ஒன்றிணைந்து விட்டன. அலங்கார பொருட்கள், குடம், வாளி, குளிர்பானம் மற்றும் குடிநீர் பாட்டில்கள், கேரிபேக் என பொருட்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பயன்படுத்தப்பட்ட பழைய பிளாஸ்டிக் பொருட்களை எடைக்கும் போட்டு காசாக்குவதில் ஆர்வம் காட்டும் நாம், அந்த பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்பட்டோ அல்லது மண்ணில் புதையுண்டோ பன்மடங்கு சுற்றுச்சூழலைப் பாதிப்பது பற்றி துளியும் கவலைப்படுவதே இல்லை. பெருங்கடலின் தீவுக் கூட்டங்கள் போலக்குவிந்து கிடக்கும் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் நீர், நிலம், காற்று போன்றவற்றை மாசுபடுத்துகின்றன. இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இதோ ஓர் பயனுள்ள அறிவியல் கண்டுபிடிப்பு.

“பிளாஸ்ட்” என்ற ஜப்பானிய நிறுவனத்தை சேர்ந்த அகினோரி இடோ என்ற விஞ்ஞானி பழைய பிளாஸ்டிக்கை பயனுள்ள எரிபொருளாக மாற்றும் எளிய இயந்திரத்தைக் கண்டறிந்துள்ளார். இந்த இயந்திரத்தை சிறிய அளவில் தயாரித்து வீடுகளிலும், பெரிய அளவில் தயாரித்து தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தலாம். அகினோரி இடோ கண்டுபிடித்த இந்த இயந்திரம் ஒரு கிலோ பழைய பிளாஸ்டிக்கை ஒரு லிட்டர் கசடு எண்ணெய்யாக (Crude Oil) மாற்றுகிறது. இக்கசடு எண்ணெயிலிருந்து நாம் பெட்ரோல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவைப் பிரித்தெடுக்கலாம். ஒரு லிட்டர் எரிபொருள் எண்ணெய் தயாரிக்க ஒரு கிலோவாட் மின்சக்தியை இந்த இயந்திரம் எடுத்துக் கொள்கிறது.

மேலும், இந்நிகழ்வின் போது சூழலைப்பாதிக்கும் கார்பன்டை        ஆக்‌ஷைடு வாயுவை இது வெளியிடுவதில்லை. இவ்வியந்திரத்தில் பிளாஸ்டிக்கை உருக்க நெருப்பிற்குப் பதிலாக மின் சூடாக்கி (Electric Heater) பயன்படுத்தப்பட்டுள்ளது. பாலிதீன், பாலிஸ்டீரின் மற்றும் பாலிபுரோபிலீன் போன்ற எந்த பிளாஸ்டிக் கழிவையும் இது விட்டு வைப்பதில்லை. அனைத்து வகை பிளாஸ்டிக் கழிவுகளையும் இது எரிபொருளாக மாற்றுகிறது. சபாஷ் சூப்பர் கண்டுபிடிப்பு என நீங்கள் கூறுவது காதில் விழுகிறது.

Tags: 

Leave a Reply